Saturday, March 14, 2015

"நோய் உங்கள் நண்பன் - 3"



"நோய் உங்கள் நண்பன் - 3" - உணவு சில கருத்துக்கள்!
1. எந்த ஒரு இலை, காய், கனி, விதை, பருப்பு, தானியம் மற்றும் வேரை சமைக்காமல் அப்படியே உண்ண முடிகிறதோ அவை மட்டுமே தேவையான உணவாக எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் உடலால் ஏற்று கொள்ளப்படும்.
2. அப்படி சமைக்காமல் நம்மால் எவ்வளவு உண்ண முடிகிறதோ அந்த அளவே சரியான அளவாக உடலால் ஏற்று கொள்ளப்படும். சில உணவுகளை வயிர் நிறையும் அளவு உண்ண முடியும், சில உணவுகள் மிகுதியான சுவையின் காரணமாக போதும் என்ற எண்ணம் தோன்ற தொடங்கி விடும்.
3. எந்த ஒரு உணவையும் அதன் இயற்கை தன்மை மாறாமல் ( சமைக்காமல், அரைக்காமல், ..), அல்லது குறைந்த மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு உட்கொள்ளும் போது அவற்றின் முழுப்பயன்/ அதிகப்படியான பயன் கிடைக்கும்.
4. சமைக்காத உணவை உண்ணும் போது அவற்றில் சத்துக்களை தேடியோ, திட்டமிட்டோ உண்ண வேண்டிய அவசியமில்லை, எந்த ஒரு உணவையும் தவிர்க்காமல், விரும்பும் நேரத்தில்(பசித்து), விரும்பும் அளவில் உணவை உட்கொள்ளலாம்.
5. பசிக்காமல் எந்த ஒரு உணவையும் உட்கொள்ளாமல் இருந்தாலே ஆரோக்கியம் பெருகி, நோய் அகலும். இதையே திருவள்ளுவர்,
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
என்கிறார். மருந்து அதிகாரத்தில் உள்ள பெரும்பான்மையான குறள்கள் இதையே வலியுறுத்துகின்றன.
6. லேசான சுவையுள்ள, நீர்சத்து அதிகம் உள்ள, எளிமையான உணவுகளையே இயற்கை தத்துவம் சிறந்த நேர்மறை உணவு ( Positive Food) என்கிறது, இத்தகைய உணவுகள் நம் அன்றாட வாழ்வில் அதிகம் இருத்தல் நலம்.
7. உடலுக்கு தேவையான உணவுகள் அதிகம் கொடுக்கும் அதே நேரத்தில் மனதிற்கு பிடித்த உணவுகளையும் சிறிது கொடுத்து வருவது உடலும், மனமும் இணக்கமாக செயல்படுவதற்கு உதவும், அத்தகைய உணவுகளை உட்கொள்ளும் போது அவை சரியாக செரித்து வெளியேறும் வரை பிற உணவுகளை உட்கொள்ளாமல் இருத்தல் நலம்.
(அடுத்த பகுதியிலும் உணவை பற்றிய குறிப்புகள் தொடரும்)
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
-தொடரும்
பின் குறிப்பு: டாக்டர் அருண் சர்மா அவர்கள் விதைத்த இயற்கை வாழ்வியல்/ மருத்துவம் குறித்த கருத்துக்களின் தாக்கம் மற்றும் அவருக்கு நன்றி செய்யும் முயற்சியின் விளைவு தான் இந்த தொடர் கட்டுரை.

"நோய் உங்கள் நண்பன்" - 2



"நோய் உங்கள் நண்பன்" - நோயற்ற வாழ்விற்கும், நோயிலுருந்து விடுபடுவதற்குமான வழி!
மனித உடல் உட்பட பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளும் வெளி(Space), வளி(Air), ஒளி(Light), நீர்(Water), நிலம்(Land) ஆகிய பஞ்சபூதங்களினால் ஆனவை. எப்படி மரத்தினாலான ஒரு உடைந்த நாற்காலியை மரத்துண்டை வைத்து மட்டும் தான் சரியாக சீரமைக்க முடியுமோ, அதே போல பஞ்ச பூதங்களினாலான இந்த உடலையும் அவற்றை கொண்டு மட்டும் தான் சரியான முறையில் சீரமைக்க முடியும். இன்றளவிலும் மனிதன் தவிர்த்த அனைத்து உயிரினங்களும் தங்கள் உடலை நோயிலிருந்து பாதுகாப்பதற்கும், நோயற்ற வாழ்வை வாழ்வதற்குமான தற்சார்பை(Sustainability) பெற்றுள்ளது, மனிதன் சூழல்(Environment) மற்றும் வாழ்வூக்கம் ( Life Instinct) ஆகிய இயற்கை விதிகளிலிருந்து பெருமளவு விலகி சென்றதின் விளைவே இன்று காணப்படும் எண்ணற்ற மருத்துவ முறைகளும் ( Medicinal Systems), மருந்துகளும், ஒன்று தொட்டு ஒன்றாக நோயிலிருந்து விடுபட முடியா செயன்முறை நிலையும்( Recursive State), வாழக்கூடிய சுழலை சரி செய்து கொள்வதன் மூலமும், இழந்த வாழ்வூக்கத்தை( Life Instinct) திரும்ப பெறுவதின் மூலமும் மனிதன் நோயிலிருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வை வாழும் தற்சார்பை அடைய முடியும்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
-தொடரும்
பின் குறிப்பு: டாக்டர் அருண் சர்மா அவர்கள் விதைத்த இயற்கை வாழ்வியல்/ மருத்துவம் குறித்த கருத்துக்களின் தாக்கம் மற்றும் அவருக்கு நன்றி செய்யும் முயற்சியின் விளைவு தான் இந்த தொடர் கட்டுரை.
image credits: www.parliament.uk

"நோய் உங்கள் நண்பன்"



பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தன்னை தானே சீர்படுத்தி/காப்பாற்றி கொள்ளும் நுண்ணறிவோடு(Creative Intelligence) படைத்துள்ளது இயற்கை, இதற்கு மனித உடலும் விதி விலக்கல்ல. பொதுவாக நோய் என்பது நம் உடலின் இயலாமையை/ உடலியக்கத்தின் தோல்வியாகவே மருத்துவ உலகால் பார்க்கப்படுகிறது, ஆனால் இயற்கை தத்துவத்தின் படி நம் உடலில் உள்ள அழுக்குகளை வெளிக்கொணரவும், உடல் மற்றும் உயிர்க்கு ஏற்பட்ட சேதத்தை சரி படுத்தவும், மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உயிர் செய்ய கூடிய அப்பழுக்கற்றமுயற்சி தான் நோய். பெரும்பாலான மருத்துவ முறைகள் அந்த முயற்சியை தடை செய்ய முற்படுகிறதே(Symptomatic Treatment) தவிர அந்த முயற்சி எதற்காக(Root Cause) உயிரால் எடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. பொதுவாக வாந்தி, பேதி, சளி மற்றும் வலி போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் அவற்றை மூடி மறைக்கவே(suppressant) கொடுக்கப்படுகிறது, அவற்றை சீர் படுத்த அல்ல, அப்படி மூடி மறைக்க(suppress) செய்யப்படும் முயற்சிகள் உடலில் இருந்து கழிவுகள் வெளிவருவதையும், அந்த நோயை சீர்படுத்த உயிர் செய்யும் முயற்சியையும் தடுத்து அதுவே பின்னாளில் அந்த நோய் வலுப்பெற்று அதே வடிவிலோ வேறு ஒரு நோயாகவோ வெளிப்பட காரணமாக அமைந்து விடுகிறது.
சரி எப்படி நோயில்லாமல் வாழலாம்?
இயற்கை தத்துவத்தின் படி ஆரோக்கியத்தை பெருக்குவதே நோயிலிருந்து விடுபடும் வழி. ஆரோக்கியத்தை பெருக்கும் முயற்சி உடலின் மொழியை புரிந்து அவற்றுக்கு பதிலளிப்பதில் இருந்து தொடங்குகிறது, நான் புரிந்து கொண்ட பத்து கட்டளைகளை உங்களுக்காக பகிர்கிறேன்,
1. பசித்து புசிப்பது.
2. இயற்கையின் தன்மை மாறாத உணவுகளை உண்பது.
3. தாகத்தை உணர்ந்து அதற்கு தகுந்த அளவு தண்ணீர் குடிப்பது.
4. உடல் சோர்வடையும் போது தகுந்த ஓய்வளிப்பது.
5. சரியான அளவு தூங்குவது.
6. சூரிய ஒளி உடலில் பட அனுமதிப்பது.
7. உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது.
8. உடலின் அனைத்து பாகங்களும் இயங்கும் வகையில் உடற்பயிற்சி செய்வது.
9. செய்யும் வேலையை முழு மனதுடன் செய்வது .
10. மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
-தொடரும்
பின் குறிப்பு: டாக்டர் அருண் சர்மா அவர்கள் விதைத்த இயற்கை வாழ்வியல்/ மருத்துவம் குறித்த கருத்துக்களின் தாக்கமும், அவருக்கு நன்றி செய்யும் முயற்சியின் விளைவு தான் இந்த கட்டுரை.