Showing posts with label சுதந்திரம். Show all posts
Showing posts with label சுதந்திரம். Show all posts

Wednesday, August 15, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 3!

நாடு வேறு, நாட்டை ஆள்பவர்கள் வேறு. நாட்டை ஆள்பவர்கள் புனிதர்களாக இல்லாமல் சராசரி மனிதர்களாக இருந்து விட்ட காரணத்தின் விளைவே இன்றைய அனைத்து அவலங்களும். இந்த நிலையில் இல்லாமல் இருந்தால், அல்லது வேறு நிலையில் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்பது வாதத்திற்கு மிக சிறந்த காரணி, மனித இயல்பு, அனால் உண்மை? 100 % வாழ்வதற்கு சிறந்த இடம், சிறந்த வழி, சிறந்த கலாச்சாரம் என்று எதையாவது குறிப்பிட முடியுமா? இயற்கை விதிகளினால் இம்மண்ணின் மைந்தர்கள் படைக்கப்பட்டவர்கள் நாம், இந்த நாட்டில் உள்ள குறைகளை களைவது, நம் உடம்பில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோயை அணுகும் நேர்த்தியோடு இருக்க வேண்டுமே தவிர, அதை விட்டு சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவிப்பது பல லட்சம் பேரின் தியாகத்தை கொச்சை படுத்தும் செயலாகும். நிகழ் கால சமுக போராளிகள், கடந்த கால போராளிகளின் தியாகத்தை இப்படி அணுகுவது ஆரோக்யமானதல்ல! நோக்கங்கள் நல்லதற்காக இருந்தாலும் அதை செயல்படுத்தும் வழிமுறை தவறாகும் போது சராசரி மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போவோம். 

முடிந்தால் சிந்தியுங்கள்!

சுதந்திர தின வாழ்த்துக்கள்!


அன்புடன்,
V . S . வினோத் குமார் 

Monday, May 14, 2012

அடிமை இந்தியாவின் வழிதொடர்தலும், பரி பூரண சுதந்திரமும்!




           இருபது மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டு, சூரியன் என்ற ஓற்றை அச்சில் சுழன்று வந்த இந்த புராதான உலகம், சிறிது சிறிதாக அதன் அச்சில் இருந்து விலகி, பணம், பதவி படைத்த பல லட்சம்  மனிதர்களை  அதன் அச்சுகளாக்கி கொண்டு செயல் பட ஆரம்பித்த நூற்றாண்டு. வாழ்கைக்கு தேவையான பொருளாதரத்தை தேடும் பயணத்தில், வாழ்க்கையின் சாராம்சமான ஒழுக்கம், உண்மை, நேர்மை, குடும்பம், மனிதம் போன்றவற்றை சிறிது சிறிதாக சிதைத்து, இறுதியாக வாழ்க்கையையே தொலைக்கும் கலையை மனிதனுக்கு கற்று தந்த நூற்றாண்டு. தனி மனிதர்களின், நான் என்ற சிந்தனையில் சிக்கி, உண்மைகள் பொய்ய்யாக்கப்படுவதும், தத்துவங்கள் மழுங்கடிக்கப்படுவதும், நீதிகள் அநீதிகளாக்கப்படுவதும் இங்கு அன்றாட நிகழ்வுகள். விசலாமாக இருந்த புரிதலின் எல்லைகள் சுருங்கி, துவண்டு, அன்றாட அர்த்தங்கள் கூட அதிசயங்களாக பார்க்கப்படும் வேடிக்கை இங்கு வாடிக்கை. 

          அடிமைத்தனம் மற்றும் சுதந்திரம் என்பது என்னுடைய  நாடு மற்றும் அதன் அடையாளங்களின் மீதானது என்ற விசாலாமான பார்வை சுருங்கி, இன்று நான், என்னுடைய விருப்பு அல்லது வெறுப்பு என்ற அளவில்  அதன் உண்மையான அர்த்தத்தை இழந்து கொண்டிருப்பது  பகுத்தறிவின் மரண போராட்டம்.  நம்முடைய ரத்தமும் சதையுமான சொந்த அடையாளங்களை அடகு வைத்து விட்டு, ஒரு காலத்தில் நம்முடைய ரத்தம் சிந்த சிந்த திணிக்கப்பட்ட அந்நிய அடையாளங்களை, நம்முடைய அடையாளங்களாக நம்பி கொண்டிருப்பது  இன்னும் நம் ரத்தத்தில் இருந்து வெளியேறாமல் இருக்கும் அடிமை இந்தியாவின் வழிதொடரல்கள்.      

                 தாய் மொழியில்  பேசுவதை  மரியாதை குறைவாக  நினைப்பதும், ஆங்கில மொழியில் பேசுவது உயர்குடி  மக்களின் அடையாளமாக பார்க்கபடுவதும்தாய் மொழியில், ஆங்கில மொழி கலப்பு  தவிர்க்க இயலாத  ஒன்றாக நம்பபடுவதும், ஒரே மொழி பேசுபவர்கள் கூடி பேசும் போதும் கூட, தங்கள் தாய் மொழியை தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடுவதும், லட்சகணக்கான உலகத்தரம் வாய்ந்த படைப்புகள் தாய்  மொழியிலயே இருக்க, அவற்றை முற்றிலுமாக உதாசினபடுத்தி விட்டு, வணிக நோக்கத்துடன் பிரபலபடுத்தபட்ட ஒரு சில ஆங்கில படைப்புக்களை சுற்றி விட்டில் பூச்சிகளாய் திரிவதும், வழி வழியாக வந்த, இயல்பான, சுவாரஸ்யமான நம் சொந்த மண்ணின் விளையாட்டுகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு, ஏழை முதலாளிகளும், பசியால் வாடும் விளையாட்டு வீரர்களும் தங்கள் வறுமையை போக்கி கொள்ள நடத்தப்படும் கிரிகெட்டின் மேல் தீரா காதல் கொண்டிருப்பதும், நமக்கான கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை முற்றிலுமாக மறந்து, துறந்து அந்நிய மோகினியின் போதையில் மயங்கி கிடப்பதும், அடிமை இந்தியாவின் வழிதொடரல்கள் இன்னும் முற்று பெறவில்லை என்பதின்  வெளிப்டையான அடையாளங்கள்.

          நம் சொந்த அடையாளங்களான மொழி, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், தொழில், இயற்கை வளம் ஆகியவற்றை மன நிறைவோடு ஏற்று, பாதுகாத்து, அவற்றில் உள்ள பகுத்தறிவில்லாத, ஒவ்வாத கருத்துகளை சீர்படுத்தி,  இன்றைய உலகத்திற்கான மாற்றங்களை புகுத்தி சிறப்புற செய்பவனே சுதந்திர மனிதன்.  நம்மால் நம்  அடையாளங்களும், நம் அடையாளங்களால் நாமும் செம்மை அடைவதே பரி பூரண சுதந்திரத்திற்கான ஒரே வழி. 

          அடிமை இந்தியாவின் வழிதொடர்தலை வேரறுத்து, பரி பூரண சுதந்திரம் என்னும் வரலாற்றின் முதல் எழுத்தை எழுதிடுவோம்.

பின் குறிப்பு: இந்த கட்டுரை தமிழில் எழுதபட்டிருப்பது எனது அடையாளமாக தமிழ் இருக்கும் காரணத்தால் மட்டுமே, இதில் உள்ள வாதங்கள் அந்நிய மொழி மற்றும் மோகத்தின் பிடியில் சிக்கி இருக்கும் அனைத்து மொழியினருக்கும் பொதுவானவையே.

அன்புடன்
வி.  எஸ்.  வினோத் குமார்.

Thursday, January 19, 2012

வாழ்க ஜனநாயகம்!


பிறப்பால் ஜனநாயக இந்தியாவின் தவபுதல்வர்கள் நாம், வாழ்வதோ காங்கிரஸ் என்ற துப்பு கெட்ட, ஆண்மை அற்ற, வக்கிர புத்திகாரர்களின் கூட்டமைப்பின் ராணுவ ஆட்சியில்; மரியாதையைக்குறிய அடிமைகளாக! வெள்ளையனின் அடிமைகளாக இருந்த போது கூட நம்மிடம் தன்மானமும், சுய புத்தியும் மிச்சம் இருந்தது, காங்கிரஸ் என்னும் துப்பு கெட்டவர்களின் அடிமையாக வாழும் நமக்கு இழப்பதற்கு என்ன இருக்கிறது? எத்தனை ஊழல்கள் செய்தாலும், எத்தனை முறை கேடுகள் நடந்தாலும், அரசியல் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து தங்களை பரிசுத்ததன்மை மிக்கவர்களாகவும், தூய்மையின் மொத்த குத்தகைகாரர்களாகவும் காட்டி கொள்வதில் காங்கிரஸ் தலைவர்களை மிஞ்ச இதுவரை, இல்லை, இல்லை; இனிமேலும் யாரும் பிறக்க முடியாது! அப்படியே இதை எல்லாம் மீறி ஒரு பிரச்சனை வந்தால், காந்தியின் பின்னாலோ, அல்லது இன்றைய காங்கிரஸ் தலைவர்களின் முயற்சியில் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது போன்ற ஒரு மாயையை உருவாக்கியோ, தப்பித்து கொள்ளும் ஆண் மகன்களின் கூட்டமைப்பு தான் இந்த காங்கிரஸ் கட்சி. நீங்கள் ஒரு தனி மனிதனாகவோ, சமூக எழுச்சி அமைப்பாகவோ இருந்து காங்கிரஸின் எதாவது ஒரு தவறை சுட்டிகாட்டுங்கள் பார்க்கலாம், நீங்கள் விடுதலை புலியாகவோ, மதவாத அமைப்பாகவோ, நக்சலாகவோ, அந்நிய சக்தியாகவோ சித்தரிக்கபடுவது நிச்சயம், ஒரு வேளை காங்கிரசுக்கு எதிரான உங்கள் குற்றச்சாட்டு கடுமையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வேற்று கிரக சதிகாரகளாக கூட சித்தரிக்க படலாம்! வாழ்க ஜனநாயகம்


-வி. எஸ். வினோத் குமார்

Tuesday, August 16, 2011

சுதந்திரம் கொண்டாடுவதற்கு அல்ல!


1806 'ல் வேலூர் கோட்டையில் ஆரம்பித்து நூற்றிநாற்பது வருடங்களுக்க மேலாக இலட்சகணக்கான உயிர் தியாகத்தில் கிடைத்தது சுதந்திரம்,  நாற்பது கோடி இந்தியர்களின் அடிமை சங்கிலியை உடைத்து எறிந்ததின் மூலம் கிடைத்தது சுதந்திரம், கிட்டதட்ட ஓராயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டு, அசிங்கப்பட்டு கிடந்த ஒரு இனத்தை சுய கவுரவத்தோடு வாழ வைத்தது சுதந்திரம் , ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்ற மஹாகவியின் ஆதங்கத்தை ஏற்று ஒவ்வொரு இந்தியனும் வேற்றுமைகளை மறந்து  ஓரணியில் நின்று போராடி கிடைத்தது சுதந்திரம், ஆயுத பலத்தின் மூலம் உலகை வென்று விட முடியும் என்ற வளர்ந்த நாடுகளின் அகங்காரத்தை, மகாத்மா என்ற ஒரு தனி மனிதரின் அகிம்சை என்ற தொலைநோக்கு சிந்தனையால் தவிடு பொடியாக்கி வென்றெடுத்தது சுதந்திரம்,  இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் விடுதலை வேட்கையோடு, உயிரை துச்சமாக மதித்து, பின் வரும் சந்ததியாவது விடுதலை இந்தியாவில் வாழ வேண்டும் என்ற ஏக்கத்தில் பிறந்தது சுதந்திரம்,  வீழ்ந்தோம், எழுவோம்,  வீழ்ந்தோம், எழுவோம், ஒரு முறை வீழ ஒன்பதாய் எழுவோம், விஸ்வரூபம் எடுப்போம் என்று மண்ணில் மடிந்து வீழ்ந்தவரெல்லாம் விதைகளாய் மாறி போராடி போராடி கிடைத்தது சுதந்திரம்.
அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து அந்நிய நாட்டு பணத்துக்கும், கேளிக்கை களியாட்டங்களுக்கும் தனது சூடான இளம் இரத்தத்தை அடிமைபடுத்தி கொண்டுள்ள ஒரு சமுதாயம், பணத்தை தேடி ஓடி ஓடி குடும்பத்தையும், வாழ்கையும், சமுகத்தையும் மறந்து மரத்து போன ஒரு சமுதாயம், பிறரின் நஷ்டத்தில் இலாபம் தேடி கொள்கின்ற ஒரு சமுதாயம், சுதந்திரத்தின் மூலம் ஒன்றிணைந்த வேற்றுமைகளை அரசியல் இலாபத்திற்காக மறுபடியும் பிரித்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம்,  பதவி மற்றும் பண பலத்தின் மூலம் நாட்டையே முட்டாளாக்கி சுவிஸ் வங்கியில் இலட்சம் கோடிகளாக பணத்தை சேர்த்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம், ஒரு வேலை உணவுக்கு திண்டாடி, பிறந்ததே பூமிக்கு பாரம் என்றெண்ணி தினம் தினம் வறுமையாலும், பசியாலும் போராட தெம்பில்லாமல் உயிரை முடித்து அநாதை பிணங்களாக மாற காத்திருக்கும் அதே நாற்பது கோடி இந்தியர்கள் கொண்டஒரு சமுதாயம் !

இதற்காகவா இத்துணை உயிர் தியாகங்கள்? இதற்காகவா இத்துணை போரட்டங்கள்?  இது தானா சுதந்திரத்தின் போது இருந்த நாற்பது கோடி இந்தியர்களின் ஏக்கம்? இது தானா சுதந்திர உணர்வோடு, உயிரை துச்சமாக எண்ணி நமக்காக போரடியர்வர்களுக்கு நாம் தரும் பரிசு? 

என்ன வளம் இல்லை நம் நாட்டில், உலகத்திற்கே படி அளக்கும் அளவுக்கு விவசாய நிலங்களையும், அள்ள அள்ள குறையாத மனித சக்தியையும், அறவியல் அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், கனிம வளங்களையும், உலகமே போற்ற கூடிய குடும்ப அமைப்பையும், வாழ்வியல் நெறிகளையும், ஆன்மிகத்தையும் வைத்து கொண்டு சில லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் அந்நிய நாட்டிற்கு அடிமை பட்டு தான் ஆக வேண்டுமா? நம் நாட்டில் ஒரு சமுக எழுச்சியை ஏற்படுத்தி பல கோடி சுதந்திர போராளிகளின் கனவுகளை நனவாக்க முடியாதா? நாற்பது கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை சீர்தூக்க முடியாதா? கட்டுகடங்கா பொருளாதார வேற்றுமைகளை தகர்த்தெறிய முடியாதா? அந்நிய முதலீடு என்ற பெயரில் நடக்கும் ஆட்டுழியங்களை வெளிச்சம் போட்டு காட்ட முடியாதா? இளமை துடிப்பை கேளிக்கைக்கும், பணத்திற்கும் அடிமை ஆக்காமல் சமூக எழுச்சிக்கும், நாட்டின் வளர்சிக்கும் முதலீடு செய்வோம்.

தாய் நாட்டையும் , தாய் மொழியையும் நேசிப்போம்! ஒன்றிணைவோம், சுதந்திரத்தை உணர்வோடு கொண்டாடுவோம்!

சுதந்திர தின வாழ்த்துகள்! ஜெய் ஹிந்த்!

அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்