இருபது மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டு, சூரியன் என்ற ஓற்றை அச்சில் சுழன்று வந்த இந்த புராதான உலகம், சிறிது சிறிதாக அதன் அச்சில் இருந்து விலகி, பணம், பதவி படைத்த பல லட்சம் மனிதர்களை அதன் அச்சுகளாக்கி கொண்டு செயல் பட ஆரம்பித்த நூற்றாண்டு. வாழ்கைக்கு தேவையான பொருளாதரத்தை தேடும் பயணத்தில், வாழ்க்கையின் சாராம்சமான ஒழுக்கம், உண்மை, நேர்மை, குடும்பம், மனிதம் போன்றவற்றை சிறிது சிறிதாக சிதைத்து, இறுதியாக வாழ்க்கையையே தொலைக்கும் கலையை மனிதனுக்கு கற்று தந்த நூற்றாண்டு. தனி மனிதர்களின், நான் என்ற சிந்தனையில் சிக்கி, உண்மைகள் பொய்ய்யாக்கப்படுவதும், தத்துவங்கள் மழுங்கடிக்கப்படுவதும், நீதிகள் அநீதிகளாக்கப்படுவதும் இங்கு அன்றாட நிகழ்வுகள். விசலாமாக இருந்த புரிதலின் எல்லைகள் சுருங்கி, துவண்டு, அன்றாட அர்த்தங்கள் கூட அதிசயங்களாக பார்க்கப்படும் வேடிக்கை இங்கு வாடிக்கை.
அடிமைத்தனம் மற்றும் சுதந்திரம் என்பது என்னுடைய நாடு மற்றும் அதன் அடையாளங்களின் மீதானது என்ற விசாலாமான பார்வை சுருங்கி, இன்று நான், என்னுடைய விருப்பு அல்லது வெறுப்பு என்ற அளவில் அதன் உண்மையான அர்த்தத்தை இழந்து கொண்டிருப்பது பகுத்தறிவின் மரண போராட்டம். நம்முடைய ரத்தமும் சதையுமான சொந்த அடையாளங்களை அடகு வைத்து விட்டு, ஒரு காலத்தில் நம்முடைய ரத்தம் சிந்த சிந்த திணிக்கப்பட்ட அந்நிய அடையாளங்களை, நம்முடைய அடையாளங்களாக நம்பி கொண்டிருப்பது இன்னும் நம் ரத்தத்தில் இருந்து வெளியேறாமல் இருக்கும் அடிமை இந்தியாவின் வழிதொடரல்கள்.
தாய் மொழியில் பேசுவதை மரியாதை குறைவாக நினைப்பதும், ஆங்கில மொழியில் பேசுவது உயர்குடி மக்களின் அடையாளமாக பார்க்கபடுவதும், தாய் மொழியில், ஆங்கில மொழி கலப்பு தவிர்க்க இயலாத ஒன்றாக நம்பபடுவதும், ஒரே மொழி பேசுபவர்கள் கூடி பேசும் போதும் கூட, தங்கள் தாய் மொழியை தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடுவதும், லட்சகணக்கான உலகத்தரம் வாய்ந்த படைப்புகள் தாய் மொழியிலயே இருக்க, அவற்றை முற்றிலுமாக உதாசினபடுத்தி விட்டு, வணிக நோக்கத்துடன் பிரபலபடுத்தபட்ட ஒரு சில ஆங்கில படைப்புக்களை சுற்றி விட்டில் பூச்சிகளாய் திரிவதும், வழி வழியாக வந்த, இயல்பான, சுவாரஸ்யமான நம் சொந்த மண்ணின் விளையாட்டுகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு, ஏழை முதலாளிகளும், பசியால் வாடும் விளையாட்டு வீரர்களும் தங்கள் வறுமையை போக்கி கொள்ள நடத்தப்படும் கிரிகெட்டின் மேல் தீரா காதல் கொண்டிருப்பதும், நமக்கான கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை முற்றிலுமாக மறந்து, துறந்து அந்நிய மோகினியின் போதையில் மயங்கி கிடப்பதும், அடிமை இந்தியாவின் வழிதொடரல்கள் இன்னும் முற்று பெறவில்லை என்பதின் வெளிப்டையான அடையாளங்கள்.
நம் சொந்த அடையாளங்களான மொழி, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், தொழில், இயற்கை வளம் ஆகியவற்றை மன நிறைவோடு ஏற்று, பாதுகாத்து, அவற்றில் உள்ள பகுத்தறிவில்லாத, ஒவ்வாத கருத்துகளை சீர்படுத்தி, இன்றைய உலகத்திற்கான மாற்றங்களை புகுத்தி சிறப்புற செய்பவனே சுதந்திர மனிதன். நம்மால் நம் அடையாளங்களும், நம் அடையாளங்களால் நாமும் செம்மை அடைவதே பரி பூரண சுதந்திரத்திற்கான ஒரே வழி.
அடிமை இந்தியாவின் வழிதொடர்தலை வேரறுத்து, பரி பூரண சுதந்திரம் என்னும் வரலாற்றின் முதல் எழுத்தை எழுதிடுவோம்.
பின் குறிப்பு: இந்த கட்டுரை தமிழில் எழுதபட்டிருப்பது எனது அடையாளமாக தமிழ் இருக்கும் காரணத்தால் மட்டுமே, இதில் உள்ள வாதங்கள் அந்நிய மொழி மற்றும் மோகத்தின் பிடியில் சிக்கி இருக்கும் அனைத்து மொழியினருக்கும் பொதுவானவையே.
அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்.
No comments:
Post a Comment