Tuesday, August 16, 2011

சுதந்திரம் கொண்டாடுவதற்கு அல்ல!


1806 'ல் வேலூர் கோட்டையில் ஆரம்பித்து நூற்றிநாற்பது வருடங்களுக்க மேலாக இலட்சகணக்கான உயிர் தியாகத்தில் கிடைத்தது சுதந்திரம்,  நாற்பது கோடி இந்தியர்களின் அடிமை சங்கிலியை உடைத்து எறிந்ததின் மூலம் கிடைத்தது சுதந்திரம், கிட்டதட்ட ஓராயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டு, அசிங்கப்பட்டு கிடந்த ஒரு இனத்தை சுய கவுரவத்தோடு வாழ வைத்தது சுதந்திரம் , ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்ற மஹாகவியின் ஆதங்கத்தை ஏற்று ஒவ்வொரு இந்தியனும் வேற்றுமைகளை மறந்து  ஓரணியில் நின்று போராடி கிடைத்தது சுதந்திரம், ஆயுத பலத்தின் மூலம் உலகை வென்று விட முடியும் என்ற வளர்ந்த நாடுகளின் அகங்காரத்தை, மகாத்மா என்ற ஒரு தனி மனிதரின் அகிம்சை என்ற தொலைநோக்கு சிந்தனையால் தவிடு பொடியாக்கி வென்றெடுத்தது சுதந்திரம்,  இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் விடுதலை வேட்கையோடு, உயிரை துச்சமாக மதித்து, பின் வரும் சந்ததியாவது விடுதலை இந்தியாவில் வாழ வேண்டும் என்ற ஏக்கத்தில் பிறந்தது சுதந்திரம்,  வீழ்ந்தோம், எழுவோம்,  வீழ்ந்தோம், எழுவோம், ஒரு முறை வீழ ஒன்பதாய் எழுவோம், விஸ்வரூபம் எடுப்போம் என்று மண்ணில் மடிந்து வீழ்ந்தவரெல்லாம் விதைகளாய் மாறி போராடி போராடி கிடைத்தது சுதந்திரம்.
அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து அந்நிய நாட்டு பணத்துக்கும், கேளிக்கை களியாட்டங்களுக்கும் தனது சூடான இளம் இரத்தத்தை அடிமைபடுத்தி கொண்டுள்ள ஒரு சமுதாயம், பணத்தை தேடி ஓடி ஓடி குடும்பத்தையும், வாழ்கையும், சமுகத்தையும் மறந்து மரத்து போன ஒரு சமுதாயம், பிறரின் நஷ்டத்தில் இலாபம் தேடி கொள்கின்ற ஒரு சமுதாயம், சுதந்திரத்தின் மூலம் ஒன்றிணைந்த வேற்றுமைகளை அரசியல் இலாபத்திற்காக மறுபடியும் பிரித்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம்,  பதவி மற்றும் பண பலத்தின் மூலம் நாட்டையே முட்டாளாக்கி சுவிஸ் வங்கியில் இலட்சம் கோடிகளாக பணத்தை சேர்த்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம், ஒரு வேலை உணவுக்கு திண்டாடி, பிறந்ததே பூமிக்கு பாரம் என்றெண்ணி தினம் தினம் வறுமையாலும், பசியாலும் போராட தெம்பில்லாமல் உயிரை முடித்து அநாதை பிணங்களாக மாற காத்திருக்கும் அதே நாற்பது கோடி இந்தியர்கள் கொண்டஒரு சமுதாயம் !

இதற்காகவா இத்துணை உயிர் தியாகங்கள்? இதற்காகவா இத்துணை போரட்டங்கள்?  இது தானா சுதந்திரத்தின் போது இருந்த நாற்பது கோடி இந்தியர்களின் ஏக்கம்? இது தானா சுதந்திர உணர்வோடு, உயிரை துச்சமாக எண்ணி நமக்காக போரடியர்வர்களுக்கு நாம் தரும் பரிசு? 

என்ன வளம் இல்லை நம் நாட்டில், உலகத்திற்கே படி அளக்கும் அளவுக்கு விவசாய நிலங்களையும், அள்ள அள்ள குறையாத மனித சக்தியையும், அறவியல் அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், கனிம வளங்களையும், உலகமே போற்ற கூடிய குடும்ப அமைப்பையும், வாழ்வியல் நெறிகளையும், ஆன்மிகத்தையும் வைத்து கொண்டு சில லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் அந்நிய நாட்டிற்கு அடிமை பட்டு தான் ஆக வேண்டுமா? நம் நாட்டில் ஒரு சமுக எழுச்சியை ஏற்படுத்தி பல கோடி சுதந்திர போராளிகளின் கனவுகளை நனவாக்க முடியாதா? நாற்பது கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை சீர்தூக்க முடியாதா? கட்டுகடங்கா பொருளாதார வேற்றுமைகளை தகர்த்தெறிய முடியாதா? அந்நிய முதலீடு என்ற பெயரில் நடக்கும் ஆட்டுழியங்களை வெளிச்சம் போட்டு காட்ட முடியாதா? இளமை துடிப்பை கேளிக்கைக்கும், பணத்திற்கும் அடிமை ஆக்காமல் சமூக எழுச்சிக்கும், நாட்டின் வளர்சிக்கும் முதலீடு செய்வோம்.

தாய் நாட்டையும் , தாய் மொழியையும் நேசிப்போம்! ஒன்றிணைவோம், சுதந்திரத்தை உணர்வோடு கொண்டாடுவோம்!

சுதந்திர தின வாழ்த்துகள்! ஜெய் ஹிந்த்!

அன்புடன்
வி. எஸ். வினோத் குமார் 

No comments:

Post a Comment