செல்வி ஜெயலலிதாவும், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி ஏற்றாகிவிட்டது, முப்பத்தி நான்கு பேர் கொண்ட ஒரு வலிமையான அமைச்சரவை நமது மாநிலத்தில் உருவாக்கபட்டிருகிறது. சட்டம் படித்த ஒருவரிடம் சட்டத்துறை ஒப்படைக்கப்படவில்லை என்பதை தவிர மற்ற அனைத்து துறைகளும் தகுதியானவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பெரும்பாலானோர் நம்புகின்றனர். பெரும்பாலான அமைச்சர்கள் புது முகங்களாக இருப்பது ஆட்சியிலும் புதுமைகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் படித்த ஒருவரிடம் சட்டத்துறை ஒப்படைக்கபடாதது சிறிய ஏமாற்றத்தை கொடுத்தாலும், அது சரியான முடிவா, தவறான முடிவா என்பதை அவரது செயல்பாடுகளை பார்த்த பிறகு தான் நம்மால் உணர்ந்திட முடியும். எந்த வித கல்வி தகுதியும் இல்லாமல், ஈடு இணையற்ற ஆளுமை திறனுடன், மக்கள் தேவையை சரியாக புரிந்து நலத்திட்டங்களை தீட்டிய மகான்கள் வாழ்ந்த நாட்டில் நாம் இருப்பதால் இதை ஒரு பெரிய தவறாக கருத வேண்டிய அவசியம் இல்லை. எல்லா நிகழ்வுகளும் சரியாக நடக்கும் போதும் ஆங்காங்கே சில சில நெருடல்கள் இருக்க தான் செய்கிறது, நெஞ்சை நிமிர்த்தி மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய அமைச்சர்கள், கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்பு தலை வணங்கி அறிமுகம் செய்து கொள்ளும் கலாச்சாரம் இன்னும் நம் நாட்டுக்கு தேவையா? நெஞ்சை நிமிர்த்தி, சுய கவுரவத்துடன் மரியாதையை செலுத்தும் வழக்கத்தை யார் இவர்களுக்கு சொல்லி தருவது? என்று பதவி ஏற்பு விழாவை கண்ட எந்த ஒரு தன்மானமுள்ள தமிழனும் வேதனை கொண்டிருப்பான். எதிர் கட்சி தலைவராக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவரது பணியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை, தமிழக வாக்காளர்கள் அவர் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கையின் மூலம் நமக்கும் தொற்றி கொள்கிறது. தினகரன், முரசொலி போன்ற தி.மு.க சார்ந்த ஊடகங்கள் தவிர அனைத்து ஊடகங்களும் இந்த கூட்டணியின் வெற்றியை கொண்டாடுவது எதோ அந்நிய சக்தியின் பிடியில் இருந்து நாடு விடுதலை அடைந்ததை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஊடகங்களின் இந்த ஒற்றுமை நமக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அடுத்து வர போகும் நாட்களில், இவை ஆளும் கட்சியின் ஜால்ராவாக மாறாமல் கண்ணியத்தோடும், சுய கவுரவத்துடனும் செயல் பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்களின் சார்பாக இந்த தொடரின் மூலம் வைக்க கடமை பட்டுள்ளோம். நல்லதொரு சட்டசபை உருவாகி விட்டது, அடுத்து என்ன? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தானே! சரி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்துவதுக்காக கொடுக்கபட்டவையா? அப்படி இல்லை என்றால் அவற்றில் எத்தனை வாக்குறுதிகளை குப்பையில் போடலாம்? வாக்குறுதிகளை நிறைவேற்றும் அளவுக்கு கஜானாவில் பணம் உள்ளதா? வாக்குறுதிகளில் இருப்பதை தவிர வேறு என்ன என்ன மக்கள் பிரச்சனைகள் உள்ளது? தனி மனித பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்துவதுக்காக என்ன என்ன செயல் திட்டங்கள் நடைமுறை படுத்த இருக்கிறது? விலைவாசி உயர்வு கட்டுபடுத்த படுமா? மின் உற்பத்தி பெருக்கப்படுமா? மீனவர் நலன் காக்கப்படுமா? பல ஆண்டுகளாக தீர்க்கபடாமல் இருக்கும் மாநில அளவிலான நதி நீர் பிரச்சனையும், சர்வதேச அளவிலான ஈழ தமிழர் பிரச்சனையும் இந்த அரசாங்கத்தின் மூலம் தீர்வு எட்டப்படுமா? இப்படி எண்ணில் அடங்கா கேள்விகள் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கணையாய் துளைத்து கொண்டு இருக்கிறது.
- மேலும் பேசுவோம்...
அன்புடன்,
வினோத் குமார்.
கருத்துகள் வரவேற்கபடுகிறது!
No comments:
Post a Comment