Wednesday, September 6, 2017

முடிந்தால் சிந்தியுங்கள் - NEET, CMC & சமவாய்ப்பு!

நண்பர் வட்டத்தில் உள்ள சிலர் CMC'யில் கிறிஸ்துவர்களுக்கு அதிக இடங்களை அளிப்பதை அயோக்கியத்தனம் என்று விமர்சித்திருந்தனர் - பிராமணனுக்கு மட்டுமே வீடு என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமோ அதே அளவு அல்லது  அவர்கள் பார்வையில் இருந்து பார்க்கும் பொழுது  அதை விட பெரிய அயோக்கியத்தனம் தான் இது, அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை - எப்படி பிராமணனுக்கு மட்டும் வீடு தருவதற்கு இவர்கள் நியாய தர்மங்கள் வைத்துளார்களோ அதே போல அவனும் எதோ ஒரு நியாய தர்மத்தை வைத்து இருப்பான் என்பதில் சந்தேகமில்லை..    ஆனால் இங்கு பிரச்சனை அது இல்லை - சார்பற்ற நிலையில் தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய சம வாய்ப்பை அளிக்க தவறும் அரசாங்கமும், அரசு எந்திரமும் தான் பிரச்சனை. 

நான் தமிழ் வழியில் வொகேஷனல் பாட பிரிவில் படித்து  தமிழ் நாடு நுழைவு தேர்வின் வழியாக என்.ஐ.டி(NITT) திருச்சியில் பொறியியல் படித்தவன் - என்னுடைய Batch தான் தமிழ் நாடு நுழைவு தேர்வின் மூலம் என்.ஐ.டி யில் சேர்ந்த கடைசி Batch.  என்னுடைய Batchல் பலர் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் இருந்து தன் சுய முயற்சியாலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியாலும், தொண்டு நிறுவனங்கள் உதவியாலும் படித்தவர்கள் பலர், சாப்பிடவும்,  கல்லூரி கட்டணம் கூட கட்ட முடியாத நிலையில் சிறு சிறு வேலைகள் செய்தும், கடன் வாங்கியும் படித்தவர் பலர், ஒன்று இரண்டு வரி கூட ஆங்கிலம் பேச தெரியாமல்(என்னையும் சேர்த்து) திக்கி திணறியவர்கள் பலர் - இவர்கள் யாருமே எந்த விதத்திலும் unfit கிடையாது, அவர்களுக்கான மிக குறைந்த வசதிகளையும், வாய்ப்புகளையும்  கொண்டு சிறப்பான இடத்தை அடைந்தவர்கள் அவர்கள் - இன்று அவர்கள்  அனைவரும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக துறையில் சிறப்பான ஒரு இடத்தை அடைந்துள்ளனர் அவர்களை சார்ந்தவர்களும் நல்லதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எங்களுக்கு அடுத்த batchல் இருந்து அகில இந்திய நுழைவு தேர்வு மூலம் கல்லூரியில் சேர்ந்தவர்கள், அந்த batchல் பெரும்பகுதி நகர வாசிகளாகவும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் திறமை பெற்றவர்களாகவும், பெரும்பாலும் மேல் தட்டு சமூகத்தை சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள், எளிமையாக சொல்ல வேண்டுமானால்   நுழைவு தேர்வுக்காக சிறப்பான ஒரு பயிற்ச்சி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பும் வசதியும் பெற்றவர்கள் மட்டுமே கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள் - இதனால் கல்வியின் தரம் உயர்ந்து விட்டது, நாடு முன்னேறி விட்டது என்றெல்லாம் வெற்று  கோஷம் போடாதீர்கள் - அரசு பணத்தில் படித்த பெரும்பாலானோர் (எங்கள் batchயும்  சேர்த்து) Corporate நிறுவனங்களுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும் லாபம் சம்பாதித்து கொடுப்பதில் தங்கள் தூக்கத்தையும், வாழ்க்கையும் இழந்து கொண்டிருப்பதை தவிர  பெரிதாக ஒன்றையும் கிழித்து விடவில்லை.       

சமூக நீதி என்பது சாதிய ரீதியாக மட்டும் சுருங்கி விடாமல் சாதியம், வாழ்க்கை சூழல், பொருளாதார நிலை போன்ற பல்வேறு காரணீகளையும் உள்வாங்கி விரிவடைந்தால் நிச்சயம் மிக துல்லியமான, சர்ச்சைகளற்ற சமூக நீதியை நோக்கி நகர முடியும்.   

*அலோபதி கல்வி பற்றி எனக்கு துளி அளவும் உடன்பாடில்லாவிட்டாலும் சமூக நீதி என்ற அடிப்படையில் இதை பற்றி பேசுவது அவசியமாகிறது.

#NEET #CMC #Natural_Justice #Equal_Opportunity #All_India_Entrance #Anitha 

No comments:

Post a Comment