Showing posts with label முடிந்தால் சிந்தியுங்கள். Show all posts
Showing posts with label முடிந்தால் சிந்தியுங்கள். Show all posts

Wednesday, September 6, 2017

பாஜகவின் அரசியல்!

சாதாரண குடி மக்களுக்குள் கூச்சல், குழப்பம் விளைவிப்பது, பிரித்தாள்வது, வெறுப்புணர்வை தூண்டுவது - தொலைக்காட்சி விவாதங்களில் சம்பந்தம் இல்லாமல் கத்தி ஆட்டத்தை கலைக்க முயல்வது, மற்றவர்களின் கருத்தை கேட்க விடாமல் கத்தி கொன்டே இருப்பது - அதை கண்டிப்பவர்களையும், எதிர் கருத்துடையவர்களையும் சர்வ சாதாரணமாக நீ தேச விரோதி என்பது - இவ்வளவு தான் பாஜக வின் அரசியல்.
CMC'ல் கிறிஸ்துவர்களுக்கு முக்கியத்துவம், கிறிஸ்துவர்களுக்கு முக்கியத்துவம் என்று ஒரு மிக பெரிய கொலை குற்றத்தை, தேச விரோதத்தை செய்ததை போல பாஜகவை சேர்ந்த ஒருவர் நேற்றைய நேர்பட பேசுவில் கத்தி கொண்டிருந்தார் - மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் அமைப்பால் வெளிப்படையாக வழங்கப்பட்ட ஒரு உரிமையை ஒரு கொலை குற்றத்தை போல சித்தரித்து மக்களை தூண்டும் வேலையை செய்தது அப்பட்டமாக தெரிந்தது. அவர் இந்த உரிமையை பற்றி கண்டிப்பாக அறிந்தவர் ஆனால் திட்டமிட்டு பார்வையாளர்களை manipulate செய்கிறார். மக்களுக்கான அரசியல் பேசாமல் இந்த மாதிரியான மட்டமான தந்திரங்கள் மூலம் எதை சாதிக்க போகிறீர்கள்?

Rights of Minority Educational Institutions: 


முடிந்தால் சிந்தியுங்கள் - NEET, CMC & சமவாய்ப்பு!

நண்பர் வட்டத்தில் உள்ள சிலர் CMC'யில் கிறிஸ்துவர்களுக்கு அதிக இடங்களை அளிப்பதை அயோக்கியத்தனம் என்று விமர்சித்திருந்தனர் - பிராமணனுக்கு மட்டுமே வீடு என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமோ அதே அளவு அல்லது  அவர்கள் பார்வையில் இருந்து பார்க்கும் பொழுது  அதை விட பெரிய அயோக்கியத்தனம் தான் இது, அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை - எப்படி பிராமணனுக்கு மட்டும் வீடு தருவதற்கு இவர்கள் நியாய தர்மங்கள் வைத்துளார்களோ அதே போல அவனும் எதோ ஒரு நியாய தர்மத்தை வைத்து இருப்பான் என்பதில் சந்தேகமில்லை..    ஆனால் இங்கு பிரச்சனை அது இல்லை - சார்பற்ற நிலையில் தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய சம வாய்ப்பை அளிக்க தவறும் அரசாங்கமும், அரசு எந்திரமும் தான் பிரச்சனை. 

நான் தமிழ் வழியில் வொகேஷனல் பாட பிரிவில் படித்து  தமிழ் நாடு நுழைவு தேர்வின் வழியாக என்.ஐ.டி(NITT) திருச்சியில் பொறியியல் படித்தவன் - என்னுடைய Batch தான் தமிழ் நாடு நுழைவு தேர்வின் மூலம் என்.ஐ.டி யில் சேர்ந்த கடைசி Batch.  என்னுடைய Batchல் பலர் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் இருந்து தன் சுய முயற்சியாலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியாலும், தொண்டு நிறுவனங்கள் உதவியாலும் படித்தவர்கள் பலர், சாப்பிடவும்,  கல்லூரி கட்டணம் கூட கட்ட முடியாத நிலையில் சிறு சிறு வேலைகள் செய்தும், கடன் வாங்கியும் படித்தவர் பலர், ஒன்று இரண்டு வரி கூட ஆங்கிலம் பேச தெரியாமல்(என்னையும் சேர்த்து) திக்கி திணறியவர்கள் பலர் - இவர்கள் யாருமே எந்த விதத்திலும் unfit கிடையாது, அவர்களுக்கான மிக குறைந்த வசதிகளையும், வாய்ப்புகளையும்  கொண்டு சிறப்பான இடத்தை அடைந்தவர்கள் அவர்கள் - இன்று அவர்கள்  அனைவரும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக துறையில் சிறப்பான ஒரு இடத்தை அடைந்துள்ளனர் அவர்களை சார்ந்தவர்களும் நல்லதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எங்களுக்கு அடுத்த batchல் இருந்து அகில இந்திய நுழைவு தேர்வு மூலம் கல்லூரியில் சேர்ந்தவர்கள், அந்த batchல் பெரும்பகுதி நகர வாசிகளாகவும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் திறமை பெற்றவர்களாகவும், பெரும்பாலும் மேல் தட்டு சமூகத்தை சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள், எளிமையாக சொல்ல வேண்டுமானால்   நுழைவு தேர்வுக்காக சிறப்பான ஒரு பயிற்ச்சி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பும் வசதியும் பெற்றவர்கள் மட்டுமே கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள் - இதனால் கல்வியின் தரம் உயர்ந்து விட்டது, நாடு முன்னேறி விட்டது என்றெல்லாம் வெற்று  கோஷம் போடாதீர்கள் - அரசு பணத்தில் படித்த பெரும்பாலானோர் (எங்கள் batchயும்  சேர்த்து) Corporate நிறுவனங்களுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும் லாபம் சம்பாதித்து கொடுப்பதில் தங்கள் தூக்கத்தையும், வாழ்க்கையும் இழந்து கொண்டிருப்பதை தவிர  பெரிதாக ஒன்றையும் கிழித்து விடவில்லை.       

சமூக நீதி என்பது சாதிய ரீதியாக மட்டும் சுருங்கி விடாமல் சாதியம், வாழ்க்கை சூழல், பொருளாதார நிலை போன்ற பல்வேறு காரணீகளையும் உள்வாங்கி விரிவடைந்தால் நிச்சயம் மிக துல்லியமான, சர்ச்சைகளற்ற சமூக நீதியை நோக்கி நகர முடியும்.   

*அலோபதி கல்வி பற்றி எனக்கு துளி அளவும் உடன்பாடில்லாவிட்டாலும் சமூக நீதி என்ற அடிப்படையில் இதை பற்றி பேசுவது அவசியமாகிறது.

#NEET #CMC #Natural_Justice #Equal_Opportunity #All_India_Entrance #Anitha 

Tuesday, November 5, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 11!

இன்றைய சுழலில் நாகரிகம் என நம் சமூகம் சிந்திப்பது அனைத்துமே எதொ ஒரு விதத்தில் கன்சுயுமரிச சிந்தனைகளை நமக்குள் விதைப்பவைகளாக தான் இருக்கின்றன. 

மனிதர்களை ஆழ்ந்து நேசிக்க கூடிய மனநிலை சுருங்கி, தேவையின் அடிப்படையிலான நட்பு, உறவு, காதல் என்ற கன்சுயுமரிச மனநிலை சமூகத்தின் நிச்சயத்தன்மையை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றன. பெருகி வரும் முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் காப்பகங்களும், விவாகரத்து வழக்குகளும், ப்ரேக் அப்களும், துரோகங்களும், ரோட்டோர பிச்சைக்காரர்களும், அநாதை பிணங்களும், வன்ப்புணர்வுகளும் இதைத்தான் நமக்கு சொல்லி கொண்டிருக்கின்றன.

கார்ப்பரேட்களும், மீடியாக்களும் சேர்ந்து கட்டமைக்கும் நாகரிகங்களை தூக்கி சாக்கடையில் வீசி விட்டு, நாகரிகமான மனிதர்களாக சக மனிதர்களை நேசிப்போம்.

முடிந்தால் சிந்தியுங்கள்.

Tuesday, April 2, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 10!




விலைவாசிகளை அதிகரிப்பதிலும்;

பொருளாதார இடைவெளியை விரிவுப்படுத்துவதிலும்;

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதிலும்;

மக்களை பொருள் நெருக்கடியில் சிக்க வைத்து அவர்களை இயங்க விடாமல் செய்வதிலும்;

வளர்ச்சி என்ற மாயையை கொண்டு மனிதத்தை சிதைப்பதிலும்;

சுற்றுச்சுழலை  பாழ்படுத்துவதிலும்;

அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஊழல்வாதிகளாக  மாற்றுவதிலும்;

நேர்மையாக இயங்க விரும்பும் வெகு சிலரையும்  இல்லாமல் செய்வதிலும்;

தங்கள் விருப்பு, வெறுப்பு, லாப நஷ்டத்திற்காக சட்டங்களை வலைப்பதிலும்;

அநியாயமான நியாயங்களை வகுப்பதிலும்;

நீதி கேட்டு நடக்க கூடிய போராட்டங்களை சிதைப்பதிலும்;

அந்நிய சக்திகளுக்காக இந்தியாவை தாரை வார்த்து கொடுப்பதிலும்;

இந்த பெரு முதலாளிகளின் கை ஓங்கி கொண்டே இருக்கிறது.          




அதிக அளவிலான குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களை  உருவாக்குவதன் மூலம் பெருமளவு மக்களை பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு விட முடியும், அதே நேரத்தில் கட்டுக்கடங்கா சக்திகளையும், அதிகாரங்களையும் குவித்து வைத்திருக்க கூடிய இந்த பெரு முதலாளிகளை அடித்து விரட்டி விட முடியும்.

பல ஆயிரம் வருடங்களாக நம் மரபணுவில் பதிந்து விட்ட அடிமை செல்களை  உடைத்தெறிந்து இதை நம்மால் சாத்தியப்படுத்தி விட முடியுமா?

முடிந்தால் சிந்தியுங்கள்!

Monday, January 14, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 9: தைத்திருநாளும், சில வரிகளும்!

முடிந்தால் சிந்தியுங்கள் - தைத்திருநாளும், சில வரிகளும்! 

மனித நாகரிகத்தின் முதல் விதை, மனித சமூகம் மற்றும் அனைத்து தொழில்களையும் தனது கருவறையில் சுமந்து, பெற்று, வளர்த்தெடுத்த தாய், விவசாயம்!

தாயின் துணை கொண்டு மனித சமூகத்தை வளர்த்தெடுக்கவும், பாதுகாக்கவும் தன்னையே அர்பணித்த "தாயின் தவப்புதல்வன்", விவசாயி! 

நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது. ஆனால் வெளியில் சொல்ல தான் வாய் கூசுகிறது. மாபெரும் விந்தை!

என் தாயிற்கும், என் பாதுகாவலனுக்கும் என் நாகரிகத்தை கொண்டு நான் அளித்த பரிசு என்ன தெரியுமா?

மரபணு மாற்ற விதைகள், ரசாயன உரங்கள், பாசன நீர் தட்டுப்பாடு, பல்லுயிர் சூழலை கெடுத்து மலடாக்க பட்ட விளை நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கும் விளை நிலங்கள், விலை பொருட்களுக்கு அடிமட்ட விலை நிர்ணயம், பசி, பட்டினி, அடைக்க முடியா கடன்கள், நகரத்தை நோக்கிய வாழ்வாதார தேடல்கள், வாழ்வாதரதிர்க்காக பிற தொழிலின் கூலிகளாக மாற்றப்படுதல்,  இறுதியாக தற்கொலைகள், இல்லை இல்லை, சமூக கொலைகள். வெட்கக்கேடு!

அதோடு நின்று விட்டோமா?

அவ்வளவு நல்லவர்களா நாம்! படிக்காதவனின் தொழில், அடித்தட்டு மக்களின் தொழில், மதிப்பில்லா தொழில்; இது தானே அவர்களை பற்றிய சமூகத்தின் பார்வை. உண்மை தான், சமூகம் நிச்சயமாகவே கோமாளிகளின் கூட்டமைப்பு தான்!

பல லட்சம் ஆண்டுகளாக நீண்ட, நெடியதொரு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் மனித சமூகம், அந்த பயணத்தின் முடிவின் காரணி என்னவாக இருக்க முடியும்?

தனி மனித மனசாட்சிகளால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சமூகத்தின் மனசாட்சிகளுக்கு ஆணித்தரமாகவே அது தெரியும். விவசாய புறக்கணிப்பு, விவசாயிகள் அழிப்பு!

மிக கொடூர எதிரியோ, வேற்று கிரக வாசிகளோ, கொலைக்கார ஆயுதங்களோ தேவைப்படாது. மாபெரும் உணவு பஞ்சமும் , நஞ்சாகி போன உணவு பொருட்களையும் கொண்டு மனித இனமே தன்னை அழித்து கொள்ளும். வேடிக்கை!

முடிந்தால் விவசாயத்தையும், விவசாயிகளையும் அரவணைக்கவும், ஆதரிக்கவும், வளர்த்தெடுக்கவும் தொடங்குவோம். இல்லையேல் மனித சமூகத்தின் கடைசி நாட்களுக்காக நம்மை ஆயுத்தப்படுத்தி கொள்வோம்!

தைத்திருநாள் வாழ்த்துக்களை இப்பொழுதாவது சொல்லி விட தான் மனம் நினைக்கிறது, என்ன செய்ய அதை சொல்ல விடமால் மனசாட்சி தடுக்கிறது!

முடிந்தால் சிந்தியுங்கள்!

Monday, December 24, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 8!

குற்றமும் தண்டனையும் 

உலகில் நடைபெறும் அனைத்து குற்றங்களும் ஒரே காரணத்திற்காகவோ, நோக்கத்திற்காகவோ செய்ய படுபவை அல்ல, இதை புரிந்து  கொள்ளவே  தயாராய் இல்லாத வரை அவற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவோ, அல்லது குற்றங்களை தடுத்து நிறுத்தவோ முடியும் என்று நினைப்பது சிறு பிள்ளைத்தனம். 

தவறுகளுக்கான தண்டனைகளை பற்றி பேசுவதில் நாம் காட்டும் ஈடுபாடு அவை நடை பெறாமல் இருக்கவும் , நடை பெரும் பட்சத்தில் நம்மை தற்காத்து கொள்ளவும்  செய்ய வேண்டியவனைவற்றை பற்றி பேசுவதில் இல்லை , பிறகொரு குற்றம் நடக்கையில் திரும்ப கொடி பிடிக்க தொடங்கி விடுகிறோம் - இந்த மன நிலையை வைத்து கொண்டு  நாம் எதை தான் சாதித்து விட முடியும்? 

குற்றங்கள் வானத்தில் இருந்து நேராக  மனித மனங்களில் டௌன்லோட் செய்ய படுவதாக கற்பனை செய்வதை சற்று மறு பரிசிலனை செய்வோம், அவை கண்டிப்பாக நோய் பிடித்த ஒரு  சமூகத்தின் மூலம் மனித மனங்களில் பரவிய தொற்று நோயாக  தான் இருக்க முடியும், மன நோய்கள் மூலம் செய்ய படும் குற்றங்களுக்கும், சமூகத்திற்கு ஒரு மிக பெரிய  பங்கு இருப்பதை எந்த மன நல மருத்துவராலும்  மறுத்து விட முடியாது.  தனி மனித ஒழுக்கம் தொடங்கி அரசியல் சாசனம் வரை பரவி இருக்கும் நோய் கிருமிகளை  மேலும் வளராமல் நிறுத்தி வைக்கவும் , ஒட்டு மொத்தமாக அழிக்கவும், மீண்டும் பாதிக்காமல்  தடுக்கவும் வேண்டியவற்றை  செய்ய வேண்டிய கட்டாயம்  மனிதம் பற்றி சிந்திக்க தயாராய் உள்ள ஒவ்வொருவருக்கும்  உள்ளது. நோயற்ற சமூகத்தில் வலி நிவாரணிகள்  வழகொழிந்து போகும் என்பது நிதர்சனம். விதைக்காமல், விளைவதை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை, தனி மனிதர்களாகவும், சமூகமாகவும் நல் விதைகளை முதலில் விதைத்து  விட்டு நல்லதொரு சமூக மாற்றத்திற்காக காத்திருக்க தொடங்குவோம்!    

தண்டனைகள் வலி நிவாரணிகள் மட்டுமே நோய்க்கான  காரணங்களையும் அவை  ஏற்படாமல் தற்காத்து கொள்வதை பற்றியும் சிறிது பேசி வைப்போம்!  

முடிந்தால் சிந்தியுங்கள்!     

Wednesday, November 21, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 7



தண்டனை என்பது சட்டபூர்வமாக பழிக்கு பழி வாங்கும் படலம் மட்டுமே என புரிந்து கொள்பவர்களுக்கு கசாப்பின் தூக்கு நியாயமான ஒன்றாய் தான் இருக்க முடியும்! கசாப்பின் தூக்கு நம் பழி வாங்கும் உணர்வுகளுக்கும், அரசியல்வாதிகளின் வாக்கு வங்கிகளுக்கும் வேண்டுமானால் நியாயம் செய்யுமே  தவிர  தீவிரவதத்தையோ, வன்முறையையோ குறைக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஏமாளியாகவே வைத்திருக்க செய்யப்படும்  பூச்சிக்காட்டல் மட்டுமே.   

மரண தண்டனைக்கு எதிரான நிலை என்பது மனிதத்திற்கு ஆதரவான நிலை தானே தவிர மரண தண்டனை குற்றவாளிக்கு ஆதரவான நிலை இல்லை. சட்டபடி குற்றமான ஒன்றை சட்டமே செய்யும் போது குற்றமில்லை என்ற அபத்தத்தின் சிறந்த உதாரணம் மரண தண்டனை! 

மரண தண்டனைகளை ஒழிப்போம், மனிதனாக முயற்சிப்போம்.  

முடிந்தால் சிந்தியுங்கள்! 

Tuesday, November 6, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 6!



அறிவியல் வளர்ச்சி என்பது  என்ன ?

மக்களின் அடிப்படை தேவைகளுக்கான கண்டுபிடிப்புகள், சமகால பிரச்சனைகளுக்கான தீர்வுகள், இயற்கைக்கும் , மனிதத்திற்கும்  பக்க விளைவுகள் ஏற்படுத்தாத வகையிலான மாற்று கண்டுபிடிப்புகள் ஆகியவையா அல்லது அறிவியல் தன்னை தானே கண்டுபிடித்து வளர்த்து கொள்வதா? 

அறிவியல் சார்ந்து சிந்திக்க கற்று கொண்டுள்ள அறிவியல் வல்லுனர்களுக்கு  மனிதம் சார்ந்து சிந்திக்க கற்று கொடுக்கப்பட்டுள்ளதா!

வியாபார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறப்பாக செயல்பட தெரிந்த பெரும்பாலான அறிவியல் வல்லுனர்களுக்கு இயற்கைகாகவும் மனிதத்திர்காகவும் சிந்திக்க நேரம் இல்லாமல் போய் விட்டதா?

முடிந்தால் சிந்தியுங்கள்!