Monday, January 14, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 9: தைத்திருநாளும், சில வரிகளும்!

முடிந்தால் சிந்தியுங்கள் - தைத்திருநாளும், சில வரிகளும்! 

மனித நாகரிகத்தின் முதல் விதை, மனித சமூகம் மற்றும் அனைத்து தொழில்களையும் தனது கருவறையில் சுமந்து, பெற்று, வளர்த்தெடுத்த தாய், விவசாயம்!

தாயின் துணை கொண்டு மனித சமூகத்தை வளர்த்தெடுக்கவும், பாதுகாக்கவும் தன்னையே அர்பணித்த "தாயின் தவப்புதல்வன்", விவசாயி! 

நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது. ஆனால் வெளியில் சொல்ல தான் வாய் கூசுகிறது. மாபெரும் விந்தை!

என் தாயிற்கும், என் பாதுகாவலனுக்கும் என் நாகரிகத்தை கொண்டு நான் அளித்த பரிசு என்ன தெரியுமா?

மரபணு மாற்ற விதைகள், ரசாயன உரங்கள், பாசன நீர் தட்டுப்பாடு, பல்லுயிர் சூழலை கெடுத்து மலடாக்க பட்ட விளை நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கும் விளை நிலங்கள், விலை பொருட்களுக்கு அடிமட்ட விலை நிர்ணயம், பசி, பட்டினி, அடைக்க முடியா கடன்கள், நகரத்தை நோக்கிய வாழ்வாதார தேடல்கள், வாழ்வாதரதிர்க்காக பிற தொழிலின் கூலிகளாக மாற்றப்படுதல்,  இறுதியாக தற்கொலைகள், இல்லை இல்லை, சமூக கொலைகள். வெட்கக்கேடு!

அதோடு நின்று விட்டோமா?

அவ்வளவு நல்லவர்களா நாம்! படிக்காதவனின் தொழில், அடித்தட்டு மக்களின் தொழில், மதிப்பில்லா தொழில்; இது தானே அவர்களை பற்றிய சமூகத்தின் பார்வை. உண்மை தான், சமூகம் நிச்சயமாகவே கோமாளிகளின் கூட்டமைப்பு தான்!

பல லட்சம் ஆண்டுகளாக நீண்ட, நெடியதொரு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் மனித சமூகம், அந்த பயணத்தின் முடிவின் காரணி என்னவாக இருக்க முடியும்?

தனி மனித மனசாட்சிகளால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சமூகத்தின் மனசாட்சிகளுக்கு ஆணித்தரமாகவே அது தெரியும். விவசாய புறக்கணிப்பு, விவசாயிகள் அழிப்பு!

மிக கொடூர எதிரியோ, வேற்று கிரக வாசிகளோ, கொலைக்கார ஆயுதங்களோ தேவைப்படாது. மாபெரும் உணவு பஞ்சமும் , நஞ்சாகி போன உணவு பொருட்களையும் கொண்டு மனித இனமே தன்னை அழித்து கொள்ளும். வேடிக்கை!

முடிந்தால் விவசாயத்தையும், விவசாயிகளையும் அரவணைக்கவும், ஆதரிக்கவும், வளர்த்தெடுக்கவும் தொடங்குவோம். இல்லையேல் மனித சமூகத்தின் கடைசி நாட்களுக்காக நம்மை ஆயுத்தப்படுத்தி கொள்வோம்!

தைத்திருநாள் வாழ்த்துக்களை இப்பொழுதாவது சொல்லி விட தான் மனம் நினைக்கிறது, என்ன செய்ய அதை சொல்ல விடமால் மனசாட்சி தடுக்கிறது!

முடிந்தால் சிந்தியுங்கள்!

No comments:

Post a Comment