Wednesday, June 12, 2013

இயற்கையை போற்றி வளர்த்திடுவோம்!

காகித கப்பில் டீ குடித்து
பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் அருந்தி
தெர்மாகோல் ப்ளேட்டில் சோறுண்டு
கேரி பேக்கில் பொருள் வாங்கி
ஏ சி ரூமில் படுத்துறங்கி
சாயப்பூ உடையணிந்து
கார்பன் மோனக்சைட்டில் பயணித்து
சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டி
செவிக்கிழிய பேசிடுவோம் - இயற்கையை
போற்றி வளர்த்திடுவோம்!

தூப்புக்காரி !

வார்த்தைகளால் ஜாலம் செய்யாமல்,போலியான விறு விறுப்புகளுக்காக மெனக்கெடாமல்; வலிகளையும், ரணங்களையும் கொண்டு மெய் சிலிர்க்க
வைத்து விட்டார் மலர்வதி. நெஞ்சில் கணத்தையும், விழிகளில் ஈரத்தையும் சர்வ சாதாரணமாக ஏற்படுத்தக்கூடியவள் இந்த தூப்புக்காரி; இறுதி
பக்கங்களில் வாழைப்பழத்தில் உசியை இறக்குவது போல் இலகுவாக உங்கள் உயிரில் வலியை இறக்கி விடுவாள்.

இரா. நடராசனின் ஆயிஷாவிற்கு பிறகு என்னை நிலை குலைய வைத்த மலர்வதியின் இந்த தூப்புக்காரி கேள்விகள் ஏதும் இன்றி கொண்டாடப்பட வேண்டியவள் தான்..

விதையிலுருந்து மரம்!

பாபநாசத்தில் பூவுலகின் நண்பர்கள் நடத்திய விதையிலுருந்து மரம் பயிற்சி பட்டறை இயற்கையின் மீதான காதலை மேலும் தீவிரப்படுத்தி விட்டது.

சென்னை திரும்பிய நிமிடத்திலிருந்தே அடுத்து எப்படா இப்படி இயற்க்கையோடு கொஞ்சி, குலாவி காதலை வளர்ப்பது என ஏக்கமாக இருக்கிறது; பூகம்பமே வந்தாலும் எட்டு மணி வரை அசையாத ஒருவன் (வேற யாரு நான் தான்) இப்படி நாலு மணிக்கே எழுந்து உக்காந்து விட்டத்த பார்த்து  யோசிச்சா என்ன அர்த்தம் ?! - பியார் முத்தி போச்சு.

#உண்மை காதலுக்கு உதவ காத்திருப்போர் கவனத்திற்கு!

பின் குறிப்பு: எனக்கு தெரிஞ்சு இன்னும் இயற்க்கைன்னு எல்லாம் எந்த பொண்ணுக்கும் பேர் வைக்கல - எதையாவது கெளப்பி விட்டுடாதிங்க பாஸ்.

எல்லாம் வல்ல இயற்கை!

ஒரு நல்லவர் மூன்று மாதங்களில் சென்னையில் குப்பையையே பார்க்க முடியாது என அறிவித்தார் - ஒரு வருடத்திற்கு முன்பு! இந்த உலக சுற்று சுழல்
தினத்திலாவது அவருக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி கொள்கிறேன்..

எது பார்ப்பனீயம்!

பாக்கியம் ராமசாமி எழுதிய "அப்புசாமியும் ஹிப்னாடிச பூனையும்" படித்து கொண்டு இருந்தேன், நல்ல நகைச்சுவையோடும், சுவாரஸ்யமாகவும்,
விறுவிறுப்பாகவும் அமைந்திருந்த கதைக்களம் புத்தகத்தை கீழே வைக்கவே அனுமதிக்கவில்லை; திடீரென கதையின் கடைசி பக்கங்களில் தேச விரோத
சக்திகள், புலிகள், பிரபாகரன் என சம்பந்தமே இல்லாமல் கதை கரைபுரண்டி ஓட ஆரம்பித்தது. இதற்கு பெயர் தான் பார்ப்பனீயம் போல என நொந்து
கொண்டேன்.

ஆதார் அட்டையும்; கழண்ட டவுசரும்!

செத்தாலும் ஆதார் அட்டை வாங்க கூடாது என தீர்க்கமாய் இருந்தவனை, பிறந்த நாள் என்றும் பாராமல் ஆதார்க்கு போட்டோ எடுத்து வந்தால் தான்
சோறு என மிரட்டியதால் வேறு வழி இன்றி அவசர அவசரமாய் குளித்து பொடி நடையாக நடந்து மையத்தை அடைந்தேன், சரி சட்டு புட்டுன்னு
முடிச்சிட்டு கிளம்பிடலாம்னு பார்த்தா ஒரு ஐம்பது, அறுபது பேர் எனக்கு முன்னாடியே துண்ட விரிச்சி உக்காந்திருக்காய்ங்க, அதிலும் ஒரு சிலர்

என்னவோ ஷங்கர் படத்துல நடிக்க சான்ஸ் கேட்டு வந்தவய்ங்க மாதிரி புல் மேக்கப்போட ஆஜர் ஆயிருந்தாங்க. நிலைமையை நொந்து கொண்டே ஒரு
கியூவில் போய் நின்றேன்.

போன வாரம் செம கூட்டம்ல, இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல. ஒரு அக்கா உற்சாகத்துடன் சொல்லி கொண்டிருந்தாள்.

இந்த டாமி எப்பவுமே இப்படி தான் கூடவே வந்து தொல்ல பண்ணும். ஏய் ஓடு.. தன் செல்ல பிராணியை துரத்தி கொண்டிருந்தாள் இன்னொரு அக்கா.

பையன் ஊரிலுர்ந்து இப்ப தான் வந்தான், முகம் கழுவ போயிருக்கான். இதோ வந்துடுவான். அங்கு இருந்த ஒரு ஆபிசரிடம் சொல்லி கொண்டிருந்தாள்
பாட்டி ஒருத்தி.

மொதல லெப்ட் கைய வைக்கணும் அப்பறம் ரைட் கைய வைக்கணும் அப்பறம் பெரு விரல் ரெண்டையும் வைக்கணும் அப்பறம் அந்த பைனாகுலர்ல

பாக்கணும். அவ்வளவுதான். ஒரு வயதான பாட்டிக்கு விளக்கி கொண்டிருந்தார் சீனியர் ஒருவர் (ஆமாங்க நமக்கு முன்னாடியே எடுத்துட்டார்ல அப்ப சீனியர் தானே)

தம்பி தலைய நேரா வச்சு இந்த கேமராவ பாரு. முகத்த மேல தூக்கு, கண்ண மூடாத. ஒழுங்க ஒக்காரு. நீண்ட நேரமாக ஒரு சுட்டி சிறுவனிடம்
மன்றாடி கொண்டிருந்தார் ஒரு ஆபீசர்.

யோவ் எனக்கு பின்ன தானே வந்த நீ பாட்டுக்கு முன்ன போற.
அண்ணே அவரு பேஷெண்ட்.
அதுக்கு நான் என்ன பண்றது போய் கியூல வாங்க. எனக்கும் தான் உடம்பு சரி இல்ல.
போங்க போய் கியூல வாங்க.. வந்துட்டானுங்க @#$%^&*():"(பின்னாடி இருந்த அனைவரும் கோரஸாக)
வெற்றி களிப்புடன் ஒரு நடுத்தர வாலிபர்.

அந்த கியு எவ்வளவு வேகமா நகருது இங்க பாருங்க. வழக்கமான பொலம்பலுடன் பக்கத்து ஆசாமி.

டேய் தம்பி மண்ணில விளையாடுவையா பாரு கை ரேகை சரியாவே வர மாட்டேங்குது, ஒரு ரெண்டாவது படிக்கும் சிறுவனிடம் ஆபீசர்.

ஒரு வழியாக பேராக்கு பார்த்து கொண்டே நம் முறையும் வந்தது. அப்படியே போய் பத்து விரல்களின் ரேகைகளையும் கொடுத்து கண் கருவிழியின் ரேகைகளையும் கொடுத்து, க்ளோஸ் அப்பில் (நல்ல வேலை ஆபீசர் பயப்படவில்லை) ஒரு போஸ் கொடுத்து, பெயரில் உள்ள எழுத்து பிழைகளை சரி செய்து ரேஷன் அட்டையை வாங்கி கொண்டு கிளம்பினேன்.

ஆதார் அட்டை என்ற பெயரில் ஒரு மனிதனின் தனித்துவமான பத்து விரல் ரேகைகளையும், கண்ணின் கருவிழி ரேகையையும் பதிவு செய்து தன்

குடிமக்கள் மீது ஒரு கட்டற்ற அதிகாரத்தை நிறுவ முயலும் இந்த திட்டம் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஒரு மனித உரிமை மீறல் தான்.

பின்னொரு காலத்தில் குடிமக்களின் மரபணு. ஸ்டெம் செல்களை கூட தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த அரசு முயலும் அப்பொழுதும் கூட இந்த
எளிய மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதே ஈடுபாட்டுடன் அதை வாரி வழங்குவார்கள்.

காரணம் கேள்வி கேட்பது இங்கு தேச துரோகம்.