வியாழக்கிழமை மாலை சுமார் ஏழு மணியிருக்கும், சைதை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி மார்க்கெட் அருகே இருக்கும் நடை பாதை கடைகள் வழியாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். எத்தனை முறை தங்கள் வாழ்வாதாரமான அந்த கடைகள் அகற்றப்பட்டாலும் அத்தனை முறையும் முளைத்து விடுகின்ற நவீன இந்தியாவின் 'பினிக்ஸ் பறவைகள்' அந்த எளிய மனிதர்கள்!
இப்பொழுதெல்லாம் நடைப்பாதை கடையினர் கூவி விற்பதை யாரும் கண்டு கொள்வதே இல்லை, பெரும் தொகை செலவிட்டு செய்யப்படும் விளம்பரங்களுக்கும் பல வித இயந்திர இரைச்சல்களுக்கும் இடையே இந்த அன்றாடங்காய்ச்சிகளின் குரல் பலவீனமானதாகவே ஒலிக்கிறது! என்ன செய்ய?
எண்ண ஓட்டத்தோடு நடையின் வேகத்தையும் தீவிரப்படுத்தினேன்.
தீடிரென கேட்ட சத்தமான சிரிப்பு சத்தம் நடையின் வேகத்தை சற்று குறைத்து விட்டிருந்தது.
'அட இங்க பாருடா என் முருங்கை கீரைக்கு எவ்வளவு வெளிச்சம்', கீரைக்கார பாட்டி தெருவோர சோடியம் லைட்டின் வெளிச்சம் அவளின் 'விற்காத முருங்கைக்கீரையின்' மேல் பட்டு விட்டதற்கு சந்தோஷப்பட்டு கொண்டிருந்தாள்.
கேட்டு கொண்டே அவளை கடந்து விட்டேன். வீடு சேர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேலும் அந்த வார்த்தைகள் மனதில் மீண்டும் மீண்டும் பிரசவித்து கொண்டிருந்தன.
என்னிடம் இருந்து எதையோ எடுத்து சென்ற அந்த வார்த்தைகள், சற்று நேரம் கழித்து எதையோ கொடுத்து விட்டு சென்றிருந்தது! - "எளிய மனிதர்கள் தங்களின் சின்ன சின்ன மகிழ்ச்சிகளுக்கு காரணங்களை தேடி கொண்டிருப்பதில்லை, அவர்களே அதை உருவாக்கி கொள்கிறார்கள்"
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
No comments:
Post a Comment