Wednesday, September 6, 2017

பாஜகவின் அரசியல்!

சாதாரண குடி மக்களுக்குள் கூச்சல், குழப்பம் விளைவிப்பது, பிரித்தாள்வது, வெறுப்புணர்வை தூண்டுவது - தொலைக்காட்சி விவாதங்களில் சம்பந்தம் இல்லாமல் கத்தி ஆட்டத்தை கலைக்க முயல்வது, மற்றவர்களின் கருத்தை கேட்க விடாமல் கத்தி கொன்டே இருப்பது - அதை கண்டிப்பவர்களையும், எதிர் கருத்துடையவர்களையும் சர்வ சாதாரணமாக நீ தேச விரோதி என்பது - இவ்வளவு தான் பாஜக வின் அரசியல்.
CMC'ல் கிறிஸ்துவர்களுக்கு முக்கியத்துவம், கிறிஸ்துவர்களுக்கு முக்கியத்துவம் என்று ஒரு மிக பெரிய கொலை குற்றத்தை, தேச விரோதத்தை செய்ததை போல பாஜகவை சேர்ந்த ஒருவர் நேற்றைய நேர்பட பேசுவில் கத்தி கொண்டிருந்தார் - மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் அமைப்பால் வெளிப்படையாக வழங்கப்பட்ட ஒரு உரிமையை ஒரு கொலை குற்றத்தை போல சித்தரித்து மக்களை தூண்டும் வேலையை செய்தது அப்பட்டமாக தெரிந்தது. அவர் இந்த உரிமையை பற்றி கண்டிப்பாக அறிந்தவர் ஆனால் திட்டமிட்டு பார்வையாளர்களை manipulate செய்கிறார். மக்களுக்கான அரசியல் பேசாமல் இந்த மாதிரியான மட்டமான தந்திரங்கள் மூலம் எதை சாதிக்க போகிறீர்கள்?

Rights of Minority Educational Institutions: 


முடிந்தால் சிந்தியுங்கள் - NEET, CMC & சமவாய்ப்பு!

நண்பர் வட்டத்தில் உள்ள சிலர் CMC'யில் கிறிஸ்துவர்களுக்கு அதிக இடங்களை அளிப்பதை அயோக்கியத்தனம் என்று விமர்சித்திருந்தனர் - பிராமணனுக்கு மட்டுமே வீடு என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமோ அதே அளவு அல்லது  அவர்கள் பார்வையில் இருந்து பார்க்கும் பொழுது  அதை விட பெரிய அயோக்கியத்தனம் தான் இது, அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை - எப்படி பிராமணனுக்கு மட்டும் வீடு தருவதற்கு இவர்கள் நியாய தர்மங்கள் வைத்துளார்களோ அதே போல அவனும் எதோ ஒரு நியாய தர்மத்தை வைத்து இருப்பான் என்பதில் சந்தேகமில்லை..    ஆனால் இங்கு பிரச்சனை அது இல்லை - சார்பற்ற நிலையில் தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய சம வாய்ப்பை அளிக்க தவறும் அரசாங்கமும், அரசு எந்திரமும் தான் பிரச்சனை. 

நான் தமிழ் வழியில் வொகேஷனல் பாட பிரிவில் படித்து  தமிழ் நாடு நுழைவு தேர்வின் வழியாக என்.ஐ.டி(NITT) திருச்சியில் பொறியியல் படித்தவன் - என்னுடைய Batch தான் தமிழ் நாடு நுழைவு தேர்வின் மூலம் என்.ஐ.டி யில் சேர்ந்த கடைசி Batch.  என்னுடைய Batchல் பலர் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் இருந்து தன் சுய முயற்சியாலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியாலும், தொண்டு நிறுவனங்கள் உதவியாலும் படித்தவர்கள் பலர், சாப்பிடவும்,  கல்லூரி கட்டணம் கூட கட்ட முடியாத நிலையில் சிறு சிறு வேலைகள் செய்தும், கடன் வாங்கியும் படித்தவர் பலர், ஒன்று இரண்டு வரி கூட ஆங்கிலம் பேச தெரியாமல்(என்னையும் சேர்த்து) திக்கி திணறியவர்கள் பலர் - இவர்கள் யாருமே எந்த விதத்திலும் unfit கிடையாது, அவர்களுக்கான மிக குறைந்த வசதிகளையும், வாய்ப்புகளையும்  கொண்டு சிறப்பான இடத்தை அடைந்தவர்கள் அவர்கள் - இன்று அவர்கள்  அனைவரும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக துறையில் சிறப்பான ஒரு இடத்தை அடைந்துள்ளனர் அவர்களை சார்ந்தவர்களும் நல்லதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எங்களுக்கு அடுத்த batchல் இருந்து அகில இந்திய நுழைவு தேர்வு மூலம் கல்லூரியில் சேர்ந்தவர்கள், அந்த batchல் பெரும்பகுதி நகர வாசிகளாகவும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் திறமை பெற்றவர்களாகவும், பெரும்பாலும் மேல் தட்டு சமூகத்தை சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள், எளிமையாக சொல்ல வேண்டுமானால்   நுழைவு தேர்வுக்காக சிறப்பான ஒரு பயிற்ச்சி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பும் வசதியும் பெற்றவர்கள் மட்டுமே கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள் - இதனால் கல்வியின் தரம் உயர்ந்து விட்டது, நாடு முன்னேறி விட்டது என்றெல்லாம் வெற்று  கோஷம் போடாதீர்கள் - அரசு பணத்தில் படித்த பெரும்பாலானோர் (எங்கள் batchயும்  சேர்த்து) Corporate நிறுவனங்களுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும் லாபம் சம்பாதித்து கொடுப்பதில் தங்கள் தூக்கத்தையும், வாழ்க்கையும் இழந்து கொண்டிருப்பதை தவிர  பெரிதாக ஒன்றையும் கிழித்து விடவில்லை.       

சமூக நீதி என்பது சாதிய ரீதியாக மட்டும் சுருங்கி விடாமல் சாதியம், வாழ்க்கை சூழல், பொருளாதார நிலை போன்ற பல்வேறு காரணீகளையும் உள்வாங்கி விரிவடைந்தால் நிச்சயம் மிக துல்லியமான, சர்ச்சைகளற்ற சமூக நீதியை நோக்கி நகர முடியும்.   

*அலோபதி கல்வி பற்றி எனக்கு துளி அளவும் உடன்பாடில்லாவிட்டாலும் சமூக நீதி என்ற அடிப்படையில் இதை பற்றி பேசுவது அவசியமாகிறது.

#NEET #CMC #Natural_Justice #Equal_Opportunity #All_India_Entrance #Anitha 

Saturday, March 14, 2015

"நோய் உங்கள் நண்பன் - 3"



"நோய் உங்கள் நண்பன் - 3" - உணவு சில கருத்துக்கள்!
1. எந்த ஒரு இலை, காய், கனி, விதை, பருப்பு, தானியம் மற்றும் வேரை சமைக்காமல் அப்படியே உண்ண முடிகிறதோ அவை மட்டுமே தேவையான உணவாக எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் உடலால் ஏற்று கொள்ளப்படும்.
2. அப்படி சமைக்காமல் நம்மால் எவ்வளவு உண்ண முடிகிறதோ அந்த அளவே சரியான அளவாக உடலால் ஏற்று கொள்ளப்படும். சில உணவுகளை வயிர் நிறையும் அளவு உண்ண முடியும், சில உணவுகள் மிகுதியான சுவையின் காரணமாக போதும் என்ற எண்ணம் தோன்ற தொடங்கி விடும்.
3. எந்த ஒரு உணவையும் அதன் இயற்கை தன்மை மாறாமல் ( சமைக்காமல், அரைக்காமல், ..), அல்லது குறைந்த மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு உட்கொள்ளும் போது அவற்றின் முழுப்பயன்/ அதிகப்படியான பயன் கிடைக்கும்.
4. சமைக்காத உணவை உண்ணும் போது அவற்றில் சத்துக்களை தேடியோ, திட்டமிட்டோ உண்ண வேண்டிய அவசியமில்லை, எந்த ஒரு உணவையும் தவிர்க்காமல், விரும்பும் நேரத்தில்(பசித்து), விரும்பும் அளவில் உணவை உட்கொள்ளலாம்.
5. பசிக்காமல் எந்த ஒரு உணவையும் உட்கொள்ளாமல் இருந்தாலே ஆரோக்கியம் பெருகி, நோய் அகலும். இதையே திருவள்ளுவர்,
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
என்கிறார். மருந்து அதிகாரத்தில் உள்ள பெரும்பான்மையான குறள்கள் இதையே வலியுறுத்துகின்றன.
6. லேசான சுவையுள்ள, நீர்சத்து அதிகம் உள்ள, எளிமையான உணவுகளையே இயற்கை தத்துவம் சிறந்த நேர்மறை உணவு ( Positive Food) என்கிறது, இத்தகைய உணவுகள் நம் அன்றாட வாழ்வில் அதிகம் இருத்தல் நலம்.
7. உடலுக்கு தேவையான உணவுகள் அதிகம் கொடுக்கும் அதே நேரத்தில் மனதிற்கு பிடித்த உணவுகளையும் சிறிது கொடுத்து வருவது உடலும், மனமும் இணக்கமாக செயல்படுவதற்கு உதவும், அத்தகைய உணவுகளை உட்கொள்ளும் போது அவை சரியாக செரித்து வெளியேறும் வரை பிற உணவுகளை உட்கொள்ளாமல் இருத்தல் நலம்.
(அடுத்த பகுதியிலும் உணவை பற்றிய குறிப்புகள் தொடரும்)
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
-தொடரும்
பின் குறிப்பு: டாக்டர் அருண் சர்மா அவர்கள் விதைத்த இயற்கை வாழ்வியல்/ மருத்துவம் குறித்த கருத்துக்களின் தாக்கம் மற்றும் அவருக்கு நன்றி செய்யும் முயற்சியின் விளைவு தான் இந்த தொடர் கட்டுரை.

"நோய் உங்கள் நண்பன்" - 2



"நோய் உங்கள் நண்பன்" - நோயற்ற வாழ்விற்கும், நோயிலுருந்து விடுபடுவதற்குமான வழி!
மனித உடல் உட்பட பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளும் வெளி(Space), வளி(Air), ஒளி(Light), நீர்(Water), நிலம்(Land) ஆகிய பஞ்சபூதங்களினால் ஆனவை. எப்படி மரத்தினாலான ஒரு உடைந்த நாற்காலியை மரத்துண்டை வைத்து மட்டும் தான் சரியாக சீரமைக்க முடியுமோ, அதே போல பஞ்ச பூதங்களினாலான இந்த உடலையும் அவற்றை கொண்டு மட்டும் தான் சரியான முறையில் சீரமைக்க முடியும். இன்றளவிலும் மனிதன் தவிர்த்த அனைத்து உயிரினங்களும் தங்கள் உடலை நோயிலிருந்து பாதுகாப்பதற்கும், நோயற்ற வாழ்வை வாழ்வதற்குமான தற்சார்பை(Sustainability) பெற்றுள்ளது, மனிதன் சூழல்(Environment) மற்றும் வாழ்வூக்கம் ( Life Instinct) ஆகிய இயற்கை விதிகளிலிருந்து பெருமளவு விலகி சென்றதின் விளைவே இன்று காணப்படும் எண்ணற்ற மருத்துவ முறைகளும் ( Medicinal Systems), மருந்துகளும், ஒன்று தொட்டு ஒன்றாக நோயிலிருந்து விடுபட முடியா செயன்முறை நிலையும்( Recursive State), வாழக்கூடிய சுழலை சரி செய்து கொள்வதன் மூலமும், இழந்த வாழ்வூக்கத்தை( Life Instinct) திரும்ப பெறுவதின் மூலமும் மனிதன் நோயிலிருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வை வாழும் தற்சார்பை அடைய முடியும்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
-தொடரும்
பின் குறிப்பு: டாக்டர் அருண் சர்மா அவர்கள் விதைத்த இயற்கை வாழ்வியல்/ மருத்துவம் குறித்த கருத்துக்களின் தாக்கம் மற்றும் அவருக்கு நன்றி செய்யும் முயற்சியின் விளைவு தான் இந்த தொடர் கட்டுரை.
image credits: www.parliament.uk

"நோய் உங்கள் நண்பன்"



பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தன்னை தானே சீர்படுத்தி/காப்பாற்றி கொள்ளும் நுண்ணறிவோடு(Creative Intelligence) படைத்துள்ளது இயற்கை, இதற்கு மனித உடலும் விதி விலக்கல்ல. பொதுவாக நோய் என்பது நம் உடலின் இயலாமையை/ உடலியக்கத்தின் தோல்வியாகவே மருத்துவ உலகால் பார்க்கப்படுகிறது, ஆனால் இயற்கை தத்துவத்தின் படி நம் உடலில் உள்ள அழுக்குகளை வெளிக்கொணரவும், உடல் மற்றும் உயிர்க்கு ஏற்பட்ட சேதத்தை சரி படுத்தவும், மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உயிர் செய்ய கூடிய அப்பழுக்கற்றமுயற்சி தான் நோய். பெரும்பாலான மருத்துவ முறைகள் அந்த முயற்சியை தடை செய்ய முற்படுகிறதே(Symptomatic Treatment) தவிர அந்த முயற்சி எதற்காக(Root Cause) உயிரால் எடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. பொதுவாக வாந்தி, பேதி, சளி மற்றும் வலி போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் அவற்றை மூடி மறைக்கவே(suppressant) கொடுக்கப்படுகிறது, அவற்றை சீர் படுத்த அல்ல, அப்படி மூடி மறைக்க(suppress) செய்யப்படும் முயற்சிகள் உடலில் இருந்து கழிவுகள் வெளிவருவதையும், அந்த நோயை சீர்படுத்த உயிர் செய்யும் முயற்சியையும் தடுத்து அதுவே பின்னாளில் அந்த நோய் வலுப்பெற்று அதே வடிவிலோ வேறு ஒரு நோயாகவோ வெளிப்பட காரணமாக அமைந்து விடுகிறது.
சரி எப்படி நோயில்லாமல் வாழலாம்?
இயற்கை தத்துவத்தின் படி ஆரோக்கியத்தை பெருக்குவதே நோயிலிருந்து விடுபடும் வழி. ஆரோக்கியத்தை பெருக்கும் முயற்சி உடலின் மொழியை புரிந்து அவற்றுக்கு பதிலளிப்பதில் இருந்து தொடங்குகிறது, நான் புரிந்து கொண்ட பத்து கட்டளைகளை உங்களுக்காக பகிர்கிறேன்,
1. பசித்து புசிப்பது.
2. இயற்கையின் தன்மை மாறாத உணவுகளை உண்பது.
3. தாகத்தை உணர்ந்து அதற்கு தகுந்த அளவு தண்ணீர் குடிப்பது.
4. உடல் சோர்வடையும் போது தகுந்த ஓய்வளிப்பது.
5. சரியான அளவு தூங்குவது.
6. சூரிய ஒளி உடலில் பட அனுமதிப்பது.
7. உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது.
8. உடலின் அனைத்து பாகங்களும் இயங்கும் வகையில் உடற்பயிற்சி செய்வது.
9. செய்யும் வேலையை முழு மனதுடன் செய்வது .
10. மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
-தொடரும்
பின் குறிப்பு: டாக்டர் அருண் சர்மா அவர்கள் விதைத்த இயற்கை வாழ்வியல்/ மருத்துவம் குறித்த கருத்துக்களின் தாக்கமும், அவருக்கு நன்றி செய்யும் முயற்சியின் விளைவு தான் இந்த கட்டுரை.

Tuesday, November 5, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 11!

இன்றைய சுழலில் நாகரிகம் என நம் சமூகம் சிந்திப்பது அனைத்துமே எதொ ஒரு விதத்தில் கன்சுயுமரிச சிந்தனைகளை நமக்குள் விதைப்பவைகளாக தான் இருக்கின்றன. 

மனிதர்களை ஆழ்ந்து நேசிக்க கூடிய மனநிலை சுருங்கி, தேவையின் அடிப்படையிலான நட்பு, உறவு, காதல் என்ற கன்சுயுமரிச மனநிலை சமூகத்தின் நிச்சயத்தன்மையை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றன. பெருகி வரும் முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் காப்பகங்களும், விவாகரத்து வழக்குகளும், ப்ரேக் அப்களும், துரோகங்களும், ரோட்டோர பிச்சைக்காரர்களும், அநாதை பிணங்களும், வன்ப்புணர்வுகளும் இதைத்தான் நமக்கு சொல்லி கொண்டிருக்கின்றன.

கார்ப்பரேட்களும், மீடியாக்களும் சேர்ந்து கட்டமைக்கும் நாகரிகங்களை தூக்கி சாக்கடையில் வீசி விட்டு, நாகரிகமான மனிதர்களாக சக மனிதர்களை நேசிப்போம்.

முடிந்தால் சிந்தியுங்கள்.

Wednesday, June 12, 2013

இயற்கையை போற்றி வளர்த்திடுவோம்!

காகித கப்பில் டீ குடித்து
பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் அருந்தி
தெர்மாகோல் ப்ளேட்டில் சோறுண்டு
கேரி பேக்கில் பொருள் வாங்கி
ஏ சி ரூமில் படுத்துறங்கி
சாயப்பூ உடையணிந்து
கார்பன் மோனக்சைட்டில் பயணித்து
சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டி
செவிக்கிழிய பேசிடுவோம் - இயற்கையை
போற்றி வளர்த்திடுவோம்!

தூப்புக்காரி !

வார்த்தைகளால் ஜாலம் செய்யாமல்,போலியான விறு விறுப்புகளுக்காக மெனக்கெடாமல்; வலிகளையும், ரணங்களையும் கொண்டு மெய் சிலிர்க்க
வைத்து விட்டார் மலர்வதி. நெஞ்சில் கணத்தையும், விழிகளில் ஈரத்தையும் சர்வ சாதாரணமாக ஏற்படுத்தக்கூடியவள் இந்த தூப்புக்காரி; இறுதி
பக்கங்களில் வாழைப்பழத்தில் உசியை இறக்குவது போல் இலகுவாக உங்கள் உயிரில் வலியை இறக்கி விடுவாள்.

இரா. நடராசனின் ஆயிஷாவிற்கு பிறகு என்னை நிலை குலைய வைத்த மலர்வதியின் இந்த தூப்புக்காரி கேள்விகள் ஏதும் இன்றி கொண்டாடப்பட வேண்டியவள் தான்..

விதையிலுருந்து மரம்!

பாபநாசத்தில் பூவுலகின் நண்பர்கள் நடத்திய விதையிலுருந்து மரம் பயிற்சி பட்டறை இயற்கையின் மீதான காதலை மேலும் தீவிரப்படுத்தி விட்டது.

சென்னை திரும்பிய நிமிடத்திலிருந்தே அடுத்து எப்படா இப்படி இயற்க்கையோடு கொஞ்சி, குலாவி காதலை வளர்ப்பது என ஏக்கமாக இருக்கிறது; பூகம்பமே வந்தாலும் எட்டு மணி வரை அசையாத ஒருவன் (வேற யாரு நான் தான்) இப்படி நாலு மணிக்கே எழுந்து உக்காந்து விட்டத்த பார்த்து  யோசிச்சா என்ன அர்த்தம் ?! - பியார் முத்தி போச்சு.

#உண்மை காதலுக்கு உதவ காத்திருப்போர் கவனத்திற்கு!

பின் குறிப்பு: எனக்கு தெரிஞ்சு இன்னும் இயற்க்கைன்னு எல்லாம் எந்த பொண்ணுக்கும் பேர் வைக்கல - எதையாவது கெளப்பி விட்டுடாதிங்க பாஸ்.

எல்லாம் வல்ல இயற்கை!

ஒரு நல்லவர் மூன்று மாதங்களில் சென்னையில் குப்பையையே பார்க்க முடியாது என அறிவித்தார் - ஒரு வருடத்திற்கு முன்பு! இந்த உலக சுற்று சுழல்
தினத்திலாவது அவருக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி கொள்கிறேன்..

எது பார்ப்பனீயம்!

பாக்கியம் ராமசாமி எழுதிய "அப்புசாமியும் ஹிப்னாடிச பூனையும்" படித்து கொண்டு இருந்தேன், நல்ல நகைச்சுவையோடும், சுவாரஸ்யமாகவும்,
விறுவிறுப்பாகவும் அமைந்திருந்த கதைக்களம் புத்தகத்தை கீழே வைக்கவே அனுமதிக்கவில்லை; திடீரென கதையின் கடைசி பக்கங்களில் தேச விரோத
சக்திகள், புலிகள், பிரபாகரன் என சம்பந்தமே இல்லாமல் கதை கரைபுரண்டி ஓட ஆரம்பித்தது. இதற்கு பெயர் தான் பார்ப்பனீயம் போல என நொந்து
கொண்டேன்.

ஆதார் அட்டையும்; கழண்ட டவுசரும்!

செத்தாலும் ஆதார் அட்டை வாங்க கூடாது என தீர்க்கமாய் இருந்தவனை, பிறந்த நாள் என்றும் பாராமல் ஆதார்க்கு போட்டோ எடுத்து வந்தால் தான்
சோறு என மிரட்டியதால் வேறு வழி இன்றி அவசர அவசரமாய் குளித்து பொடி நடையாக நடந்து மையத்தை அடைந்தேன், சரி சட்டு புட்டுன்னு
முடிச்சிட்டு கிளம்பிடலாம்னு பார்த்தா ஒரு ஐம்பது, அறுபது பேர் எனக்கு முன்னாடியே துண்ட விரிச்சி உக்காந்திருக்காய்ங்க, அதிலும் ஒரு சிலர்

என்னவோ ஷங்கர் படத்துல நடிக்க சான்ஸ் கேட்டு வந்தவய்ங்க மாதிரி புல் மேக்கப்போட ஆஜர் ஆயிருந்தாங்க. நிலைமையை நொந்து கொண்டே ஒரு
கியூவில் போய் நின்றேன்.

போன வாரம் செம கூட்டம்ல, இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல. ஒரு அக்கா உற்சாகத்துடன் சொல்லி கொண்டிருந்தாள்.

இந்த டாமி எப்பவுமே இப்படி தான் கூடவே வந்து தொல்ல பண்ணும். ஏய் ஓடு.. தன் செல்ல பிராணியை துரத்தி கொண்டிருந்தாள் இன்னொரு அக்கா.

பையன் ஊரிலுர்ந்து இப்ப தான் வந்தான், முகம் கழுவ போயிருக்கான். இதோ வந்துடுவான். அங்கு இருந்த ஒரு ஆபிசரிடம் சொல்லி கொண்டிருந்தாள்
பாட்டி ஒருத்தி.

மொதல லெப்ட் கைய வைக்கணும் அப்பறம் ரைட் கைய வைக்கணும் அப்பறம் பெரு விரல் ரெண்டையும் வைக்கணும் அப்பறம் அந்த பைனாகுலர்ல

பாக்கணும். அவ்வளவுதான். ஒரு வயதான பாட்டிக்கு விளக்கி கொண்டிருந்தார் சீனியர் ஒருவர் (ஆமாங்க நமக்கு முன்னாடியே எடுத்துட்டார்ல அப்ப சீனியர் தானே)

தம்பி தலைய நேரா வச்சு இந்த கேமராவ பாரு. முகத்த மேல தூக்கு, கண்ண மூடாத. ஒழுங்க ஒக்காரு. நீண்ட நேரமாக ஒரு சுட்டி சிறுவனிடம்
மன்றாடி கொண்டிருந்தார் ஒரு ஆபீசர்.

யோவ் எனக்கு பின்ன தானே வந்த நீ பாட்டுக்கு முன்ன போற.
அண்ணே அவரு பேஷெண்ட்.
அதுக்கு நான் என்ன பண்றது போய் கியூல வாங்க. எனக்கும் தான் உடம்பு சரி இல்ல.
போங்க போய் கியூல வாங்க.. வந்துட்டானுங்க @#$%^&*():"(பின்னாடி இருந்த அனைவரும் கோரஸாக)
வெற்றி களிப்புடன் ஒரு நடுத்தர வாலிபர்.

அந்த கியு எவ்வளவு வேகமா நகருது இங்க பாருங்க. வழக்கமான பொலம்பலுடன் பக்கத்து ஆசாமி.

டேய் தம்பி மண்ணில விளையாடுவையா பாரு கை ரேகை சரியாவே வர மாட்டேங்குது, ஒரு ரெண்டாவது படிக்கும் சிறுவனிடம் ஆபீசர்.

ஒரு வழியாக பேராக்கு பார்த்து கொண்டே நம் முறையும் வந்தது. அப்படியே போய் பத்து விரல்களின் ரேகைகளையும் கொடுத்து கண் கருவிழியின் ரேகைகளையும் கொடுத்து, க்ளோஸ் அப்பில் (நல்ல வேலை ஆபீசர் பயப்படவில்லை) ஒரு போஸ் கொடுத்து, பெயரில் உள்ள எழுத்து பிழைகளை சரி செய்து ரேஷன் அட்டையை வாங்கி கொண்டு கிளம்பினேன்.

ஆதார் அட்டை என்ற பெயரில் ஒரு மனிதனின் தனித்துவமான பத்து விரல் ரேகைகளையும், கண்ணின் கருவிழி ரேகையையும் பதிவு செய்து தன்

குடிமக்கள் மீது ஒரு கட்டற்ற அதிகாரத்தை நிறுவ முயலும் இந்த திட்டம் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஒரு மனித உரிமை மீறல் தான்.

பின்னொரு காலத்தில் குடிமக்களின் மரபணு. ஸ்டெம் செல்களை கூட தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த அரசு முயலும் அப்பொழுதும் கூட இந்த
எளிய மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதே ஈடுபாட்டுடன் அதை வாரி வழங்குவார்கள்.

காரணம் கேள்வி கேட்பது இங்கு தேச துரோகம்.

Friday, April 5, 2013

இயற்கையின் எதிர்வினை!



ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, கடுமையான பாறைகளை கொண்டு பஞ்சபூதங்களை ஒருங்கிணைத்து, இயற்கை கட்டமைத்த பிரம்மாண்ட மலைகள் இன்று சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை கொண்டும், திறன் மிகுந்த ராட்சத இயந்திரங்களை கொண்டும், அன்றாடங்காய்ச்சிகளாக வாழக்கூடிய மனிதர்களின் சக்தி கொண்டும், சிறிது சிறிதாக தரைமட்டமாக்கபடுதவதை காணும் பொழுதெல்லாம் தொழில்நுட்ப்ப வளர்ச்சியை நினைத்தோ, மனித உழைப்பின் சக்தியை நினைத்தோ புளங்காகிதம் அடைய முடியவில்லை, மாறாக மனிதனின் சுயநலத்தேடல்களுக்காக இயற்கைக்கு எதிராக அவன் ஆற்றி கொண்டிருக்கும் வினைகளுக்கு இயற்கை ஆற்ற இருக்கும் எதிர்வினைகளை நோக்கி கவலைப்பட வேண்டியதாயுள்ளது.

மகிழ்ச்சி!

மகிழ்ச்சி மிகச்சிறந்த அனுபவமாக இருந்தாலும் கூட அதனூடே சிறந்த மனிதர்கள் வடிவமைக்கப்படுவதில்லை, மாறாக கடுமையான வலியை ஏற்படுத்த கூடிய அனுபவங்களும், நெருக்கடி சந்தர்ப்பங்களும் மிகச்சிறந்த மனிதர்களையும், ஆளுமைகளையும் வார்த்தெடுத்து விடுகிறது.

Wednesday, April 3, 2013

ஏர்டெல்!

தற்போது தான் ஏர்டெல் நிர்வாகி பேசினார்.. 
எதுக்காக ஏர்டெல்ல இருந்து மாற விரும்புரிங்கனு தெரிஞ்சக்கலாமா?
இலங்கை போரில ஏர்டெல் செய்த துரோகத்திற்காக ஏர்டெல்ல புறக்கணிக்கறதுனு முடிவு பண்ணி இருக்கோம் அதான்.சிரித்து கொண்டே தொடர்தேன் நீங்களும் இந்த வேலைய விட்டுட்டு வேற நல்ல வேலையா பாருங்க.
அவசர அவசரமாக ஏர்டெல்லை அழைத்ததற்கு நன்றின்னு வச்சிட்டாரு 
#யோவ் நீ தான்யா போன் பண்ண :-)!

கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே!

நம்ம கனவு வியாபாரியும், நாசாவும் கல்பாக்கம் மக்களுக்கு எதாவது 10 அம்ச திட்டம் வச்சி இருப்பாங்களே கொஞ்சம் எடுத்து விடுறது. 

#கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே.

பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம்!

தனித்தமிழ் ஈழத்திர்கான பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை, ஈழ மக்களின் மறுவாழ்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களின் போராட்டம் போன்றதொரு போராட்டம் நம் கல்லூரி மாணவர்களாலும் முன்னெடுக்க பட வேண்டும். பொதுவாகவே பெரிய கல்லூரிகளின் படிக்க கூடிய மாணவர்கள் சமூக பிரச்சனைகளில் இருந்து தங்களை தூரப்படுத்தி கொள்ளும் போக்கு இனி மேலும் நமக்கு வேண்டாம். சக மாணவர்களின் போராட்டங்களில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு அவர்களுடன் கூடி போராட நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். தொழில் நுட்ப ரீதியாக நம் கை மேலோங்கியிருக்க கூடிய நிலையில் நாம் கையிலெடுக்க கூடிய சமூக பிரச்சனைகள் தீர்வுகளை நோக்கி வேகமாக பயணிக்க கூடும். பொருள் சார்ந்த சிந்தனைகள் மனிதர்களான நம் உணர்வுகளை மழுங்கடித்து விடாது என்பதை நிரூபிப்போம். மிக பெரியதொரு சமூக எழுச்சிக்காக உங்கள் 
சிந்தனைகளையும் உணர்வுகளையும் கூர்மைப்படுதுங்கள். 

வெடிப்புற பேசுவோம், வீரியம் பெருக்குவோம், வையத்தலைமை கொள்வோம், பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம். 

#ஈழம் என்றல்ல அனைத்து சமூக பிரச்சனைகளிலும், சக மனிதனாய் எழுவோம். சமூக மாற்றத்தை துரிதப்படுத்துவோம். அரசியலை மாற்றியமைப்போம்.

மனிதனாக முழுமை அடைவது!

பல்வேறு சந்தர்பங்களில் ஏற்படுகின்ற மனத்தாக்கங்களை திறந்த மனதோடு தன்னுள் பயணிக்க அனுமதித்து, அவை ஏற்படுத்த கூடிய மெல்லிய மாற்றங்களை தக்க வைத்து கொள்பவனே மனிதனாக முழுமை அடைகிறான்.

உண்மையான மனிதன்!

உண்மையான ஹிந்து, உண்மையான முஸ்லிம், உண்மையான கிறிஸ்துவன் என சிதறி கிடக்கும் மதவாத கூட்டத்திற்கு நடுவே உண்மையான மனிதர்களின் கடைசி தடயங்கள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு வருகின்றது. 
#எந்த ஒரு மனிதனல்லாத உண்மையான மதவாதியையும் கடுமையாக எதிர்க்கிறேன்

"நான் உங்களை நேசிக்கிறேன்"

நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களோடு அதிக நேரம் செலவிடவும், கல்லூரி நாட்களை பற்றி அசை போடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மனதில் நினைத்த உடனே நினைவுகள் மூலம் கடந்து வந்த அனைத்தையும் அருகில் கொண்டு வந்து விடுகிற கலையை கடந்த சில வருடங்களும், கடந்து வந்த சில மனிதர்களும் எனக்கு சொல்லி கொடுத்து விட்டார்கள். 

இயற்கை மகிழ்ச்சிக்கான விதைகளை என்னிடத்தில் சற்று அதிகமாகவே புதைத்து விட்டது போல, எத்தனை நண்பர்கள், சொந்தங்கள்! மனத்தொய்வுகளுக்கு நடுவே இவர்கள் அன்பை கொண்டு செய்யும் மோடி மஸ்தான் வித்தை இருக்கிறதே.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்ப துளிர்களும், தொய்வுகளும் மாறி மாறி வருவது கூட ரோலர் கோஸ்டர் பயணத்தை போன்றதொரு மயிர்கூச்சரியும் அனுபவமாக தான் இருக்கிறது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழியே என்னை உயிர்ப்போடு வைத்து இருக்கும் உள்ளங்களுக்கெல்லாம் சொல்லி கொள்ள விரும்புவது -

"நான் உங்களை நேசிக்கிறேன்"

#எசஸ்க்யுஸ் மீ ஜென்டில்மென் - காதலர் தின ஜுரத்திற்கு நடுவே இப்படியொரு பதிவை போட்டதற்கு :-)!