Friday, October 7, 2011

அணு உலை பாதுகாப்பானது தான், ஆனால் இங்கு அல்ல!




அணுமின் நிலைய விவகாரத்தில் பிரதமரின் முட்டாள்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஜப்பானில் நடந்த பேரழிவுக்கு பின்னர் பல உலக நாடுகள் இயங்கி கொண்டிருக்கும் அணுமின் நிலையங்களையே மறுபரிசிலனை செய்ய முற்படும் போது யாருடைய நலனுக்காக அவசர அவசரமாக புதிதாக ஒரு அணுமின் நிலையத்தை இயக்க துடிக்கிறார் நம் பிரதமர்? நாட்டின் பெரும்பகுதி மின்சாரத்தை அயல் நாட்டு தொழிற்சாலைகள் பயன்படுத்தி கொண்டிருக்கையில், குடிமக்களின் நலன் கருதி மின் உற்பத்தியை அதிகபடுத்த தீவிரம் காட்டுவது போல நம் பிரதமர் நடந்து கொள்வது கேலிகூத்து! விதண்டாவாதம் பேசுவதில் நம் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே , உயர்திரு சோ சொல்கிறார், அணுமின் நிலையம் ஆரம்பித்து பல வருடங்களாக போராடாத மக்கள், அது செயல்பட தயாராகும் நேரத்தில் யாரோ சிலரின் தூண்டுதலால் போராடுகிறார்களாம்! விட்டால் ஜப்பான் தனக்கு அணுமின் நிலையங்களே தேவை இல்லை என்ற முடிவை கூட தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் தூண்டுதலால் தான் என்பார்கள் போல! எப்படியெல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று இவர்களிடம் தான் கற்று கொள்ள வேண்டும். அணுமின் நிலைய கட்டுமான வேலை ஆரம்பித்து எத்தனை தடவை தற்பொழுது ஜப்பானில் ஏற்பட்ட அழிவை போல ஏற்பட்டுள்ளது? ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுக்கு பிறகு தான் அணு ஆயுத தயாரிப்பு, உபயோகம் மற்றும் கையிருப்பை பற்றி உலக நாடுகள் தீவிரமாக சிந்தித்து, கட்டுபாடுகளை விதிக்க ஆரம்பித்தது என்று இந்த அறிவு ஜீவிகளுக்கு தெரியாதா? ஒரு வேடிக்கையான ஆங்கில பழமொழி உண்டு, இது வரை யாருமே செய்திராத பல ஆயிரம் தவறுகள் இருக்கும் போது, ஏற்கனவே யாரோ செய்த தவறை மறுபடி ஏன் செய்யவேண்டும்? அணுமின் நிலையங்களால் பேரழிவு ஏற்படும் என்பதை கண்கூடாக கண்ட பின்பும் அவசர அவசரமாக முடிவெடுக்கும் இந்த தொலை நோக்கு சிந்தனையாளர்களை என்னவென்று சொல்வது?
நம் தொழில் நுட்பத்தை நம்புங்கள், நம் அறிவியல் வல்லுனர்களை நம்புங்கள் என்று கூச்சல் போடுபவர்கள் கவனத்திற்கு, தொழில் நுட்பம் முழுவதும் நம்முடையது அல்ல, அறிவியல் வல்லுனர்களை நாங்கள் முழுவதும் நம்புகிறோம் ஆனால் அதை விட அதிகமாக அணுவின் தீவிரத்தையும், இயற்கையின் சக்தியையும், மனிதர்களின் வக்கிரத்தையும் கண்டு நடுங்குகிறோம். இவர்களை தூக்கி சாப்பிடும் சில மகான்கள் உள்ளனர், நடந்து போனாலும் மரணம் வரும், சைக்கிளில் சென்றாலும் மரணம் வரும், பஸ்சில் சென்றாலும் மரணம் வரும், எரோப்ளேனில் சென்றாலும் மரணம் வரும், ராக்கெட்டில் சென்றாலும் மரணம் வரும் என்று என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறி கொட்டுவார்கள், சாவுக்கும், அழிவுக்குமே வித்தியாசம் தெரியாத இவர்களை எல்லாம் எந்த கூட்டத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை! சில நூறு பேர் சாவதற்கும், சில நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு ஈ, கொசு கூட இல்லாமல் அழிந்து போவதும் எப்படி ஒன்றாகும்?அணு கதிர்களால் நீங்களும் நானும் மட்டுமா சாக போகிறோம்? நம் தலைமுறை மட்டுமா பாதிக்க பட போகிறது?
நாங்கள் அணுமின் நிலையங்களை மட்டும் எதிர்க்கவில்லை, அணு ஆயுதங்களை மட்டும் எதிர்க்கவில்லை, மானுடத்தை சுக்கு நூறாக சிதைக்கும் வல்லமை பெற்ற அணுசக்தியை மொத்தமாக எதிர்க்கிறோம், அணு உலகின் தலை சிறந்த ஆற்றல் என்பதில் மாற்று கருத்து இல்லை, அணுமின் நிலையங்களின் எண்ணிகையை விட அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகம் என்பது பள்ளி சிறுவர்களுக்கு கூட தெரிந்த நிதர்சனமான உண்மை. இயற்கை அழிவை கண்டிராத கோளில், வன்முறையை அறியாத உலகத்தில், எதிரிகள் இல்லாத நாட்டில், மனித தவறுகள் நிகழாத சமூகத்தில் அணு உலை பாதுகாப்பானது தான், ஆனால் இங்கு அல்ல!


அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்

No comments:

Post a Comment