இந்த பதிவை நான் எழுதியதின் நோக்கம் விடுதலை புலிகளின் மேல் இருக்கும் அனுதாபமோ, தமிழன் என்ற உணர்வோ, தூக்கு தண்டனை தேவை இல்லை என்று வலியுறுத்துவோ மட்டும் இல்லை, உண்மையை சொல்ல போனால் விடுதலை புலிகளின் மேல் இருக்கும் அனுதாபத்தை விட, காந்தி பிறந்த மண்ணில் பிறந்ததிற்காக நான் அதிகம் பெருமை பட்டு இருக்கிறேன், தமிழ் மொழி உணர்வும், இந்திய தேசிய உணர்வும் என்னுள் இரண்டற கலந்து உள்ளது, தமிழ் எனது தாய் மொழி , இந்தியா எனது தாய் நாடு, ராஜீவ் கொலை குற்றவாளிகளாக தீர்பளிக்கப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிப்பது சரியல்ல என்று இந்த பதிவை எழுதிய நான், நாட்டில் மனிதர்களுக்கு இடையில் இருக்கும் மிருகங்கள் அடையாளம் காண பட்டு, வேரறுக்க பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன், அதே நேரத்தில், செய்யாத தவறுக்காக, முழுவதும் விசாரிக்கபடாத குற்றத்திற்காக, நடைமுறையில் இல்லாத சட்டத்திற்காக, ஒரு சிலரின் லாபத்திற்காக ஒருவர் கூட தீங்கிழைக்கபட கூடாது என்பதிற்காக தான் இந்த பதிவு்.
ராஜீவ் கொலையில் தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தீர்பளிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது, அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தங்கபாலு போன்றோர்கள், ஒரு சில விடுதலை புலி ஆதரவாளர்களால் தூண்டி விட பட்டு நடத்தபடுகிற போராட்டமாக இதை சித்தரித்து கொண்டிருகிறார்கள், இதை பற்றி நான் படித்து, கேட்டு, உணர்ந்த சில விடயங்கள் உங்கள் பார்வைக்கு!
முதலாவதாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தீர்பளிக்கப்பட்டகள் என்று முன்னரே கூறி இருந்தேன், தடா சட்டம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!
Terrorist and Disruptive Activities (Prevention) Act என்பதின் சுருக்கம் தான் TADA
தடா சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டோர் காவல் அலுவலரின் முன்னிலையிலேயே குற்ற செயலை ஒத்துகொள்ளவேண்டும், இதன் பொருட்டு அவர்களின் துன்புறுத்தலில் நீதிமன்றம் தலையீடாது. அவர் ஒத்துகொண்டதையே சாட்சியாக நீதிமன்றம் எடுத்துகொள்ளும், குற்றம் சுமத்தபட்டவர்கள் தாங்கள் நிரபராதி என்று நிரூபிக்க இந்த சட்டத்தில் எந்த வாய்ப்பும் இல்லை. வாக்கு மூலம் தவிர வேறு எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் குற்றவாளிகள் தண்டிக்க படலாம். இந்த சட்டம் ஆங்கிலேய ஆட்சியில் இருந்த, மகாத்மாவால் கடுமையாக சாடப்பட்ட Rowlatt Act க்கு நிகராக கருதப்பட்டதால் 2002 - 2004 ல் பதவியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இரத்து செய்யப்பட்டது. குளறுபடியான ஒரு சட்டம் என்று இரத்து செய்யப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு கொடுத்த தண்டனை தான் இப்பொழுது நிறைவேற்ற பட இருக்கிறது! இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஒரு இழுக்காக கருதபடுகிறது. இந்த ஒரு அடிபடையிலயே இந்த போராட்டங்கள் வெறும் உணர்வு பூர்வமானது மட்டும் இல்லை என்பது தெளிவாகிறது!
இரண்டாவது, ராஜீவ் கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையின் படி இந்த கொலை விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை, குண்டு தயாரித்தது யார், அதில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் பதில் எட்டப்படவில்லை. ஆக முழுவதுமாக முடிவுக்கு வராத ஒரு விசாரணையின் பேரில் தான் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
மூன்றாவது, ராஜீவை கொலை செய்ததாக விடுதலை புலிகளோ, குற்றவாளிகள் என்று கருதபடுபவர்களோ இன்று வரை, எந்த நேரத்திலும் பொறுபேற்கவில்லை.
நான்காவது, ராஜீவ் கொலை நடந்த நேரத்தில் எந்த ஒரு மத்திய, மாநில காங்கிரஸ் தலைவர்களும் இறக்கவில்லை, ஏன் ஒரு சிறு காயம் கூட படவில்லை. ஒரு நாட்டின் பிரதம மந்திரி பங்கேற்கும் ஒரு அரசு பொது விழாவில் அவருக்கு அருகில் எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் இல்லாதது ஏன் என்ற கேள்விக்கு இன்று வரை விடை காண யாரும் முன் வரவில்லை!
ஐந்தாவது, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த அனுப்பிய இராணுவத்தின் மூலம் இலங்கையின் பெருங்கோபதிற்கு ராஜீவ் ஆளானர், இலங்கையில் ராஜீவ் பங்கேற்ற விழாவில் ஒரு சிங்கள ராணுவத்தால் தாக்கப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க முடியாது, இலங்கைக்கும் ராஜீவ் கொலையில் தொடர்பு இருக்க வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இந்த கோணத்திலும் பெரிதாக விசாரணை எதுவும் நடத்தபடவில்லை.
ஆறாவது, கே.ஆர். நாராயணன் மற்றும் அப்துல் கலாம் ஆகிய பிரதமர்கள் சட்ட குளறுபடிகளின் காரணமாக வழங்க பட்ட தீர்ப்பு என்பதாலும், கருணை அடிப்படையிலும் இந்த மூவரின் தூக்கை நிறுத்தி வைத்து இருந்தார்கள். காங்கிரசின் கைபாவையாக செயல்படும் பிரதிபா பாட்டில் அவசர அவசரமாக இந்த தூக்கை உறுதிபடுத்தி இருப்பது, இந்த வழக்கை சீக்கிரம் முடித்து, உண்மையை மறைத்து, மக்களை திசை திருப்பி, காங்கிரஸ் தலைமை நிம்மதி பெரு மூச்சு விடுவதற்காக இருக்கலாம்!
ஏழாவது, ராஜீவ் கொலை குற்றவாளிகளாக கருத படும் யாரும் பயங்கரவாதிகள் இல்லை, அனைவரும் குடும்ப வாழ்கையில் ஈடுபட்டு வந்தவர்கள், அவர்கள் மேல் எந்த ஒரு பயங்கரவாத பின்னணியும் இல்லை, அவர்கள் மேல் இருக்கும் குற்றம் கூட முக்கிய குற்றவாளியான சிவராசனுக்கு பாட்டரி வாங்கி கொடுத்தது என்பது தான், சிறைக்குள் இருந்த நாட்களில் அவர்கள் நன்னடத்தையுடன் தான் இருந்து உள்ளனர், செய்யாத குற்றத்திற்காக வாழ்கையை இழந்து, பந்த பாசங்களை இழந்து தவித்து கொண்டுள்ள அவர்களுக்கு இதற்கு மேலும் தண்டனை தேவையா?
செய்யாத தவறுக்காக, முழுவதும் விசாரிக்கபடாத குற்றத்திற்காக, நடைமுறையில் இல்லாத சட்டத்திற்காக, ஒரு சிலரின் லாபத்திற்காக வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனை அவசியம் தானா?
இந்த குளறுபடிகளை கருத்தில் கொண்டு, இந்த மூவரின் தூக்கு நிறுத்தபட்டால் மக்களுக்கு சட்டத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை அழியாமல் காக்கப்படும், இல்லையேல்! இலங்கை போரில், லட்சம் லட்சமாய் பச்சிளம் குழந்தைகளையும், அப்பாவி பெண்களையும் சதை பிண்டங்களை பார்த்து பழகிய மனதிற்கு கூடுதலாக மூன்று அப்பாவிகளின் பிணங்களை பார்பதினால் பெரிய கேடு ஒன்றும் விளைந்து விட போவதில்லை!
வி. எஸ். வினோத் குமார்