- அந்நிய கம்பெனிகளுக்கு அடிமாடுகளாக தன்னையே தாரை வார்த்து விட்டு, குளிர் சாதன அறையில் உட்கார்ந்து நாட்டின் வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படும் தொலை நோக்கு சிந்தனையாளர்களே,
- வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு அநாதை இல்லத்திற்கு சென்று குத்தாட்டம் போட்டு தங்கள் சமூக பொறுப்புகளை நிறைவேற்றி விட்ட திருப்தியுடன் வெளியே வருகிற சமூக சேவகர்களே,
- வீட்டை சுத்தமாக வைப்பதற்காக அனைத்து குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பாதுகாப்பாக வெளியே போடுகின்ற இயற்கை ஆர்வலர்களே,
- பத்திரிகையில் எழுதப்படுகின்ற முதன்மை செய்திகளும், தலையங்கங்களும் மட்டும் தான் அரசியல் என்று நம்பும் அரசியல் வித்தகர்களே,
- வீட்டில் உள்ள ஜன்னல், கதவு அனைத்தையும் அடைத்து, ஆல் அவுட் போட்டு, கொசு வலைக்குள் புகுந்து கொள்ளும் அசகாய சூரர்களே,
- "தொழில்நுட்பம் மட்டும் தான் வளர்ச்சி"; என்று அடித்து சொல்லும் அகராதியை தலைமை பாடமாக மனனம் செய்து விட்டு வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களே; அறிவியல் அறிஞர்களே,
- மக்கள் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை உணர்ந்து கொள்ள மெனக்கெடாமல், மனதில் தோன்றிய சிந்தனைகள் அனைத்தையும், அதிகம் சாப்பிட்டு வாந்தி எடுக்க துடிக்கும் டாஸ்மாக் குடிகாரன் போல, அதிகம் சிந்தித்ததை அப்பாவி மக்கள் மேல் செயல்படுத்த துடிக்கும் விஞ்ஞானிகளே,
- பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு விழுந்திருந்தாலே எதோ கூகிள் நியூஸ் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு ஒதுங்கி போற ஈர நெஞ்சுகாரர்களே,
- தன் வீட்டு ஏ.சி ஓடவில்லை என்றாலும் அதற்கு அணு எதிர்ப்பாளர்களும், அந்நிய சக்திகளும் தான் காரணம் என்ற உண்மையை இம்மி பிசகாமல் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கும் துப்பறியும் சிங்கங்களே,
- எனக்கென்ன, எனக்கென்ன, எவன் செத்தா எனக்கென்ன, எவன் பொழச்சா எனக்கென்ன என்பதை மனசாட்சியின் காலர் டியுனாக வைத்து இருக்கும் அதி உத்தமர்களே,
- கடைசியாக, அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் தாங்கள் சந்திக்கும் அனைவரும் தங்களை போலவே ரொம்ப நல்லவர்கள் என்ற நினைப்பில் எடுத்தார் கைப்பிள்ளையாக, சூது வாது தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்பாவிகளே அன்பர்களே,
நீங்கள் எல்லாரும் ஒன்னா சேர்ந்து,
"அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்"
"மின்சாரத்திற்கு எதற்கு சிக்கனம், அணு மின் நிலையம் வேண்டும் இக்கணம்"
" வீட்டிற்கு ஒரு அணு மின் நிலையம் வைப்போம், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் விற்போம் "
போன்ற பல்வேறு அம்ச திட்டங்களை முன் வைத்து, வீதியில் இறங்கி, அரசாங்கத்திடம் போராடி, விஞ்ஞானிகளிடம் மன்றாடி, உங்கள் வீட்டு தோட்டத்தில், மொட்டை மாடியில், கார் பார்க்கிங்கில், பரணையில், கக்கூஸில், விவசாய நிலங்களில், தெரு முனையில் மற்றும் உங்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் அணு உலைகளை நிறுவி அதில் இருந்து தயாராகும் மின்சாரத்தை முழுவதுமாக ஏப்பம் விட்டு கொள்ளுங்கள், உங்களை யாரும் ஒன்றும் கேட்க மாட்டோம், உங்கள் போராட்த்தின் வெற்றிக்காக, நாங்களும், உங்களின் தோளோடு தோள் நின்று, இறுதி வரை போராடுகிறோம்.
ஜெய் ஹிந்த்!
பின் குறிப்பு: பக்கத்து இலைக்கு பாயசம் ஊத்த சொன்னா பரவாயில்ல பாஸ், பாய்சன் இல்ல ஊத்த சொல்றீங்க, கொஞ்சம் யோசிங்க அடுத்து உங்க இலை தான்!