Monday, September 17, 2012

வளர்ச்சி - என் டைரியிலிருந்து - 1 ( ஆண்டு - 2010 )




அன்று சனிக்கிழமை, வேலை செய்து கொண்டிருந்ததோ ஒரு சீன கம்பெனியில், பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும்,  சீன கம்பெனிகளை பொறுத்த வரை சனி, ஞாயிறு என்பது எல்லாம் இல்லை என்று, வேறு வழி இல்லாமல் அலுவலகத்திற்கு சென்று வேலையில் ஈடுபட்டிருந்தேன். ஹவுஸ்கீப்பிங்  பணியாளர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களில் ஒருவர் என்னருகே பணியில் ஈடுபட்டு இருந்தார், சுமார் நாற்பது வயதிருக்கும், தமிழ்நாட்டை சேர்ந்தவர், வயிற்று பிழைப்பிற்காக பெங்களூரில் குடியேறியதாக கேள்விப்பட்டேன். அவர் அருகில் வந்ததும் அவரை பார்த்து புன்னகைத்தேன், அவரும் மரியாதையை நிமித்தமாக புன்னகைத்தார், என்ன நினைத்தாரோ தெரியவில்லை,  திடீரென சுத்தபடுத்துவதை நிறுத்தி விட்டு மனம் விட்டு பேச ஆரம்பித்தார், முதலில் அவருக்கும் ஆங்கிலம் தெரியும் என ஆங்கிலத்தில் பேசி காண்பித்தார், எவ்வளவோ இயந்திரங்கள் நிர்வாகத்திடம் இருந்தும் எங்களை வருத்தி வேலை வாங்குகின்றனர் என்றார், அமைதியாக கேட்டு கொண்டிருந்தேன், வேலையை தொடர்ந்து கொண்டே இரண்டாயிரம் தான் தருகிறார்கள், பி. எப் எண்ணை வேறு மறந்து விட்டேன், வீதியில் கூட பிறந்து விடலாம், தானே ராஜா தானே மந்திரி என்று வாழலாம், குப்பையை பொறுக்கி கூட நாளொன்றுக்கு  இருநூறு ருபாய் வரை சம்பாதித்து விடலாம்,  ஆனால் ஏழையாக மட்டும் பிறக்க கூடாது, வாழவும் முடியாது, சாகவும் முடியாது என்று சொல்லி கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார், பதிலேதும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன், உண்மையை சொல்ல போனால் கூனிக்குறுகி போயிருந்தேன். அந்த மனிதரின் நிலைக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை, சுளையாக  நாற்பத்தைந்தாயிரம் வாங்குவதை நினைத்து என் உடல் கூசியது. அந்த மனிதனின் துன்பத்திற்கு நானும் ஒரு காரணம்!
எப்படி என்று சொல்ல தெரியவில்லை என்றாலும் மனசாட்சி கண்டிப்புடன் சொல்லி விட்டது,   

நிச்சயமாக நீயும் ஒரு காரணம்!

மாதத்திற்கு இரண்டு லட்சங்களை சம்பாதிபவர்களும் அவர்களை விட நூறு மடங்கு குறைவாக இரண்டாயிரம் சம்பாதிபவர்களும் ஒரே கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருகிறார்கள், ஏன் இந்த எற்றத்தாழ்வு? 

இதற்கு பெயர் தான் வளர்ச்சியோ! 

அப்படி தான் போல, இந்த முட்டாளின் அறிவிற்கு தான் அதை எட்டி பிடிக்கும் சக்தி இல்லை, இருந்தாலும் முட்டாளாகவே இருந்து விட கூடாது என்ற காரணத்தினால்,  நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதற்கும் வழி இல்லாமல், சாவதற்கும் அனுமதிக்கபடாமல் விரக்தியுடன் வாழ்வதற்கு பெயர் தான் வளர்ச்சி என்பதை தெளிவாக என் அறிவில் வெளியே சென்று விட முடியாதவாறு அடைத்து வைத்து கொண்டேன்.

ஒன்றை மனதில் நிறுத்தி கொண்டேன், என்னை கூனிக்குறுக வைத்த கடவுளை ஒரு நாள் சந்திக்கும் போது அவன் கழுத்தை நெரித்து கேட்க வேண்டும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்று? 
என்னை போலவே பதில் தெரியாமல் அவனும் கூனிக்குறுகி போயிருப்பான்!     
       

No comments:

Post a Comment