Wednesday, September 6, 2017

பாஜகவின் அரசியல்!

சாதாரண குடி மக்களுக்குள் கூச்சல், குழப்பம் விளைவிப்பது, பிரித்தாள்வது, வெறுப்புணர்வை தூண்டுவது - தொலைக்காட்சி விவாதங்களில் சம்பந்தம் இல்லாமல் கத்தி ஆட்டத்தை கலைக்க முயல்வது, மற்றவர்களின் கருத்தை கேட்க விடாமல் கத்தி கொன்டே இருப்பது - அதை கண்டிப்பவர்களையும், எதிர் கருத்துடையவர்களையும் சர்வ சாதாரணமாக நீ தேச விரோதி என்பது - இவ்வளவு தான் பாஜக வின் அரசியல்.
CMC'ல் கிறிஸ்துவர்களுக்கு முக்கியத்துவம், கிறிஸ்துவர்களுக்கு முக்கியத்துவம் என்று ஒரு மிக பெரிய கொலை குற்றத்தை, தேச விரோதத்தை செய்ததை போல பாஜகவை சேர்ந்த ஒருவர் நேற்றைய நேர்பட பேசுவில் கத்தி கொண்டிருந்தார் - மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் அமைப்பால் வெளிப்படையாக வழங்கப்பட்ட ஒரு உரிமையை ஒரு கொலை குற்றத்தை போல சித்தரித்து மக்களை தூண்டும் வேலையை செய்தது அப்பட்டமாக தெரிந்தது. அவர் இந்த உரிமையை பற்றி கண்டிப்பாக அறிந்தவர் ஆனால் திட்டமிட்டு பார்வையாளர்களை manipulate செய்கிறார். மக்களுக்கான அரசியல் பேசாமல் இந்த மாதிரியான மட்டமான தந்திரங்கள் மூலம் எதை சாதிக்க போகிறீர்கள்?

Rights of Minority Educational Institutions: 


முடிந்தால் சிந்தியுங்கள் - NEET, CMC & சமவாய்ப்பு!

நண்பர் வட்டத்தில் உள்ள சிலர் CMC'யில் கிறிஸ்துவர்களுக்கு அதிக இடங்களை அளிப்பதை அயோக்கியத்தனம் என்று விமர்சித்திருந்தனர் - பிராமணனுக்கு மட்டுமே வீடு என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமோ அதே அளவு அல்லது  அவர்கள் பார்வையில் இருந்து பார்க்கும் பொழுது  அதை விட பெரிய அயோக்கியத்தனம் தான் இது, அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை - எப்படி பிராமணனுக்கு மட்டும் வீடு தருவதற்கு இவர்கள் நியாய தர்மங்கள் வைத்துளார்களோ அதே போல அவனும் எதோ ஒரு நியாய தர்மத்தை வைத்து இருப்பான் என்பதில் சந்தேகமில்லை..    ஆனால் இங்கு பிரச்சனை அது இல்லை - சார்பற்ற நிலையில் தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய சம வாய்ப்பை அளிக்க தவறும் அரசாங்கமும், அரசு எந்திரமும் தான் பிரச்சனை. 

நான் தமிழ் வழியில் வொகேஷனல் பாட பிரிவில் படித்து  தமிழ் நாடு நுழைவு தேர்வின் வழியாக என்.ஐ.டி(NITT) திருச்சியில் பொறியியல் படித்தவன் - என்னுடைய Batch தான் தமிழ் நாடு நுழைவு தேர்வின் மூலம் என்.ஐ.டி யில் சேர்ந்த கடைசி Batch.  என்னுடைய Batchல் பலர் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் இருந்து தன் சுய முயற்சியாலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியாலும், தொண்டு நிறுவனங்கள் உதவியாலும் படித்தவர்கள் பலர், சாப்பிடவும்,  கல்லூரி கட்டணம் கூட கட்ட முடியாத நிலையில் சிறு சிறு வேலைகள் செய்தும், கடன் வாங்கியும் படித்தவர் பலர், ஒன்று இரண்டு வரி கூட ஆங்கிலம் பேச தெரியாமல்(என்னையும் சேர்த்து) திக்கி திணறியவர்கள் பலர் - இவர்கள் யாருமே எந்த விதத்திலும் unfit கிடையாது, அவர்களுக்கான மிக குறைந்த வசதிகளையும், வாய்ப்புகளையும்  கொண்டு சிறப்பான இடத்தை அடைந்தவர்கள் அவர்கள் - இன்று அவர்கள்  அனைவரும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக துறையில் சிறப்பான ஒரு இடத்தை அடைந்துள்ளனர் அவர்களை சார்ந்தவர்களும் நல்லதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எங்களுக்கு அடுத்த batchல் இருந்து அகில இந்திய நுழைவு தேர்வு மூலம் கல்லூரியில் சேர்ந்தவர்கள், அந்த batchல் பெரும்பகுதி நகர வாசிகளாகவும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் திறமை பெற்றவர்களாகவும், பெரும்பாலும் மேல் தட்டு சமூகத்தை சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள், எளிமையாக சொல்ல வேண்டுமானால்   நுழைவு தேர்வுக்காக சிறப்பான ஒரு பயிற்ச்சி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பும் வசதியும் பெற்றவர்கள் மட்டுமே கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள் - இதனால் கல்வியின் தரம் உயர்ந்து விட்டது, நாடு முன்னேறி விட்டது என்றெல்லாம் வெற்று  கோஷம் போடாதீர்கள் - அரசு பணத்தில் படித்த பெரும்பாலானோர் (எங்கள் batchயும்  சேர்த்து) Corporate நிறுவனங்களுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும் லாபம் சம்பாதித்து கொடுப்பதில் தங்கள் தூக்கத்தையும், வாழ்க்கையும் இழந்து கொண்டிருப்பதை தவிர  பெரிதாக ஒன்றையும் கிழித்து விடவில்லை.       

சமூக நீதி என்பது சாதிய ரீதியாக மட்டும் சுருங்கி விடாமல் சாதியம், வாழ்க்கை சூழல், பொருளாதார நிலை போன்ற பல்வேறு காரணீகளையும் உள்வாங்கி விரிவடைந்தால் நிச்சயம் மிக துல்லியமான, சர்ச்சைகளற்ற சமூக நீதியை நோக்கி நகர முடியும்.   

*அலோபதி கல்வி பற்றி எனக்கு துளி அளவும் உடன்பாடில்லாவிட்டாலும் சமூக நீதி என்ற அடிப்படையில் இதை பற்றி பேசுவது அவசியமாகிறது.

#NEET #CMC #Natural_Justice #Equal_Opportunity #All_India_Entrance #Anitha 

Saturday, March 14, 2015

"நோய் உங்கள் நண்பன் - 3"



"நோய் உங்கள் நண்பன் - 3" - உணவு சில கருத்துக்கள்!
1. எந்த ஒரு இலை, காய், கனி, விதை, பருப்பு, தானியம் மற்றும் வேரை சமைக்காமல் அப்படியே உண்ண முடிகிறதோ அவை மட்டுமே தேவையான உணவாக எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் உடலால் ஏற்று கொள்ளப்படும்.
2. அப்படி சமைக்காமல் நம்மால் எவ்வளவு உண்ண முடிகிறதோ அந்த அளவே சரியான அளவாக உடலால் ஏற்று கொள்ளப்படும். சில உணவுகளை வயிர் நிறையும் அளவு உண்ண முடியும், சில உணவுகள் மிகுதியான சுவையின் காரணமாக போதும் என்ற எண்ணம் தோன்ற தொடங்கி விடும்.
3. எந்த ஒரு உணவையும் அதன் இயற்கை தன்மை மாறாமல் ( சமைக்காமல், அரைக்காமல், ..), அல்லது குறைந்த மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு உட்கொள்ளும் போது அவற்றின் முழுப்பயன்/ அதிகப்படியான பயன் கிடைக்கும்.
4. சமைக்காத உணவை உண்ணும் போது அவற்றில் சத்துக்களை தேடியோ, திட்டமிட்டோ உண்ண வேண்டிய அவசியமில்லை, எந்த ஒரு உணவையும் தவிர்க்காமல், விரும்பும் நேரத்தில்(பசித்து), விரும்பும் அளவில் உணவை உட்கொள்ளலாம்.
5. பசிக்காமல் எந்த ஒரு உணவையும் உட்கொள்ளாமல் இருந்தாலே ஆரோக்கியம் பெருகி, நோய் அகலும். இதையே திருவள்ளுவர்,
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
என்கிறார். மருந்து அதிகாரத்தில் உள்ள பெரும்பான்மையான குறள்கள் இதையே வலியுறுத்துகின்றன.
6. லேசான சுவையுள்ள, நீர்சத்து அதிகம் உள்ள, எளிமையான உணவுகளையே இயற்கை தத்துவம் சிறந்த நேர்மறை உணவு ( Positive Food) என்கிறது, இத்தகைய உணவுகள் நம் அன்றாட வாழ்வில் அதிகம் இருத்தல் நலம்.
7. உடலுக்கு தேவையான உணவுகள் அதிகம் கொடுக்கும் அதே நேரத்தில் மனதிற்கு பிடித்த உணவுகளையும் சிறிது கொடுத்து வருவது உடலும், மனமும் இணக்கமாக செயல்படுவதற்கு உதவும், அத்தகைய உணவுகளை உட்கொள்ளும் போது அவை சரியாக செரித்து வெளியேறும் வரை பிற உணவுகளை உட்கொள்ளாமல் இருத்தல் நலம்.
(அடுத்த பகுதியிலும் உணவை பற்றிய குறிப்புகள் தொடரும்)
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
-தொடரும்
பின் குறிப்பு: டாக்டர் அருண் சர்மா அவர்கள் விதைத்த இயற்கை வாழ்வியல்/ மருத்துவம் குறித்த கருத்துக்களின் தாக்கம் மற்றும் அவருக்கு நன்றி செய்யும் முயற்சியின் விளைவு தான் இந்த தொடர் கட்டுரை.

"நோய் உங்கள் நண்பன்" - 2



"நோய் உங்கள் நண்பன்" - நோயற்ற வாழ்விற்கும், நோயிலுருந்து விடுபடுவதற்குமான வழி!
மனித உடல் உட்பட பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளும் வெளி(Space), வளி(Air), ஒளி(Light), நீர்(Water), நிலம்(Land) ஆகிய பஞ்சபூதங்களினால் ஆனவை. எப்படி மரத்தினாலான ஒரு உடைந்த நாற்காலியை மரத்துண்டை வைத்து மட்டும் தான் சரியாக சீரமைக்க முடியுமோ, அதே போல பஞ்ச பூதங்களினாலான இந்த உடலையும் அவற்றை கொண்டு மட்டும் தான் சரியான முறையில் சீரமைக்க முடியும். இன்றளவிலும் மனிதன் தவிர்த்த அனைத்து உயிரினங்களும் தங்கள் உடலை நோயிலிருந்து பாதுகாப்பதற்கும், நோயற்ற வாழ்வை வாழ்வதற்குமான தற்சார்பை(Sustainability) பெற்றுள்ளது, மனிதன் சூழல்(Environment) மற்றும் வாழ்வூக்கம் ( Life Instinct) ஆகிய இயற்கை விதிகளிலிருந்து பெருமளவு விலகி சென்றதின் விளைவே இன்று காணப்படும் எண்ணற்ற மருத்துவ முறைகளும் ( Medicinal Systems), மருந்துகளும், ஒன்று தொட்டு ஒன்றாக நோயிலிருந்து விடுபட முடியா செயன்முறை நிலையும்( Recursive State), வாழக்கூடிய சுழலை சரி செய்து கொள்வதன் மூலமும், இழந்த வாழ்வூக்கத்தை( Life Instinct) திரும்ப பெறுவதின் மூலமும் மனிதன் நோயிலிருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வை வாழும் தற்சார்பை அடைய முடியும்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
-தொடரும்
பின் குறிப்பு: டாக்டர் அருண் சர்மா அவர்கள் விதைத்த இயற்கை வாழ்வியல்/ மருத்துவம் குறித்த கருத்துக்களின் தாக்கம் மற்றும் அவருக்கு நன்றி செய்யும் முயற்சியின் விளைவு தான் இந்த தொடர் கட்டுரை.
image credits: www.parliament.uk

"நோய் உங்கள் நண்பன்"



பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தன்னை தானே சீர்படுத்தி/காப்பாற்றி கொள்ளும் நுண்ணறிவோடு(Creative Intelligence) படைத்துள்ளது இயற்கை, இதற்கு மனித உடலும் விதி விலக்கல்ல. பொதுவாக நோய் என்பது நம் உடலின் இயலாமையை/ உடலியக்கத்தின் தோல்வியாகவே மருத்துவ உலகால் பார்க்கப்படுகிறது, ஆனால் இயற்கை தத்துவத்தின் படி நம் உடலில் உள்ள அழுக்குகளை வெளிக்கொணரவும், உடல் மற்றும் உயிர்க்கு ஏற்பட்ட சேதத்தை சரி படுத்தவும், மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உயிர் செய்ய கூடிய அப்பழுக்கற்றமுயற்சி தான் நோய். பெரும்பாலான மருத்துவ முறைகள் அந்த முயற்சியை தடை செய்ய முற்படுகிறதே(Symptomatic Treatment) தவிர அந்த முயற்சி எதற்காக(Root Cause) உயிரால் எடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. பொதுவாக வாந்தி, பேதி, சளி மற்றும் வலி போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் அவற்றை மூடி மறைக்கவே(suppressant) கொடுக்கப்படுகிறது, அவற்றை சீர் படுத்த அல்ல, அப்படி மூடி மறைக்க(suppress) செய்யப்படும் முயற்சிகள் உடலில் இருந்து கழிவுகள் வெளிவருவதையும், அந்த நோயை சீர்படுத்த உயிர் செய்யும் முயற்சியையும் தடுத்து அதுவே பின்னாளில் அந்த நோய் வலுப்பெற்று அதே வடிவிலோ வேறு ஒரு நோயாகவோ வெளிப்பட காரணமாக அமைந்து விடுகிறது.
சரி எப்படி நோயில்லாமல் வாழலாம்?
இயற்கை தத்துவத்தின் படி ஆரோக்கியத்தை பெருக்குவதே நோயிலிருந்து விடுபடும் வழி. ஆரோக்கியத்தை பெருக்கும் முயற்சி உடலின் மொழியை புரிந்து அவற்றுக்கு பதிலளிப்பதில் இருந்து தொடங்குகிறது, நான் புரிந்து கொண்ட பத்து கட்டளைகளை உங்களுக்காக பகிர்கிறேன்,
1. பசித்து புசிப்பது.
2. இயற்கையின் தன்மை மாறாத உணவுகளை உண்பது.
3. தாகத்தை உணர்ந்து அதற்கு தகுந்த அளவு தண்ணீர் குடிப்பது.
4. உடல் சோர்வடையும் போது தகுந்த ஓய்வளிப்பது.
5. சரியான அளவு தூங்குவது.
6. சூரிய ஒளி உடலில் பட அனுமதிப்பது.
7. உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது.
8. உடலின் அனைத்து பாகங்களும் இயங்கும் வகையில் உடற்பயிற்சி செய்வது.
9. செய்யும் வேலையை முழு மனதுடன் செய்வது .
10. மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
-தொடரும்
பின் குறிப்பு: டாக்டர் அருண் சர்மா அவர்கள் விதைத்த இயற்கை வாழ்வியல்/ மருத்துவம் குறித்த கருத்துக்களின் தாக்கமும், அவருக்கு நன்றி செய்யும் முயற்சியின் விளைவு தான் இந்த கட்டுரை.

Tuesday, November 5, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 11!

இன்றைய சுழலில் நாகரிகம் என நம் சமூகம் சிந்திப்பது அனைத்துமே எதொ ஒரு விதத்தில் கன்சுயுமரிச சிந்தனைகளை நமக்குள் விதைப்பவைகளாக தான் இருக்கின்றன. 

மனிதர்களை ஆழ்ந்து நேசிக்க கூடிய மனநிலை சுருங்கி, தேவையின் அடிப்படையிலான நட்பு, உறவு, காதல் என்ற கன்சுயுமரிச மனநிலை சமூகத்தின் நிச்சயத்தன்மையை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றன. பெருகி வரும் முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் காப்பகங்களும், விவாகரத்து வழக்குகளும், ப்ரேக் அப்களும், துரோகங்களும், ரோட்டோர பிச்சைக்காரர்களும், அநாதை பிணங்களும், வன்ப்புணர்வுகளும் இதைத்தான் நமக்கு சொல்லி கொண்டிருக்கின்றன.

கார்ப்பரேட்களும், மீடியாக்களும் சேர்ந்து கட்டமைக்கும் நாகரிகங்களை தூக்கி சாக்கடையில் வீசி விட்டு, நாகரிகமான மனிதர்களாக சக மனிதர்களை நேசிப்போம்.

முடிந்தால் சிந்தியுங்கள்.

Wednesday, June 12, 2013

இயற்கையை போற்றி வளர்த்திடுவோம்!

காகித கப்பில் டீ குடித்து
பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் அருந்தி
தெர்மாகோல் ப்ளேட்டில் சோறுண்டு
கேரி பேக்கில் பொருள் வாங்கி
ஏ சி ரூமில் படுத்துறங்கி
சாயப்பூ உடையணிந்து
கார்பன் மோனக்சைட்டில் பயணித்து
சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டி
செவிக்கிழிய பேசிடுவோம் - இயற்கையை
போற்றி வளர்த்திடுவோம்!

தூப்புக்காரி !

வார்த்தைகளால் ஜாலம் செய்யாமல்,போலியான விறு விறுப்புகளுக்காக மெனக்கெடாமல்; வலிகளையும், ரணங்களையும் கொண்டு மெய் சிலிர்க்க
வைத்து விட்டார் மலர்வதி. நெஞ்சில் கணத்தையும், விழிகளில் ஈரத்தையும் சர்வ சாதாரணமாக ஏற்படுத்தக்கூடியவள் இந்த தூப்புக்காரி; இறுதி
பக்கங்களில் வாழைப்பழத்தில் உசியை இறக்குவது போல் இலகுவாக உங்கள் உயிரில் வலியை இறக்கி விடுவாள்.

இரா. நடராசனின் ஆயிஷாவிற்கு பிறகு என்னை நிலை குலைய வைத்த மலர்வதியின் இந்த தூப்புக்காரி கேள்விகள் ஏதும் இன்றி கொண்டாடப்பட வேண்டியவள் தான்..

விதையிலுருந்து மரம்!

பாபநாசத்தில் பூவுலகின் நண்பர்கள் நடத்திய விதையிலுருந்து மரம் பயிற்சி பட்டறை இயற்கையின் மீதான காதலை மேலும் தீவிரப்படுத்தி விட்டது.

சென்னை திரும்பிய நிமிடத்திலிருந்தே அடுத்து எப்படா இப்படி இயற்க்கையோடு கொஞ்சி, குலாவி காதலை வளர்ப்பது என ஏக்கமாக இருக்கிறது; பூகம்பமே வந்தாலும் எட்டு மணி வரை அசையாத ஒருவன் (வேற யாரு நான் தான்) இப்படி நாலு மணிக்கே எழுந்து உக்காந்து விட்டத்த பார்த்து  யோசிச்சா என்ன அர்த்தம் ?! - பியார் முத்தி போச்சு.

#உண்மை காதலுக்கு உதவ காத்திருப்போர் கவனத்திற்கு!

பின் குறிப்பு: எனக்கு தெரிஞ்சு இன்னும் இயற்க்கைன்னு எல்லாம் எந்த பொண்ணுக்கும் பேர் வைக்கல - எதையாவது கெளப்பி விட்டுடாதிங்க பாஸ்.

எல்லாம் வல்ல இயற்கை!

ஒரு நல்லவர் மூன்று மாதங்களில் சென்னையில் குப்பையையே பார்க்க முடியாது என அறிவித்தார் - ஒரு வருடத்திற்கு முன்பு! இந்த உலக சுற்று சுழல்
தினத்திலாவது அவருக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி கொள்கிறேன்..

எது பார்ப்பனீயம்!

பாக்கியம் ராமசாமி எழுதிய "அப்புசாமியும் ஹிப்னாடிச பூனையும்" படித்து கொண்டு இருந்தேன், நல்ல நகைச்சுவையோடும், சுவாரஸ்யமாகவும்,
விறுவிறுப்பாகவும் அமைந்திருந்த கதைக்களம் புத்தகத்தை கீழே வைக்கவே அனுமதிக்கவில்லை; திடீரென கதையின் கடைசி பக்கங்களில் தேச விரோத
சக்திகள், புலிகள், பிரபாகரன் என சம்பந்தமே இல்லாமல் கதை கரைபுரண்டி ஓட ஆரம்பித்தது. இதற்கு பெயர் தான் பார்ப்பனீயம் போல என நொந்து
கொண்டேன்.

ஆதார் அட்டையும்; கழண்ட டவுசரும்!

செத்தாலும் ஆதார் அட்டை வாங்க கூடாது என தீர்க்கமாய் இருந்தவனை, பிறந்த நாள் என்றும் பாராமல் ஆதார்க்கு போட்டோ எடுத்து வந்தால் தான்
சோறு என மிரட்டியதால் வேறு வழி இன்றி அவசர அவசரமாய் குளித்து பொடி நடையாக நடந்து மையத்தை அடைந்தேன், சரி சட்டு புட்டுன்னு
முடிச்சிட்டு கிளம்பிடலாம்னு பார்த்தா ஒரு ஐம்பது, அறுபது பேர் எனக்கு முன்னாடியே துண்ட விரிச்சி உக்காந்திருக்காய்ங்க, அதிலும் ஒரு சிலர்

என்னவோ ஷங்கர் படத்துல நடிக்க சான்ஸ் கேட்டு வந்தவய்ங்க மாதிரி புல் மேக்கப்போட ஆஜர் ஆயிருந்தாங்க. நிலைமையை நொந்து கொண்டே ஒரு
கியூவில் போய் நின்றேன்.

போன வாரம் செம கூட்டம்ல, இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல. ஒரு அக்கா உற்சாகத்துடன் சொல்லி கொண்டிருந்தாள்.

இந்த டாமி எப்பவுமே இப்படி தான் கூடவே வந்து தொல்ல பண்ணும். ஏய் ஓடு.. தன் செல்ல பிராணியை துரத்தி கொண்டிருந்தாள் இன்னொரு அக்கா.

பையன் ஊரிலுர்ந்து இப்ப தான் வந்தான், முகம் கழுவ போயிருக்கான். இதோ வந்துடுவான். அங்கு இருந்த ஒரு ஆபிசரிடம் சொல்லி கொண்டிருந்தாள்
பாட்டி ஒருத்தி.

மொதல லெப்ட் கைய வைக்கணும் அப்பறம் ரைட் கைய வைக்கணும் அப்பறம் பெரு விரல் ரெண்டையும் வைக்கணும் அப்பறம் அந்த பைனாகுலர்ல

பாக்கணும். அவ்வளவுதான். ஒரு வயதான பாட்டிக்கு விளக்கி கொண்டிருந்தார் சீனியர் ஒருவர் (ஆமாங்க நமக்கு முன்னாடியே எடுத்துட்டார்ல அப்ப சீனியர் தானே)

தம்பி தலைய நேரா வச்சு இந்த கேமராவ பாரு. முகத்த மேல தூக்கு, கண்ண மூடாத. ஒழுங்க ஒக்காரு. நீண்ட நேரமாக ஒரு சுட்டி சிறுவனிடம்
மன்றாடி கொண்டிருந்தார் ஒரு ஆபீசர்.

யோவ் எனக்கு பின்ன தானே வந்த நீ பாட்டுக்கு முன்ன போற.
அண்ணே அவரு பேஷெண்ட்.
அதுக்கு நான் என்ன பண்றது போய் கியூல வாங்க. எனக்கும் தான் உடம்பு சரி இல்ல.
போங்க போய் கியூல வாங்க.. வந்துட்டானுங்க @#$%^&*():"(பின்னாடி இருந்த அனைவரும் கோரஸாக)
வெற்றி களிப்புடன் ஒரு நடுத்தர வாலிபர்.

அந்த கியு எவ்வளவு வேகமா நகருது இங்க பாருங்க. வழக்கமான பொலம்பலுடன் பக்கத்து ஆசாமி.

டேய் தம்பி மண்ணில விளையாடுவையா பாரு கை ரேகை சரியாவே வர மாட்டேங்குது, ஒரு ரெண்டாவது படிக்கும் சிறுவனிடம் ஆபீசர்.

ஒரு வழியாக பேராக்கு பார்த்து கொண்டே நம் முறையும் வந்தது. அப்படியே போய் பத்து விரல்களின் ரேகைகளையும் கொடுத்து கண் கருவிழியின் ரேகைகளையும் கொடுத்து, க்ளோஸ் அப்பில் (நல்ல வேலை ஆபீசர் பயப்படவில்லை) ஒரு போஸ் கொடுத்து, பெயரில் உள்ள எழுத்து பிழைகளை சரி செய்து ரேஷன் அட்டையை வாங்கி கொண்டு கிளம்பினேன்.

ஆதார் அட்டை என்ற பெயரில் ஒரு மனிதனின் தனித்துவமான பத்து விரல் ரேகைகளையும், கண்ணின் கருவிழி ரேகையையும் பதிவு செய்து தன்

குடிமக்கள் மீது ஒரு கட்டற்ற அதிகாரத்தை நிறுவ முயலும் இந்த திட்டம் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஒரு மனித உரிமை மீறல் தான்.

பின்னொரு காலத்தில் குடிமக்களின் மரபணு. ஸ்டெம் செல்களை கூட தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த அரசு முயலும் அப்பொழுதும் கூட இந்த
எளிய மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதே ஈடுபாட்டுடன் அதை வாரி வழங்குவார்கள்.

காரணம் கேள்வி கேட்பது இங்கு தேச துரோகம்.

Friday, April 5, 2013

இயற்கையின் எதிர்வினை!



ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, கடுமையான பாறைகளை கொண்டு பஞ்சபூதங்களை ஒருங்கிணைத்து, இயற்கை கட்டமைத்த பிரம்மாண்ட மலைகள் இன்று சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை கொண்டும், திறன் மிகுந்த ராட்சத இயந்திரங்களை கொண்டும், அன்றாடங்காய்ச்சிகளாக வாழக்கூடிய மனிதர்களின் சக்தி கொண்டும், சிறிது சிறிதாக தரைமட்டமாக்கபடுதவதை காணும் பொழுதெல்லாம் தொழில்நுட்ப்ப வளர்ச்சியை நினைத்தோ, மனித உழைப்பின் சக்தியை நினைத்தோ புளங்காகிதம் அடைய முடியவில்லை, மாறாக மனிதனின் சுயநலத்தேடல்களுக்காக இயற்கைக்கு எதிராக அவன் ஆற்றி கொண்டிருக்கும் வினைகளுக்கு இயற்கை ஆற்ற இருக்கும் எதிர்வினைகளை நோக்கி கவலைப்பட வேண்டியதாயுள்ளது.

மகிழ்ச்சி!

மகிழ்ச்சி மிகச்சிறந்த அனுபவமாக இருந்தாலும் கூட அதனூடே சிறந்த மனிதர்கள் வடிவமைக்கப்படுவதில்லை, மாறாக கடுமையான வலியை ஏற்படுத்த கூடிய அனுபவங்களும், நெருக்கடி சந்தர்ப்பங்களும் மிகச்சிறந்த மனிதர்களையும், ஆளுமைகளையும் வார்த்தெடுத்து விடுகிறது.

Wednesday, April 3, 2013

ஏர்டெல்!

தற்போது தான் ஏர்டெல் நிர்வாகி பேசினார்.. 
எதுக்காக ஏர்டெல்ல இருந்து மாற விரும்புரிங்கனு தெரிஞ்சக்கலாமா?
இலங்கை போரில ஏர்டெல் செய்த துரோகத்திற்காக ஏர்டெல்ல புறக்கணிக்கறதுனு முடிவு பண்ணி இருக்கோம் அதான்.சிரித்து கொண்டே தொடர்தேன் நீங்களும் இந்த வேலைய விட்டுட்டு வேற நல்ல வேலையா பாருங்க.
அவசர அவசரமாக ஏர்டெல்லை அழைத்ததற்கு நன்றின்னு வச்சிட்டாரு 
#யோவ் நீ தான்யா போன் பண்ண :-)!

கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே!

நம்ம கனவு வியாபாரியும், நாசாவும் கல்பாக்கம் மக்களுக்கு எதாவது 10 அம்ச திட்டம் வச்சி இருப்பாங்களே கொஞ்சம் எடுத்து விடுறது. 

#கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே.

பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம்!

தனித்தமிழ் ஈழத்திர்கான பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை, ஈழ மக்களின் மறுவாழ்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களின் போராட்டம் போன்றதொரு போராட்டம் நம் கல்லூரி மாணவர்களாலும் முன்னெடுக்க பட வேண்டும். பொதுவாகவே பெரிய கல்லூரிகளின் படிக்க கூடிய மாணவர்கள் சமூக பிரச்சனைகளில் இருந்து தங்களை தூரப்படுத்தி கொள்ளும் போக்கு இனி மேலும் நமக்கு வேண்டாம். சக மாணவர்களின் போராட்டங்களில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு அவர்களுடன் கூடி போராட நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். தொழில் நுட்ப ரீதியாக நம் கை மேலோங்கியிருக்க கூடிய நிலையில் நாம் கையிலெடுக்க கூடிய சமூக பிரச்சனைகள் தீர்வுகளை நோக்கி வேகமாக பயணிக்க கூடும். பொருள் சார்ந்த சிந்தனைகள் மனிதர்களான நம் உணர்வுகளை மழுங்கடித்து விடாது என்பதை நிரூபிப்போம். மிக பெரியதொரு சமூக எழுச்சிக்காக உங்கள் 
சிந்தனைகளையும் உணர்வுகளையும் கூர்மைப்படுதுங்கள். 

வெடிப்புற பேசுவோம், வீரியம் பெருக்குவோம், வையத்தலைமை கொள்வோம், பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம். 

#ஈழம் என்றல்ல அனைத்து சமூக பிரச்சனைகளிலும், சக மனிதனாய் எழுவோம். சமூக மாற்றத்தை துரிதப்படுத்துவோம். அரசியலை மாற்றியமைப்போம்.

மனிதனாக முழுமை அடைவது!

பல்வேறு சந்தர்பங்களில் ஏற்படுகின்ற மனத்தாக்கங்களை திறந்த மனதோடு தன்னுள் பயணிக்க அனுமதித்து, அவை ஏற்படுத்த கூடிய மெல்லிய மாற்றங்களை தக்க வைத்து கொள்பவனே மனிதனாக முழுமை அடைகிறான்.

உண்மையான மனிதன்!

உண்மையான ஹிந்து, உண்மையான முஸ்லிம், உண்மையான கிறிஸ்துவன் என சிதறி கிடக்கும் மதவாத கூட்டத்திற்கு நடுவே உண்மையான மனிதர்களின் கடைசி தடயங்கள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு வருகின்றது. 
#எந்த ஒரு மனிதனல்லாத உண்மையான மதவாதியையும் கடுமையாக எதிர்க்கிறேன்

"நான் உங்களை நேசிக்கிறேன்"

நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களோடு அதிக நேரம் செலவிடவும், கல்லூரி நாட்களை பற்றி அசை போடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மனதில் நினைத்த உடனே நினைவுகள் மூலம் கடந்து வந்த அனைத்தையும் அருகில் கொண்டு வந்து விடுகிற கலையை கடந்த சில வருடங்களும், கடந்து வந்த சில மனிதர்களும் எனக்கு சொல்லி கொடுத்து விட்டார்கள். 

இயற்கை மகிழ்ச்சிக்கான விதைகளை என்னிடத்தில் சற்று அதிகமாகவே புதைத்து விட்டது போல, எத்தனை நண்பர்கள், சொந்தங்கள்! மனத்தொய்வுகளுக்கு நடுவே இவர்கள் அன்பை கொண்டு செய்யும் மோடி மஸ்தான் வித்தை இருக்கிறதே.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்ப துளிர்களும், தொய்வுகளும் மாறி மாறி வருவது கூட ரோலர் கோஸ்டர் பயணத்தை போன்றதொரு மயிர்கூச்சரியும் அனுபவமாக தான் இருக்கிறது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழியே என்னை உயிர்ப்போடு வைத்து இருக்கும் உள்ளங்களுக்கெல்லாம் சொல்லி கொள்ள விரும்புவது -

"நான் உங்களை நேசிக்கிறேன்"

#எசஸ்க்யுஸ் மீ ஜென்டில்மென் - காதலர் தின ஜுரத்திற்கு நடுவே இப்படியொரு பதிவை போட்டதற்கு :-)!

கொள்ளையடிக்கப்பட்டவை!



வீணடிக்கப்படும் ஒவ்வொரு பருக்கை உணவும் பசியோடு இருக்கும் ஒரு உயிரின் 'எதோ ஒரு செல்லின்' வாழ்நாளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை!

டவுன் பஸ் ஞானி!

வாயை மூட கற்று கொண்டு விட்டால் கவனிக்க தொடங்கி விடலாம்;
வாயோடு கண்களையும் மூட பழகி விட்டால் சிந்திக்க பழகி விடலாம்;
வாய் மற்றும் கண்ணோடு காதையும் சேர்த்து மூட முடிந்து விட்டால் ஞானி ஆகி விடலாம்! 
#டவுன் பஸ்ஸில் சீட் கிடைத்த சந்தோஷத்தில் சிந்தித்தது :-)

சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை!

தன்னெழுச்சியாக பரவி வரும் மாணவர் போராட்டங்களை பார்க்கும் பொழுது இறந்து போன நம்பிக்கைகள் துளிர்த்தெழ ஆரம்பித்துள்ளன. என் தலைமுறையை சார்ந்த சக வயது காரர்ககள் மேல் இருந்த கவலைகள், கோபங்கள், வருத்தங்கள் இந்த மாணவர்களின் எழுச்சியின் முன் அர்த்தம்மற்றதாய் ஆகி விட்டன. சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை வென்று விடுவோம் என்பதை தவிர.

உணர்வுகளின் எழுச்சி!

பொய் பிரச்சாரங்களும், போலி குற்றச்சாட்டுகளும் உணர்வுகளை எழுச்சி பெற செய்யுமே தவிர வீழ்த்தி விடாது. 

#கூடங்குளம்!

போதும் துருப்பு சீட்டுகள்!

பல லட்சம் உயிர்களின் சாம்பலை பார்த்தும் மௌனத்தை கலைக்கவில்லை இந்த உலகம், இறந்து சாம்பலானது போதும் நின்று போராடி நியாயம் கேட்க வேண்டிய நேரம் இது. நம் கையில் 2 லட்சம் உயிர்கள் துருப்பு சீட்டுகளாக இருக்கிறது இதற்கு மேலும் ஒரு துருப்பு சீட்டு வேண்டாம். இனிமேலும் ஒரு உயிரை நாம் இழந்து விட கூடாது.

ஜெய்ஹிந்த்!

இலங்கை கடற்படையினரின் பிடியில் இருக்கும் சகோதரனின் பிரிவின் வலியை உணர்த்தும் அந்த சிறுமியின் அழுகை என்னவோ செய்கிறது.
#மிக முக்கியம் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு. ஜெய்ஹிந்த்!

மனநிலைக்கு பதில் சொல்லுதல் !

ஒருவரின் மனநிலைக்கு பதில் சொல்வதென்பது நீரில் விழுந்த தேளை காப்பாற்றிய யோகியின் கதை தான். 
#நீதி: நீங்கள் யோகியாக இருந்தால் மட்டும் மனநிலைக்கு பதில் சொல்லுங்கள்.

Tuesday, April 2, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 10!




விலைவாசிகளை அதிகரிப்பதிலும்;

பொருளாதார இடைவெளியை விரிவுப்படுத்துவதிலும்;

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதிலும்;

மக்களை பொருள் நெருக்கடியில் சிக்க வைத்து அவர்களை இயங்க விடாமல் செய்வதிலும்;

வளர்ச்சி என்ற மாயையை கொண்டு மனிதத்தை சிதைப்பதிலும்;

சுற்றுச்சுழலை  பாழ்படுத்துவதிலும்;

அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஊழல்வாதிகளாக  மாற்றுவதிலும்;

நேர்மையாக இயங்க விரும்பும் வெகு சிலரையும்  இல்லாமல் செய்வதிலும்;

தங்கள் விருப்பு, வெறுப்பு, லாப நஷ்டத்திற்காக சட்டங்களை வலைப்பதிலும்;

அநியாயமான நியாயங்களை வகுப்பதிலும்;

நீதி கேட்டு நடக்க கூடிய போராட்டங்களை சிதைப்பதிலும்;

அந்நிய சக்திகளுக்காக இந்தியாவை தாரை வார்த்து கொடுப்பதிலும்;

இந்த பெரு முதலாளிகளின் கை ஓங்கி கொண்டே இருக்கிறது.          




அதிக அளவிலான குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களை  உருவாக்குவதன் மூலம் பெருமளவு மக்களை பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு விட முடியும், அதே நேரத்தில் கட்டுக்கடங்கா சக்திகளையும், அதிகாரங்களையும் குவித்து வைத்திருக்க கூடிய இந்த பெரு முதலாளிகளை அடித்து விரட்டி விட முடியும்.

பல ஆயிரம் வருடங்களாக நம் மரபணுவில் பதிந்து விட்ட அடிமை செல்களை  உடைத்தெறிந்து இதை நம்மால் சாத்தியப்படுத்தி விட முடியுமா?

முடிந்தால் சிந்தியுங்கள்!

Monday, March 4, 2013

மகிழ்ச்சியின் ரகசியம்!




வியாழக்கிழமை மாலை சுமார் ஏழு மணியிருக்கும், சைதை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி மார்க்கெட் அருகே இருக்கும் நடை பாதை கடைகள் வழியாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.  எத்தனை முறை தங்கள் வாழ்வாதாரமான அந்த கடைகள்  அகற்றப்பட்டாலும் அத்தனை முறையும் முளைத்து விடுகின்ற நவீன இந்தியாவின் 'பினிக்ஸ் பறவைகள்' அந்த எளிய மனிதர்கள்!

இப்பொழுதெல்லாம் நடைப்பாதை கடையினர் கூவி விற்பதை யாரும் கண்டு கொள்வதே இல்லை, பெரும் தொகை செலவிட்டு செய்யப்படும் விளம்பரங்களுக்கும் பல வித இயந்திர இரைச்சல்களுக்கும் இடையே இந்த அன்றாடங்காய்ச்சிகளின் குரல் பலவீனமானதாகவே ஒலிக்கிறது! என்ன செய்ய?

எண்ண ஓட்டத்தோடு நடையின் வேகத்தையும் தீவிரப்படுத்தினேன்.

தீடிரென கேட்ட சத்தமான சிரிப்பு சத்தம் நடையின் வேகத்தை சற்று குறைத்து விட்டிருந்தது.  

'அட இங்க பாருடா என் முருங்கை கீரைக்கு எவ்வளவு வெளிச்சம்', கீரைக்கார பாட்டி தெருவோர சோடியம் லைட்டின் வெளிச்சம் அவளின் 'விற்காத முருங்கைக்கீரையின்'  மேல் பட்டு விட்டதற்கு சந்தோஷப்பட்டு கொண்டிருந்தாள்.

கேட்டு கொண்டே அவளை கடந்து விட்டேன். வீடு சேர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேலும் அந்த வார்த்தைகள் மனதில் மீண்டும் மீண்டும் பிரசவித்து கொண்டிருந்தன.    

என்னிடம் இருந்து எதையோ எடுத்து சென்ற அந்த வார்த்தைகள், சற்று நேரம் கழித்து எதையோ கொடுத்து விட்டு சென்றிருந்தது! - "எளிய மனிதர்கள் தங்களின் சின்ன சின்ன மகிழ்ச்சிகளுக்கு காரணங்களை தேடி கொண்டிருப்பதில்லை, அவர்களே அதை உருவாக்கி கொள்கிறார்கள்"

அன்புடன்,

வினோத் குமார் வி எஸ்

Friday, January 25, 2013

நான் வாசிக்கும் புத்தகங்கள் : 2013 - 1!




இந்த வருடம் முதல் நான் படிக்கும் புத்தகங்களை நண்பர்களுடன் பகிரலாம் என முடிவெடுத்துள்ளேன். இந்த சிறு முயற்சி நண்பர்களுக்கு புத்தகங்களை பற்றிய ஒரு அறிமுகமாகவும், வாசிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்ளவும்  உதவும் என நம்புகிறேன். இந்த வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு ஐம்பது புத்தகங்களையாவது படித்த விட வேண்டும் என முடிவெடுத்து உள்ளேன், பார்க்கலாம்!    
 
சமீபத்தில் மறைந்த டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் எண்ணங்கள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து உள்ளேன், மிக சிறிய புத்தகம். நான் சந்தித்த பல சுயமுன்னேற்ற பயிற்சியாளர்கள் தங்களை டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் சீடன் என பெருமையாக அறிமுகப்படுத்தி கொள்வதை எண்ணி வியந்திருக்கிறேன்.  

புத்தகத்தின் பெயர் : எண்ணங்கள்
ஆசிரியர் பெயர்:  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பாளர்: கங்கை புத்தக நிலையம்
விலை: 35/-  
பக்கங்கள்: 167

முடிந்தால் நீங்களும் வாசிக்க தொடங்கி விடுங்கள்.

அடுத்து படிக்க இருப்பது : 
அறிந்ததினின்றும் விடுதுலை, ஜே. கிருஷ்ணமூர்த்தி. 

விரைவில் சந்திப்போம்.  

Monday, January 14, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 9: தைத்திருநாளும், சில வரிகளும்!

முடிந்தால் சிந்தியுங்கள் - தைத்திருநாளும், சில வரிகளும்! 

மனித நாகரிகத்தின் முதல் விதை, மனித சமூகம் மற்றும் அனைத்து தொழில்களையும் தனது கருவறையில் சுமந்து, பெற்று, வளர்த்தெடுத்த தாய், விவசாயம்!

தாயின் துணை கொண்டு மனித சமூகத்தை வளர்த்தெடுக்கவும், பாதுகாக்கவும் தன்னையே அர்பணித்த "தாயின் தவப்புதல்வன்", விவசாயி! 

நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது. ஆனால் வெளியில் சொல்ல தான் வாய் கூசுகிறது. மாபெரும் விந்தை!

என் தாயிற்கும், என் பாதுகாவலனுக்கும் என் நாகரிகத்தை கொண்டு நான் அளித்த பரிசு என்ன தெரியுமா?

மரபணு மாற்ற விதைகள், ரசாயன உரங்கள், பாசன நீர் தட்டுப்பாடு, பல்லுயிர் சூழலை கெடுத்து மலடாக்க பட்ட விளை நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கும் விளை நிலங்கள், விலை பொருட்களுக்கு அடிமட்ட விலை நிர்ணயம், பசி, பட்டினி, அடைக்க முடியா கடன்கள், நகரத்தை நோக்கிய வாழ்வாதார தேடல்கள், வாழ்வாதரதிர்க்காக பிற தொழிலின் கூலிகளாக மாற்றப்படுதல்,  இறுதியாக தற்கொலைகள், இல்லை இல்லை, சமூக கொலைகள். வெட்கக்கேடு!

அதோடு நின்று விட்டோமா?

அவ்வளவு நல்லவர்களா நாம்! படிக்காதவனின் தொழில், அடித்தட்டு மக்களின் தொழில், மதிப்பில்லா தொழில்; இது தானே அவர்களை பற்றிய சமூகத்தின் பார்வை. உண்மை தான், சமூகம் நிச்சயமாகவே கோமாளிகளின் கூட்டமைப்பு தான்!

பல லட்சம் ஆண்டுகளாக நீண்ட, நெடியதொரு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் மனித சமூகம், அந்த பயணத்தின் முடிவின் காரணி என்னவாக இருக்க முடியும்?

தனி மனித மனசாட்சிகளால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சமூகத்தின் மனசாட்சிகளுக்கு ஆணித்தரமாகவே அது தெரியும். விவசாய புறக்கணிப்பு, விவசாயிகள் அழிப்பு!

மிக கொடூர எதிரியோ, வேற்று கிரக வாசிகளோ, கொலைக்கார ஆயுதங்களோ தேவைப்படாது. மாபெரும் உணவு பஞ்சமும் , நஞ்சாகி போன உணவு பொருட்களையும் கொண்டு மனித இனமே தன்னை அழித்து கொள்ளும். வேடிக்கை!

முடிந்தால் விவசாயத்தையும், விவசாயிகளையும் அரவணைக்கவும், ஆதரிக்கவும், வளர்த்தெடுக்கவும் தொடங்குவோம். இல்லையேல் மனித சமூகத்தின் கடைசி நாட்களுக்காக நம்மை ஆயுத்தப்படுத்தி கொள்வோம்!

தைத்திருநாள் வாழ்த்துக்களை இப்பொழுதாவது சொல்லி விட தான் மனம் நினைக்கிறது, என்ன செய்ய அதை சொல்ல விடமால் மனசாட்சி தடுக்கிறது!

முடிந்தால் சிந்தியுங்கள்!

Tuesday, January 1, 2013

தனி மனித சுதந்திரம்!

தனி மனித சுதந்திரம் என்பது "தான் சமூகத்தின் ஒரு அங்கம்" என்ற பொறுப்புணர்வோடு புரிந்து கொள்ளப்பட வேண்டும்; சக மனிதர்கள், சமூகம், இயற்கை போன்றவற்றின் மீதான விளைவுகளை புறந்தள்ளி விட்டு தான்றோன்றி தனமாக செயல்படுவதற்கு பெயர் தனி மனித சுதந்திரமாக இருக்க முடியாது அதை காட்டுமிராண்டித்தனம் அல்லது சுயநலம் என்று வேண்டுமானால் அடையாள படுத்தி கொள்ளலாம்.     

Monday, December 24, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 8!

குற்றமும் தண்டனையும் 

உலகில் நடைபெறும் அனைத்து குற்றங்களும் ஒரே காரணத்திற்காகவோ, நோக்கத்திற்காகவோ செய்ய படுபவை அல்ல, இதை புரிந்து  கொள்ளவே  தயாராய் இல்லாத வரை அவற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவோ, அல்லது குற்றங்களை தடுத்து நிறுத்தவோ முடியும் என்று நினைப்பது சிறு பிள்ளைத்தனம். 

தவறுகளுக்கான தண்டனைகளை பற்றி பேசுவதில் நாம் காட்டும் ஈடுபாடு அவை நடை பெறாமல் இருக்கவும் , நடை பெரும் பட்சத்தில் நம்மை தற்காத்து கொள்ளவும்  செய்ய வேண்டியவனைவற்றை பற்றி பேசுவதில் இல்லை , பிறகொரு குற்றம் நடக்கையில் திரும்ப கொடி பிடிக்க தொடங்கி விடுகிறோம் - இந்த மன நிலையை வைத்து கொண்டு  நாம் எதை தான் சாதித்து விட முடியும்? 

குற்றங்கள் வானத்தில் இருந்து நேராக  மனித மனங்களில் டௌன்லோட் செய்ய படுவதாக கற்பனை செய்வதை சற்று மறு பரிசிலனை செய்வோம், அவை கண்டிப்பாக நோய் பிடித்த ஒரு  சமூகத்தின் மூலம் மனித மனங்களில் பரவிய தொற்று நோயாக  தான் இருக்க முடியும், மன நோய்கள் மூலம் செய்ய படும் குற்றங்களுக்கும், சமூகத்திற்கு ஒரு மிக பெரிய  பங்கு இருப்பதை எந்த மன நல மருத்துவராலும்  மறுத்து விட முடியாது.  தனி மனித ஒழுக்கம் தொடங்கி அரசியல் சாசனம் வரை பரவி இருக்கும் நோய் கிருமிகளை  மேலும் வளராமல் நிறுத்தி வைக்கவும் , ஒட்டு மொத்தமாக அழிக்கவும், மீண்டும் பாதிக்காமல்  தடுக்கவும் வேண்டியவற்றை  செய்ய வேண்டிய கட்டாயம்  மனிதம் பற்றி சிந்திக்க தயாராய் உள்ள ஒவ்வொருவருக்கும்  உள்ளது. நோயற்ற சமூகத்தில் வலி நிவாரணிகள்  வழகொழிந்து போகும் என்பது நிதர்சனம். விதைக்காமல், விளைவதை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை, தனி மனிதர்களாகவும், சமூகமாகவும் நல் விதைகளை முதலில் விதைத்து  விட்டு நல்லதொரு சமூக மாற்றத்திற்காக காத்திருக்க தொடங்குவோம்!    

தண்டனைகள் வலி நிவாரணிகள் மட்டுமே நோய்க்கான  காரணங்களையும் அவை  ஏற்படாமல் தற்காத்து கொள்வதை பற்றியும் சிறிது பேசி வைப்போம்!  

முடிந்தால் சிந்தியுங்கள்!     

Friday, November 30, 2012

வெற்றிக்கான ஒற்றை குறுக்கு வழி!

வலிகள் சில நேரங்களில் உந்துதலையும், பல நேரங்களில் வேதனையையும், பின்னடைவையும் ஏற்படுத்துகின்றன. எவன் ஒருவன் வலிகளை  தேடி போய் அதனூடே உள்ள உந்துதலை மட்டும் உறிஞ்ச  பழகி கொண்டானோ அவனே "வெற்றிக்கான ஒற்றை குறுக்கு வழியை" கண்டு கொண்டவன் ஆகிறான். 

அனுபவ பாடம் - 2!


இயந்தரமயமாகி  விட்ட வாழ்கை பயணத்தில் சிந்தனைக்கான சாத்தியகூறுகள் அழித்து ஒழிக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், அறிவியல், அரசியல் போன்ற பொருள் சார்ந்த சிந்தனைகள் மனித உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று பணத்திற்காகவும், பெட்ரோலுக்காகவும் ஓடும் வாடகை வண்டி போல பொருளாதரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் ஓடும் மனித இயந்திரங்களை உருவாக்கி வருகின்றது.

 மனிதம் பட்டு போய் விடாமல் தழைக்க பொருள் சார்ந்த சிந்தனைகளுக்கு வேக தடைகள் அவசியமாகின்றன. என் அனுபவத்தில் நீண்ட தனிமை பயணங்கள் ஒரு மிக சிறந்த வேக தடையாக செயல்படுகின்றதுசில மணி நேர பேருந்து, ரயில் பயணங்களில் சிந்தனைகள் சிறிய விதைகளாக விதைக்கப்பட்டு, துளிர் விட்டு விருட்சமாகி விடுகின்றன, அதை போன்று உருவான சிந்தனை  விருட்சங்கள் என் வாழ்கை பயணத்தை பலவாறு மாற்றி அமைத்து உள்ளது.

வாழ்கை பயணத்தை செம்மையாகவும், ருசிகரமானதாகவும் அமைத்து கொள்ள பயணங்கள் அவசியமாகின்றன. வேக தடைகள் தானாக உருவாவதற்காக காத்திருக்காமல் வாய்ப்பு கிடைக்கும் போது உருவாக்கி கொள்ளுங்கள், நீண்ட தனிமை  பயணங்களாக.

உங்கள் அனுபவம் கூறும் வேக தடைகளையும் தெரியபடுத்துங்கள்.


Wednesday, November 21, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 7



தண்டனை என்பது சட்டபூர்வமாக பழிக்கு பழி வாங்கும் படலம் மட்டுமே என புரிந்து கொள்பவர்களுக்கு கசாப்பின் தூக்கு நியாயமான ஒன்றாய் தான் இருக்க முடியும்! கசாப்பின் தூக்கு நம் பழி வாங்கும் உணர்வுகளுக்கும், அரசியல்வாதிகளின் வாக்கு வங்கிகளுக்கும் வேண்டுமானால் நியாயம் செய்யுமே  தவிர  தீவிரவதத்தையோ, வன்முறையையோ குறைக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஏமாளியாகவே வைத்திருக்க செய்யப்படும்  பூச்சிக்காட்டல் மட்டுமே.   

மரண தண்டனைக்கு எதிரான நிலை என்பது மனிதத்திற்கு ஆதரவான நிலை தானே தவிர மரண தண்டனை குற்றவாளிக்கு ஆதரவான நிலை இல்லை. சட்டபடி குற்றமான ஒன்றை சட்டமே செய்யும் போது குற்றமில்லை என்ற அபத்தத்தின் சிறந்த உதாரணம் மரண தண்டனை! 

மரண தண்டனைகளை ஒழிப்போம், மனிதனாக முயற்சிப்போம்.  

முடிந்தால் சிந்தியுங்கள்! 

Tuesday, November 6, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 6!



அறிவியல் வளர்ச்சி என்பது  என்ன ?

மக்களின் அடிப்படை தேவைகளுக்கான கண்டுபிடிப்புகள், சமகால பிரச்சனைகளுக்கான தீர்வுகள், இயற்கைக்கும் , மனிதத்திற்கும்  பக்க விளைவுகள் ஏற்படுத்தாத வகையிலான மாற்று கண்டுபிடிப்புகள் ஆகியவையா அல்லது அறிவியல் தன்னை தானே கண்டுபிடித்து வளர்த்து கொள்வதா? 

அறிவியல் சார்ந்து சிந்திக்க கற்று கொண்டுள்ள அறிவியல் வல்லுனர்களுக்கு  மனிதம் சார்ந்து சிந்திக்க கற்று கொடுக்கப்பட்டுள்ளதா!

வியாபார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறப்பாக செயல்பட தெரிந்த பெரும்பாலான அறிவியல் வல்லுனர்களுக்கு இயற்கைகாகவும் மனிதத்திர்காகவும் சிந்திக்க நேரம் இல்லாமல் போய் விட்டதா?

முடிந்தால் சிந்தியுங்கள்! 

கிருஷ்ணர் பார்பனன், நரகாசுரன் நம் இனத்தவன்!

ஆஹா அடுத்து ஒரு புது பூதம் கிளம்பி தயாரா இருக்கு!

கிருஷ்ணர் பார்பனன், நரகாசுரன் நம் இனத்தவன் - கிருஷ்ணரே இல்லன்னு சொல்ற பலரே இதை பகிர்ந்து கொண்டிருக்கிறது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வளவு தானா உங்க டக்கு! பகுத்தறிவு என்பது இது தான் போல! 

யப்பா சாமிகளா உங்க பார்ப்பன எதிர்ப்பை கொஞ்சமாவது அர்த்தத்தோட செய்யுங்க. கண்மூடி தனமா இப்படி பிரச்சாரம் செஞ்சிங்கனா நீங்கள் பார்பனர்கள் மேல வைக்கிற நியாயமான
குற்றச்சாட்டுக்கள் கூட அநியாயாமா தான் தோனும். சமகால பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காணனும்னு யோசிக்க ஆரம்பிங்க, அத விட்டுட்டு தொட்டதுக்கு எல்லாம் பார்பனன் பார்பனனே பேசிக்கிட்டு திரிஞ்சா இன்னும் ஒரு ஆயிரம் வருஷத்துக்கு இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான்.

# பிராமணம் என்று கூறி கொண்டு தீட்டு பார்பவனும், தலித் என்று சொல்லி கொண்டு அனைத்து பிராமணனையும் தீட்டாக பார்பவனும் எந்த விதத்தில் வேறுபட்டவன்? பிரச்சனை தெரிந்தோ, தெரியாமலோ ஒட்டி கொண்டு இருக்கும் ஜாதியில் இல்லை; பிற அடையாளங்களோடு உள்ளவனிடம் ஒட்டாமல் இருக்கும் மனங்களில் தான் உள்ளது!

Wednesday, October 31, 2012

தமிழக காங்கிரஸின் ராஜதந்திரம் !




அப்போ:

நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம்!

இப்போ:

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் தொடர்பாக தமிழக காங்கிரஸ்  சார்பில் அனுப்ப பட்ட மின்னஞ்சல் செய்தியில் இந்திரா காந்தி என்பதற்கு பதிலாக  இந்திய மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உயிரை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னை சோனியா காந்தி பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது!  

#நாலணா செலவில்லாமல் நாலாயிரம் விளம்பரம் தேடி கொள்கிற தமிழக காங்கிரஸின் ராஜதந்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது!

க க க போ!

என்ன வாழ்கைடா இது!


WTF, HOLY SHIT எல்லாம் "சோ கால்ட் மேட்டு குடியினர்" போகிற போக்கில சொல்லிட்டு போயிடலாம். ஆனா அதையே தமிழுல சொன்னா நாம அயோக்கியன்! 

#என்ன வாழ்கைடா இது!

நீடூழி வாழ்க "So Called ஜனநாயகம்!



இனி அரசியல்வாதிகளின் சொம்பு தூக்கிகள், ஆதிக்க ஜாதியினர், அதிகார வர்கத்தினர், பணம் படைத்தவர்கள் மட்டும் தங்கள் கருத்துகளை சமூக இணையத்தில் பதியலாம். மற்றவர்கள் இங்கே கடையை சாத்தி விட்டு பழையபடி குட்டி சுவத்தையோ, டீ கடை பெஞ்சையோ தேடி கொள்ளுங்கள், இல்லையேல் சுழிய குற்றத்திற்காக கலி தின்று கொண்டிருக்கும் தோழர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சிறப்பு பயிற்சி எடுத்து கொள்ளுங்கள்!


#நீடூழி வாழ்க "So Called ஜனநாயகம்!

நோயும், பேயும்!

செய்தி: விவசாயிகளின் பரிதாப நிலையை போக்கவே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - அன்னை சோனியா ! 

தாய்நாட்டு நோயை போக்குவதற்கு அந்நிய நாட்டு பேயை இறக்குமதி செய்தானாம் ஒருத்தன்! 
இதையும் கேட்டு ஓகோ அப்படின்னு சொல்லி அமைதியா போறவன் உலக மகா கிறுக்கன்! 

http://hillpost.in/2012/10/22/fdi-in-retail-to-benefit-farmers-sonia-gandhi/53116/people/hp_bureau

அட்வைஸ் செய்து வாங்கி கட்டி கொள்ளாமல் இருக்க!

இருபத்தி நாலு மணி நேரமும் டி வி, பாட்டு, படம், பேஸ்புக்னு எதாவது ஒரு போதையிலயே அடிமையாகி கிடக்காதீங்க, அளவோட என்ஜாய் பண்ணுங்க, மத்த பிரச்சனைகளை பத்தியும் தெரிஞ்சிகோங்க அப்படின்னு தெரியாத்தனமா கூட யாருகிட்டயும் சொல்லிடாதீங்க!!  அப்பறம் சாடிஸ்ட், உலகம் தெரியாதவன், ரசனை இல்லாதவன், குறுகிய மனப்பான்மை உடையவன், மன நோயாளி, சைக்கு, புத்தி கேட்டவன், துப்பு கேட்டவன், பொறாமை புடிச்சவன், சுயநலவாதி, மத்தவங்க சந்தோஷத்த கெடுக்கிறவன், கொடுங்கோலன் இன்னும் பல சொல்ல கூடாத வார்த்தைகளில் எல்லாம் வாங்கி கட்டி கொள்ள வேண்டி வரும்
#பார்த்து சூதானமா நடந்துக்கோங்க!

முடிந்தால் சிந்தியுங்கள் - 5!

பார்ப்பனிய எதிர்ப்பு  என்பது "பார்ப்பனிய சிந்தனை" உடையவர்களை எதிர்ப்பதாக புரிந்து கொள்ள பட வேண்டும், அதை விட்டு பிறப்பால் பார்ப்பனனாக உள்ளவர்கள் அனைவரையும் எதிர்ப்பது மீண்டும் ஒரு சமூக அநீதிக்கே வழி வகுக்கும்.


முடிந்தால் சிந்தியுங்கள்!   

Friday, October 26, 2012

அரசியலும் வளர்ச்சியும்!

ஒரு தேரை இரண்டு குதிரைகள் இழுத்து செல்கின்றன, தேரின் இரு சக்கரங்களின் அருகிலும் மக்கள் கூட்டம், ஒரு சமயத்தில் ஒரு சக்கரத்தின் அச்சாணி கழன்று அந்த பக்கம் உட்காந்திருந்த மக்கள் உயிருக்காக மரண ஓலத்தை எழுப்பி கொண்டிருகிறார்கள். இரண்டு குதிரைகளும் மக்களின் மரண ஓலத்தை பொருட்படுத்தாமல் நிற்காமல் தறி கெட்டு ஓடி கொண்டிருகிறது.

இதில் ஒரு குதிரையின் பெயர் வளர்ச்சி, மற்றொன்றின் பெயர் அரசியல், ஒரு பக்கம்      அச்சாணி கழன்ற சக்கரம், மறு பக்கம் அச்சாணி கழலாத சக்கரம் என்பது பொருளாதார ஏற்ற தாழ்வு (இடைவெளி), அச்சாணி கழன்ற பக்கத்தின் உட்கார்ந்திருந்த மக்கள் இந்தியாவின் BPL (Below Poverty Line) என வரையறுக்க படும் வாழ்வதற்கும் வழி தெரியாமல், சாவதற்கும் அனுமதிக்க படாமல் தினம் தினம் மரண ஓலத்துடன் வாழ்கையை சந்திக்கும் அப்பாவிகள்.

#இந்த நிலையை புரிந்து கொள்ளாமல் அரசியல் பற்றியோ, சமுகம் பற்றியோ, வளர்ச்சி பற்றியோ பேசுவது எந்த விதத்திலும் பலன் தராது.

Wednesday, October 24, 2012

வளர்ச்சி!

நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதற்கும் வழி தெரியாமல், சாவதற்கும் அனுமதிக்கபடாமல், விரக்தியுடன், நடை பிணமாக வாழ்வதற்கு பெயர் தான் வளர்ச்சி.

சுயங்கள் !

சுயத்தின் சுயங்கள் சுயமாக ஒழிக்கப்படும் போது, 
உலகத்தின் வளங்கள் வளமாய் வளர்கப்படுகிறது!

மின்னலும், இடியும் !

ஆயிரம்  கோடி கோளாரிருக்க அவையனைத்தை விட்டு இதை மட்டும் நோக்கும் இவன் பொய்யன் என்றாய் -
ஆயிரம் ஆயிரம் நானிருக்க அவனையெல்லாம் விட்டு என்னை மட்டும் நோக்கும் நீ!
உன்னிடம் அதிகம் பேச ஒன்றும் இல்லை, 
ஆயிரம் கோடி ஆண்டு அறியாமை வரலாற்றின் இன்றைய எச்சம் தான்  நீ!

ஆயிரம் கோடி துளி விஷத்துளிகளில் எதன் வீரியம் அதிகம்?   
நீ உட்கொண்டது உனக்கானது, நான் உட்கொண்டது எனக்கானது!
ஆயிரம் கோடி கோளாறில் எதன் பாதிப்பு அதிகம்?
நீ உணர்ந்தவை உனக்கானது, நான் உணர்ந்தவை எனக்கானது! 

மின்னலும், இடியும் ஒன்றாம் - 
ஆனால் அதை பார்ப்பதும் கேட்பதும் ஒட்டமறுக்கிறது!
நான் பார்ப்பது என்னை உந்தி தள்ளுகிறது - 
கேட்பவைகள் என்னுள் புகுந்து கொள்ளு(ல்லு)கிறது,
உந்திய விசைகள் என்னை நடத்துகிறது - 
புகுந்தவை என்னுள் நடக்கிறது,
நான் பார்த்தவைகள் என்னை நடத்தியதை போல -
அவன் அவன் பார்த்தது அவன் அவனை நடத்தினால் போதாதோ? 

#சமூக பிரச்சனைகளை அணுகுதல்!

எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!

அழிவின் மொத்தம் என்றேன் - நாட்டின் பாதுகாப்பு என்றாய்,
மனிதத்தை சிதைக்கும் என்றேன் - அறிவியல் வளர்ச்சி என்றாய்,
எதிர்காலத்தை தொலைப்போம் என்றேன் - பொருளாதார எழுச்சி என்றாய்,
நோயுற்று சாவோம் என்றேன் - மின்விசிறி ஓடவேண்டும் என்றாய்,
எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!

சரியும், தவறும்!

"சரியாக செய்யப்பட்ட தவறை" - சரி என்றும், "தவறாக செய்யப்பட்ட சரியை" - தவறு என்றும் சாதாரண மக்கள் புரிந்து கொள்வது ஒன்றும் அசாதரணமானது அல்ல, அவர்கள் வாழ்வியலோடும், புரிதலோடும் ஐக்கியப்பட்ட ஒன்று இந்த மேலோட்ட நிலை. ஆனால் சமூகத்தை கூர்ந்து நோக்க கூடிய "So Called சமூக போராளிகள்" இதை போன்றதொரு மேலோட்டமான நிலைபாட்டை எடுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

சமூக நீதி!

அனைவருக்கும் சமமான ஒன்றை தான் சமூக நீதி என்று சொல்லி கொள்ள முடியும், பிரபலங்களுக்கும், பணம் படைத்தவருக்கும், பதவியில் இருப்போருக்கும், பலம் கொண்டோர்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை சமன் செய்ய அவசர அவசரமாக வாங்கி தரப்பட்ட (அ)நீதியை சமூக நீதியாக மார்தட்டி கொண்டாடுவது வேடிக்கையாகவே உள்ளது

Wednesday, October 10, 2012

மாற்று அரசியல் !

அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புரிதல் மக்களிடம் அந்நியப்பட்டு போய் விட்டது. அரசியல் மற்றும் சமூகம் இன்றி தனி மனிதனாக யாரும் வாழ்ந்து விட முடியாது என்ற உண்மையை மக்கள் உணர ஆரம்பித்தாலன்றி அரசியல் நிலைபெறாது. கேள்விகளில்லாத விடைகள் அர்த்தமற்றவை, முதலில் கேட்க பழகுவோம், நமக்காக மட்டும் அல்ல, அனைவருக்காகவும், புரிதலை வளர்த்து கொள்வோம், சித்தாந்தங்களை வகுத்து கொள்வோம், தவறுகளை திருத்தி கொள்வோம், பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விவாதிப்போம், மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்போம், அரசியல் மாற்றத்தை மட்டுமே கண்டுணர்ந்த சமூகத்தை மாற்று அரசியலையும் காண செய்வோம்!

Friday, September 28, 2012

அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்!



  • அந்நிய கம்பெனிகளுக்கு அடிமாடுகளாக தன்னையே தாரை வார்த்து விட்டு, குளிர் சாதன அறையில் உட்கார்ந்து நாட்டின் வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படும் தொலை நோக்கு சிந்தனையாளர்களே,
  • வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு அநாதை இல்லத்திற்கு சென்று குத்தாட்டம் போட்டு தங்கள் சமூக பொறுப்புகளை நிறைவேற்றி விட்ட திருப்தியுடன் வெளியே வருகிற சமூக சேவகர்களே,
  • வீட்டை சுத்தமாக வைப்பதற்காக அனைத்து குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பாதுகாப்பாக வெளியே போடுகின்ற இயற்கை ஆர்வலர்களே,
  • பத்திரிகையில் எழுதப்படுகின்ற முதன்மை செய்திகளும், தலையங்கங்களும் மட்டும் தான் அரசியல் என்று நம்பும் அரசியல் வித்தகர்களே,
  • வீட்டில் உள்ள ஜன்னல், கதவு அனைத்தையும் அடைத்து, ஆல் அவுட் போட்டு, கொசு வலைக்குள் புகுந்து கொள்ளும் அசகாய சூரர்களே,
  • "தொழில்நுட்பம் மட்டும் தான் வளர்ச்சி"; என்று அடித்து சொல்லும் அகராதியை தலைமை பாடமாக மனனம் செய்து விட்டு வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களே; அறிவியல் அறிஞர்களே,
  • மக்கள் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை உணர்ந்து கொள்ள மெனக்கெடாமல், மனதில் தோன்றிய சிந்தனைகள் அனைத்தையும், அதிகம் சாப்பிட்டு  வாந்தி எடுக்க துடிக்கும் டாஸ்மாக் குடிகாரன் போல, அதிகம் சிந்தித்ததை அப்பாவி மக்கள் மேல் செயல்படுத்த துடிக்கும் விஞ்ஞானிகளே,
  • பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு விழுந்திருந்தாலே எதோ கூகிள் நியூஸ் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு ஒதுங்கி போற ஈர நெஞ்சுகாரர்களே,
  • தன் வீட்டு ஏ.சி ஓடவில்லை என்றாலும் அதற்கு அணு எதிர்ப்பாளர்களும், அந்நிய சக்திகளும் தான் காரணம் என்ற உண்மையை இம்மி பிசகாமல் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கும் துப்பறியும் சிங்கங்களே,
  • எனக்கென்ன, எனக்கென்ன, எவன் செத்தா எனக்கென்ன, எவன் பொழச்சா எனக்கென்ன என்பதை மனசாட்சியின் காலர் டியுனாக வைத்து இருக்கும் அதி உத்தமர்களே,
  • கடைசியாக, அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் தாங்கள் சந்திக்கும் அனைவரும் தங்களை போலவே ரொம்ப நல்லவர்கள் என்ற நினைப்பில் எடுத்தார் கைப்பிள்ளையாக, சூது வாது தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்பாவிகளே அன்பர்களே,

நீங்கள் எல்லாரும் ஒன்னா  சேர்ந்து, 

"அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்"

"மின்சாரத்திற்கு எதற்கு சிக்கனம், அணு மின் நிலையம் வேண்டும் இக்கணம்"

" வீட்டிற்கு ஒரு அணு மின் நிலையம் வைப்போம், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் விற்போம் "

போன்ற பல்வேறு அம்ச திட்டங்களை முன் வைத்து, வீதியில் இறங்கி, அரசாங்கத்திடம் போராடி, விஞ்ஞானிகளிடம் மன்றாடி, உங்கள் வீட்டு தோட்டத்தில், மொட்டை மாடியில், கார் பார்க்கிங்கில், பரணையில், கக்கூஸில், விவசாய நிலங்களில், தெரு முனையில் மற்றும் உங்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் அணு உலைகளை நிறுவி அதில் இருந்து தயாராகும் மின்சாரத்தை முழுவதுமாக ஏப்பம் விட்டு கொள்ளுங்கள், உங்களை யாரும் ஒன்றும் கேட்க மாட்டோம், உங்கள் போராட்த்தின் வெற்றிக்காக, நாங்களும், உங்களின் தோளோடு தோள் நின்று, இறுதி வரை போராடுகிறோம். 

ஜெய் ஹிந்த்!

பின் குறிப்பு: பக்கத்து இலைக்கு பாயசம் ஊத்த சொன்னா பரவாயில்ல பாஸ், பாய்சன் இல்ல ஊத்த சொல்றீங்க, கொஞ்சம் யோசிங்க அடுத்து உங்க இலை தான்! 


Sunday, September 23, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 4


உங்கள் விருப்பம், சமூக நோய்களுக்கு வலி நிவாரணிகளை தயார் செய்வது என்றால் சமூக தொண்டாற்றுங்கள், அதை முற்றிலுமாக குணமாக்குவது என்றால் அரசியலில் இணையுங்கள். "Politics is the last refugee of the scoundrels" "அயோக்கியர்களின் இறுதி அடைக்கலம் அரசியல்" என்று அரசியலை ஒதுக்கி வைத்து பார்ப்பது அடிமாடுகளாக வாழ்வதை போன்றது. 

பட்ட மரங்களாக, பல நூறு ஆண்டுகள் மண்ணில் நின்று கொண்டிருப்பதை விட, வீரியமிக்க இளம் விதைகளாக மண்ணிற்குள் புதைக்கபடுவது உத்தமம். 

முடிந்தால் சிந்தியுங்கள்! 

Tuesday, September 18, 2012

நீயும் என் எதிரியே!

நீ கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை என்றால், நீயும் என் எதிரியே!

#சமூகத்தின் இன்றைய நிலை!